PUBLISHED ON : டிச 20, 2013

ஒரு பணக்காரருக்கு சில பெண் குழந்தைகள் இருந்தனர். அந்தக் குழந்தைகளை அவர் வெளியில் அனுப்பவே மாட்டார். வீட்டுக்குள்ளேயே அடைத்து வைப்பார். ஆண் குழந்தைகளுடன் அவர்கள் பேசக் கூடாது; சேர்ந்து விளையாடக் கூடாது என்பது அவரது கண்டிப்பான உத்தரவு!
அந்தப் பணக்காரர் வீட்டுக்கு எதிரில் சமீபத்தில் ஒரு வீடு குடியேறியது. அந்த வீட்டில் ஒரு சில பையன்கள் இருந்தனர். அதில் ஒரு பையனுக்கு அந்தப் பணக்காரருடைய போக்குபிடிக்கவில்லை.
ஒருநாள் அந்தப் பணக்காரரிடத்திலே இதைக் கூறி விட்டான். உடனே அவருக்குக் கோபம் வந்து விட்டது.
''நான் அப்படித்தான் செய்வேன். எங்கே எந்த பயலாவது என் பெண்கள் இருக்கும் இடத்திற்குப் போய் விடட்டும், பார்க்கலாம்,'' என்று வீராப்பாகப் பேசினார்.
''ப்பூ, என்ன பிரமாதம்! நானே போய்க் காட்டுகிறேன்,'' என்று சிரித்துக் கொண்டே சொன்னான் அந்தப் பையன். அவன் ஏதோ விளையாட்டாகச் சொல்கிறான் என்றே பணக்காரர் நினைத்தார். ஆனால், அவன் அதை காரியத்திலே காட்டிவிட்டான்.
ஒருநாள் மாலை நேரம், அந்தப் பையன் ஒரு சிறுமியைப் போல் அழகாக வேஷம் போட்டுக் கொண்டான். வேஷம் அவனுக்கு மிக மிகப் பொருத்தமாக இருந்தது. யாராலும் அவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அந்த வேஷத்துடன் அவன் பணக்காரர் வீட்டுக்கு போனான். பணக்காரரின் முன்னே போய் நின்றான்.
''ஐயா, நான் பக்கத்து ஊர்க்காரி. இந்த ஊர்ச் சந்தைக்கு வந்தேன். என் கூட வந்தவர்கள், என்னைத் தனியாக விட்டு விட்டுப் போய்விட்டனர். இருட்டிப் போனதால் ஊருக்குப் போக பயமாயிருக்கிறது. இன்றிரவு மட்டும் இங்கே தங்குவதற்கு இடம் கொடுப்பீர்களா?'' என்று தயவாய்க் கேட்டான்.
பணக்காரரின் மனம் உடனே இளகிவிட்டது.
''சரி, வா!'' என்று பெண் வேஷத்திலிருந்த அந்தப் பையனை அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த அவருடைய பெண் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பணக்காரருடைய பெண்களும் அவனை ஒரு பெண் என்றே நம்பி விட்டனர். அவனிடம் அன்பாகப் பேசினர். தின்பதற்கு பலகாரங்கள் கொடுத்தனர். அவனுடன் சேர்ந்து விளையாடினர். மூன்று மணி நேரம் இப்படி ஓடி விட்டது.
அப்போது,''தம்பி! தம்பி!'' என்ற குரல் தெருவிலிருந்து வந்தது. அந்தக் குரலைக் கேட்டதும், பெண் வேஷத்திலிருந்த அந்தப் பையன், ''அண்ணா, இதோ வந்துவிட்டேன்!'' என்று கூறிக்கொண்டே எழுந்தான். தன்னைத் தேடிக்கொண்டு வந்த அண்ணன் வாசலில் நிற்பதைக் கண்டான். உடனே வாசலை நோக்கி ஓடினான். அப்போதுதான் எல்லாருக்கும் உண்மை தெரிந்தது. அவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அன்றுமுதல், அந்தப் பணக்காரர் பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைப்பதே இல்லை.
அன்று மாறுவேஷம் போட்டு பணக்காரரின் மனதை மாற்றிய அந்தப் பையனின் பெயர் 'கதாதரன்.' இவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?
விடை: பணக்காரரின் மனதை மாற்றியது இவர்தான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்!
