தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாஜிக் மந்த்ரா! (8)

மாஜிக் மந்த்ரா! (8)

மாஜிக் மந்த்ரா! (8)


PUBLISHED ON : டிச 20, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 20, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: மந்த்ராவின் மந்திரம் தப்புத்தப்பாக வேலை செய்தது. இனி-

''எழுந்திருங்கள் பெண்களே, எழுந்திருங்கள். பந்தின் நினைவில்லையா உங்களுக்கு?''

மந்த்ராவின் மந்திர வேண்டுகோள் மாணவிகளிடம் வேலை செய்யவில்லை. விபரீதமாக பந்திடம் வேலை செய்தது. குவியலாக விழுந்து கிடந்த மாணவி களுக்கு இடையே கிடந்த ஹாக்கி பந்து திடீரென பூதாகாரமாக, பிரமாண்டமான உலக உருண்டையாக வளரலாயிற்று. அந்தப் பெரிய மாயப்பந்தில் தொற்றிக் கொண்டு தொங்கினர் மாணவிகள். மந்த்ராவின் மந்திரம் அவர்களை உறக்கத்தி லிருந்து விழிப்படையச் செய்திருந்தது.

தாங்கள் சரிவான பகுதியில் தொங்கியபடி ஊசலாடுவதை உணர்ந்து, ''ஆபத்து... ஆபத்து... காப்பாற்றுங்கள்!'' என்று கத்தினர்.

பத்மா டீச்சர் விழிகள் நிலைக்குத்தி நிற்க திறந்த வாய் மூடாமல் பிரமித்துப் போய் நின்றார். மந்த்ராவின் நிலையையோ கேட்கவே வேண்டாம். தன் மாஜிக் எல்லாம் ஏன் இப்படி தப்புத் தப்பாய் பலிக்கிறது என்று குழம்பிய வளின் வாய், ''தாத்தா, தாத்தா காப்பாற்றுங்கள்!'' என்று முணுமுணுத்தது.

மந்த்ராவின் வேண்டுகோளைக் கேட்டுக் கருப்புப் பூனை, தன் வாலை உயர்த்திக் கொண்டு மைதானத்துக்கு வந்தது. அதன் பார்வை பிரமாண்டமான பந்தின் மீது பதியவே, அற்புதம் நிகழ்ந்தது. பந்து மள மள வென்று சுருங்கி, சின்னஞ் சிறியதாக மைதானத் தில் கிடந்தது. அந்த ஹாக்கிப் பந்தைச் சுற்றி மாணவிகள் தலை 'கிர்' அடிக்க விழுந்து கிடந்தனர். மந்த்ரா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

''ரொம்ப நன்றி தாத்தா! சமயத்தில் வந்து காப்பாத் தினீங்க. இவர்களுக்கு நடந்தது ஏதும் நினைவில்லாமல் மறக் கடிங்க. தொடர்ந்து விளையாடட்டும்...'' என்றாள் தாத்தாவிடம்.

''இனி விளையாட்டில்லை!'' என்றது பூனை.

''மழை வரப்போகிறது. உன் மந்திரமும், என் மந்திரமும் காற்றைக் கோபம் கொள்ள செய்து விட்டன. அது மழை மேகங்களை விரட்டிக் கொண்டு வருகிறது பார்!'' என்றார் தாத்தா.

கருமேகங்கள் கோபத்துடன் உருண்டு புரண்டபடி வர, மழை 'சோ' என்று விசிறி அடித்துப் பெய்தது. மாணவிகள் மைதானத்தி லிருந்து விளையாட்டுக் கூடத்துக்குள் ஓடினர்.

''ஹாக்கி விளையாட்டு இன்று போதும், மீதி நேரத்தை அவரவர் விருப்பமான விளையாட்டுகளில் ஈடுபட்டு இங்கே கழிக்கலாம்!'' என்று கூறி தன் அறைக்கு போனார் பத்மா டீச்சர்.

மாணவிகள் கோஷ்டி கோஷ்டியாக, பல்வேறு விளையாட்டுக்களில் ஈடுபட்டனர். மந்த்ரா செஸ்போர்டின் முன்னே உட்கார்ந்திருந்தாள் தனிமையாக இல்லை தன் (தாத்தா) பூனையுடன்.

''சண்டை சச்சரவு இல்லாத அமைதியான கேம் இந்த செஸ் விளையாட்டு!'' என்றார் தாத்தா.

''அது சரிதான் தாத்தா... ஆனால், திறந்த வெளியில் போய் ஓடியாடி விளையாடவே தனக்கு விருப்பம்,'' என்ற மந்த்ரா வெளியில் மழை நிற்காததை பார்த்து, ''தாத்தா மழையை நிறுத்த மறந்துட்டீங்களா?'' என்று கேட்டாள்.

மந்த்ரா வார்த்தையை கேட்ட தாத்தா திடுக் கிட்டு, ''மழை நிற்க அப்பவே மந்திரம் போட்டு விட்டேனே! இன்னுமா நிற்கவில்லை? உன்னைப் போல நானும் அரை குறையா? சரி, சரி, ஒரே வெள்ளக் காடாயிட்டுது. மழையை நிறுத்துவதோடு, இந்த மழையினால் தேங்கி யிருக்கும் வெள்ள நீரையும் அப்புறப்படுத்தியாகணும்!'' என்று பரபரத்தார்.

''எல்லா நீரையும் அப்புறப்படுத்திடாதீங்க தாத்தா. அதோ அங்கே அந்தக் குட்டை நிறைந்திருக்கு. அது அப்படியே இருக்கட்டும். நீச்சலடித்துக் குளித்து எத்தனை நாளாச்சு. நம் ஊரில் தினம் மூணு வேளை குளிப்பேன்!'' என்று நிரம்பி வழியும் குட்டையை நோக்கி நடந்தாள் மந்த்ரா.

''நீச்சல் உடை இல்லே. ஆனால் என்ன? நான் என் மாஜிக்கினால் ஒரு நீச்சல் உடையை புது மாதிரியாக உருவாக்கிடறேன். என் மாதிரி உடையைப் பார்த்து மற்றவர்கள் காப்பி அடிக் கட்டும்!'' என்று கூறியபடி குட்டையின் கரையில் உட்கார்ந்து நீச்சலுடைக்கு மந்திரம் ஜெபிக்க லானாள் மந்த்ரா.

அவள் அணிந்திருந்த உடை மறைந்து, நீச்சலுடையில் இருந்தாள் மந்த்ரா. எப்படிப் பட்ட நீச்சலுடை தெரியுமா?

மந்த்ரா மீனழகியாக மெர்மைட்டாக மாறி இருந்தாள். அவள் இடுப்புக்கு கீழே மீன் உடல். கால்களைக் காணோம்!

''ஐயோ தாத்தா, நான் மீனாக மாறி விட்டேன்!'' என்று அலறினாள் மந்த்ரா.

பேத்தியின் பக்கம் திரும்பினார். குட்டையின் கரையில் பாதி மந்த்ரா வாகவும், பாதி மீனாகவும் உள்ள அவள் அருகில் போனார்.

''மந்திரம் சொல்லும் போது மனதில் வேறு எண்ணங்கள் ஏதும் இருக்கக் கூடாது. நிர்மலமாக இருக்க வேண்டும். நீ மீனழகி மெர்மைட் கதையை நினைத்துக் கொண்டிருப்பாய். அதுதான் பாதி உடல் மீனாகி விட்டது!'' என்று கூறி தம் மந்திரத்தினால் அவளை முழு மந்த்ரா குட்டியாக மாற்றினார் தாத்தா.

''உன்னோடு சுற்றிக் கொண்டிருப்பதினால் எனக்கு ஓய்வே இல்லை,'' என்று தன் பூனை வாயை அகலத் திறந்து கொட்டாவி விட்டார் கேசவன் குட்டி.

''ஒழுங்காகப் போய் பாடங்களைப் படி... மாஜிக் வேலைகளையெல்லாம் மறந்துவிட்டு. நான் கொஞ்சம் தூங்கப் போகிறேன். என் தூக்கத்தை கலைத்து என்னைக் கூப்பிடாதே!'' என்று கூறியபடி, ஒரு குட்டி மரத்தின் கிளைக்குத் தாவி, அப்படியே ஒரு பெரிய மரத்துக்குப் போய், அதன் கிளைகளின் வழியே பள்ளியின் பிரார்த்தனைக் கூடத்துக்குள் புகுந்தார். தொந்தரவு இல்லாமல் தூங்குவதற்கு ஏற்ற இடம்தான் அது!

மந்த்ரா பள்ளியின் வாசக சாலையை நோக்கிப் போனாள்.

'லைப்ரரியில் நிறையப் புத்தகங் களைப் பார்த்தேன். ஆனால், அங்கு யாருமே போக மாட்டார்கள் போலிருக்கு. அங்கு மாஜிக் புத்தகங் கள் இருந்தால் புரட்டலாம். பொழுது பயனுள்ளதாக இருக்கும்' என்ற முடிவோடு லைப்ரரிக்குள் நுழைந்தாள் மந்த்ரா.

வரிசை வரிசையாக நின்ற ஷெல்புகளில் புத்தகங்கள் இருந்தன. வாசக சாலைக்குள் லைப்ரேரியனைத் தவிர வேறு யாருமே இல்லை.

மேஜை மீது கும்பல் கும்பலாக அடுக்கப் பட்டிருந்த புத்தகங்களுக்கு இடையே குனிந்த படி எழுதிக் கொண்டிருந்த லைப்ரேரியன், சத்தம் கேட்டுத் தலை நிமிர்ந்தார். மூக்கின் நுனிக்கு சரிந்திருந்த கண்ணாடியைத் தன் இடது கைக் கட்டை விரலினால் மேலே தள்ளியபடி மந்த்ராவை ஓரக் கண்ணால் பார்த்தார். மந்த்ரா புன்னகைத்தபடி விஷ் பண்ணினாள். அதை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக ஒரு 'உம்' கொட்டிவிட்டு, மீண்டும் குனிந்து எழுதலானார்.

மந்த்ரா புத்தக வரிசைகளைப் பார்த்துக் கொண்டே ஜன்னல் அருகே உள்ள மேஜையின் அருகே போனாள். அவள் அதிர்ஷ்டம் அந்த மேஜையின் அருகே இருந்த புத்தக ராக்கில் அவள் பார்க்க விரும்பிய மந்திர, தந்திர, மாயாஜாலப் புத்தகங்கள் இருந்தன!

வெறுங்கைகளில் மிட்டாய்களையும், பொம்மைகளையும் வரவழைத்தல், நீரில் நடத்தல், அந்தரத்தில் ஆதாரம் ஏதுமின்றி நிற்பது, மாங்கொட்டையைக் கூடையினால் மூடித் திறந்து குலுங்கப் பழுத்து நிற்கும் குட்டி மாங்கன்றை வரவழைத்தல் இப்படி ஏராளமான மந்திர தந்திரங்களை விளக்கும் புத்தகங்கள். பழங்காலத்து ஓலைச் சுவடிகளிலிருந்து மாந்திரீகங்களை ஆராய்ச்சி செய்து விளக்கிக் கூறும் நூல்கள். மந்த்ரா அந்தப் புத்தகங்களை எல்லாம் ஆவலோடு படிக்கலானாள். இதே வேளையில்...

மங்காத்தாவும், அவள் வலது கையாக விளங்கும் வடிவு என்னும் வடிவுக்கரசியும் ஒரு திட்டம் வகுத்துக் கொண்டிருந்தனர். வடிவு ஒரு பெண்பகாசுரன். அதாவது பகாசுரி! எவ்வளவு சாப்பிட்டாலும் வடிவுக்கு பசி அடங்காது; திருப்திப் படாது. பள்ளிக் கூட ஹாஸ்டலில் தரப்படும் உணவு அவளுக்குப் போதவே போதாது. மற்ற மாணவிகளின் உணவில் கை வைத்தால்தான்,கொஞ்சமாவது பசி அடங்கும்.

ஆகவே, பள்ளிக்கு வெளியே போய், வயிறார ஒரு பிடி பிடித்துவிட்டு வர வேண்டும் என்று வெகுநாளாக ஆசை வடிவுக்கு. ஆனால், பள்ளி மாணவிகள் வெளியே போய் சாப்பிடு வதற்கு அனுமதி கிடையாது. ஆகவே, மங்காத் தாவின் உதவி கேட்டு நச்சரித்து வந்தாள் வடிவு. மங்காத்தாவுக்கும் ஹாஸ்டல் சாப்பாடு அலுத்துப் போயிருந்ததினால், இருவரும் அன்று ரகசியமாக வெளியே போவதென்று முடிவு செய்தனர்.

- மாஜிக் தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us