தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாய மோதிரம் (11) - இருகூர் இளவரசன்

மாய மோதிரம் (11) - இருகூர் இளவரசன்

மாய மோதிரம் (11) - இருகூர் இளவரசன்


PUBLISHED ON : நவ 11, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 11, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: முகுந்தனை வெறிநாய்களை விட்டு கடிக்க வைத்து கொலை செய்ய நினைத்தாள் கிழவி. இனி-

முகுந்தன் தோட்டத்தில் கட்டிப் போடப் பட்டிருக்கிறான் என்கிற செய்தியும், அதோடு வெறி நாய்கள் நான்கினை அவிழ்த்தி விட்டு, அவனைக் கடிக்க வைத்துக் கொல்ல போகின்றனர் என்கிற செய்தியும், வேலை செய்து கொண்டிருக்கும் மற்ற பிள்ளைகளின் காதுகளுக்கு வந்து எட்டியது. இதைத் கேட்ட மணிகண்டனும், கணேசனும் துடியாய்த் துடித்துப் போனார்கள்.

'நமக்கெல்லாம் தைரியம் சொன்ன முகுந்தன் மாட்டிக் கொண்டானே!' என்று மணிகண்டன் வருந்தினான். 'நம்மோடு வந்த முகுந்தன் நாளை காலை நாய்களால் கடித்துச் சாகப் போகிறானே...' என்று நினைக்கையில் கணேசன் மனம் நோக அழுதான்.சோர்வாகவும், மிகச் சாதாரணமாகவும் வேலை செய்து கொண்டிருந்த பிள்ளைகள் வேகமாகச் செய்யத் துவங்கினர்.

முகுந்தனோடு வந்த இருபது சிறுவர்களுக்கும் சவுக்கு அடி கொடுத்தான் கப்பர் சிங். 'எப்படியாவது விடிய, விடிய கஷ்டப்பட்டு பார்சல்களை ஏற்றியிருந்தால் இந்த அடியிலிருந்து மீண்டிருக்கலாம், புதிதாக வந்த ஒரு சிறுவனை நம்பி நமக்கு இப்படிப்பட்ட அடி கிடைத்து விட்டதே...' என நினைத்து வருந்தினான் குமார்.

முகுந்தன் கட்டப்பட்டிருக்கும் இடத்தில் இருள் சூழ்ந்திருந்தது. காற்று சிலுசிலுவென்று வேகமாக அடித்தது. சற்று நேரத்தில் மின்னலும் இடியுமாய் வானம் இயங்கிக் கொண்டிருந்தது. சிறுசிறு துளி பெரும் மழையாகப் பெய்யத் துவங்கியது. முகுந்தன் மழையில் நனைந்தபடி மாய மோதிரத்தின் சக்தியால் பயம் இல்லாமல் நின்றான்.

அங்கிருந்த கிழவிக்கும் மற்ற காவலாளிகளுக்கும் முகுந்தனின் தைரியம், பயப்படாத தன்மை, இவைகள் அனைத்தும் வியப்பாக இருந்தது. சாதாரணமாக மின்னல் மின்னினாலோ, இடி இடித்தாலோ பிள்ளைகள் பயப்படுவர். சிலர் நடுங்கி அழுதே விடுவர். ஆனால், முகுந்தன் வருவது வரட்டும் என்கிற ரீதியில் தைரியத்தோடு நின்றான்.

நள்ளிரவு முடிந்து விடியற்காலை துவங்கியது. வானம் கறுப்புச் சேலையை மாற்றி வெள்ளைச் சேலையை உடுத்திக் கொண்டது போல இருந்தது. மழைவிட்டிருந்தாலும் அதன் ஈரம், குளிர் காற்று, சூரியன் இல்லாத வெளிச்சம் இப்படி மந்தாரமாய் இருந்தது. விடிந்தால் முகுந்தனுக்கு ஆபத்து என்று சிறுவர்கள் முணுமுணுத்துக் கொண்டிருந்தனர்.

கிழவி தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த மொபைல் போனை எடுத்து, குஷ்வந்த் சிங்குடன் தொடர்பு கொண்டாள்.

குஷ்வந்த் சிங் தன் வீட்டுப் படுக்கை அறையில் இருந்தபடி பேசினான்.

''என்னாச்சு?'' கேட்டான்.

''முகுந்தன் சாதாரண ஆள் இல்லை. அவன் இங்கு வந்து ஒரு ராத்தரிக்குள்ள இங்கு நடக்கற விஷயங்களை பூராவையும் தெரிஞ்சுக் கிட்டான். அது மட்டு மல்ல... சில பையன்களை அவன் பக்கம் திருப்பிட்டான். அதனால அவனை விட்டு வெச்சா ஆபத்து தான். நம்ம நாய்களை விட்டு சாவடிக்கப் போறேன். இதை இங்க வேலை செய்யற பையன்கள் பூராவும் பார்க்க ஏற்பாடு பண்ணியிருக்கேன்.'' என்றாள் கிழவி.

''பையன் பலசாலின்னுதான் கொண்டு வந்தேன். நமக்கு சரியா வரலைன்னா என்ன செய்யறது? மத்த பசங்களுக்கு பயம் வர இது ஒரு காரணமா இருக்கும், நீ சொன்ன மாதிரியே செய்,'' என்றான் குஷ்வந்த் சிங்.

தோட்டத்தில் வரிசையாக வைக்கப் பட்டிருக்கும் நான்கு கூண்டுகள். ஒவ்வொரு கூண்டுக்குள்ளும் ஒவ்வொரு நாய்களுக்கு தினமும் ஐந்து கிலோ மாட்டு மாமிசம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதனால் மாமிச வாடை அடித்தாலே ஒரே தாவில் தாவி, தொடையைப் பிடித்துக் கடித்துக் குதறி எடுக்கும்.

நாய்கள் தாவிக்குதிக்காதபடி இருக்கும் காம்பவுண்டுக்கு அந்தப் புறமாய் கிழவியும், மற்ற குழந்தைகளும் பார்வையாளர்களாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மணிகண்டனும், கணேசனும் கண்ணீருடன் வேடிக்கை பார்த்து நின்றனர்.

காவலாளி ஒருவன் முதல் கூண்டைத் திறந்து விட்டான். அதுவரையில் கட்டிப்போட்ட நிலையில் இருந்த முகுந்தன், கண்களை மூடினான்.

''மாயமோதிரமே... என் கட்டுகளை அவிழ்க்கும் பலமும், வருகின்ற நாய்களைத் தூக்கி எறியும் சக்தியும் கொடுப்பாயாக,'' என்று வேண்டிக் கொண்டான்.

நாய்கள் முகுந்தனை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தது. முகுந்தன் பல்லைக்கடித்து கட்டிய கயிறு அறுத்து விழும்படிச் செய்தான். பிறகு நாய் வரும் திசை நோக்கி முகுந்தனும் ஓடினான். நாய் முகுந்தனை நெருங்கித் தாவியது. தாவிய நாயின் இரு முன் கால்களையும் பிடித்து வட்டமாய் சுற்றினான்.

நாயின் உடல் தரையில் படாதபடி நாயைத் தூக்கிச் சுற்றிக் கொண்டே இருந்தான்.

கிழவியும், அடியாட்களும், மணிகண்டனும் கணேசன் மற்ற சிறுவர்களும் முகுந்தன் ஆவேசமாய் நாயைத் தூக்கிச் சுற்றுவதை வாய் பிளந்து பார்த்து நின்றனர்.

கப்பர்சிங் நின்று கொண்டிருக்கும் இடம் நோக்கி அந்த நாயைத் தூக்கி வீசினான். நாய் கப்பர் சிங் மீது விழுந்து எழுந்து கப்பர் சிங்கை கடிக்க ஆரம்பித்தது. சற்றும் எதிர்பாராத கப்பர்சிங் அலறித் துடித்து ஓட முயன்றான். ஆனால், நாய் அவன் மீது பாய்ந்து கண்டபடிக் கடித்துக் குதறியது.

அடுத்த இன்னொரு கூண்டிலிருந்த நாயைத் திறந்து விட்டான் ஒரு காவலாளி.

நாய் முகுந்தனை நோக்கி ஓடி வந்தது.

முகுந்தன் வெறித்தனமாய் நாயை நோக்கி ஓடினான். இம்முறை முகுந்தன் நாயைத் தூக்கி அடித்து விடுவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் கைதட்ட ஆரம்பித்தனர். முகுந்தன் மீது பாய்ந்த நாயை தாவிப் பிடித்து வால் பக்கமாக உள்ள பின் கால்களைப் பிடித்துத் தலைகீழாகத் தூக்கினான் முகுந்தன். நாய் குரைத்துக் குரைத்து கடிக்க முயன்றது.

தினமும் கிலோ கணக்கில் மாட்டின் மாமிசத்தைக் தின்னும் நாய் தூக்க முடியாத கனத்தில் இருந்தது. இவ்வளவு கனமுள்ள நாயை சாதாரண சிறுவன் முகுந்தன் தூக்கிச் சுற்றுவதை வியப்போடு பார்த்தாள் கிழவி.

முகுந்தன் நாயைத் தூக்கி வேறு காவலாளிகள் நிற்கும் இடத்தில் வீசினான். இரண்டு காவலாளிகளின் மீது நாய் விழுந்தது. கீழே விழுந்ந நாய் இரண்டு காவலாளிகளையும் புரட்டிப் புரட்டிப் போட்டது.

மேலும், ஒரு நாய்க் கூண்டைத் திறந்தான் காவலாளி. நாய் முகுந்தனை நோக்கி அதிவேகமாக வந்தது. முகுந்தன் கோபத்தின் உச்சத்தில் விழிகள் சிவக்க ஆவேசமாய் நின்றிருந்தான். நாய் முகுந்தனின் மீது தாவியதும் முகுந்தன் அந்த நாயைக் கட்டிப் பிடித்துப் புரண்டான். தன் வலக்கையால் நாயின் கழுத்தை இருக்கமாகப் பிடித்துக் கொண்டான். எப்படியும் இந்த நாயிடமிருந்தும் தப்பித்துவிடுவான் என்று எண்ணிய காவலாளி, நாய் முகுந்தனின் பிடியில் இருக்கும் சமயத்தில், நான்காவதாக இருந்த ஒரு நாய் கூண்டைத் திறந்து விட்டான். ஏற்கனவே ஒரு நாயுடன் போராடிக் கொண்டிருந்த முகுந்தன் மேற்கொண்டு வரும் இன்னொரு நாயுடன் மோதும் பலத்தையும் மாயமோதிரம் வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். கழுத்தோடு இறுக்கிய நாயை தள்ளி விட்டு, ஓடி வந்த நாய் மீது தாவினான் முகுந்தான்.

கழுத்தை இறுக்கினான். நாயின் கழுத்து எலும்பு முறித்து அந்த இடத்திலேயே நாய் செத்தது.

ஏற்கனவே விழுந்துகிடந்த நாய் முகுந்தனை நோக்கிப் பயந்து பின் வாங்கியது. முகுந்தன் நாயைத் துரத்த முயன்றான். நாய் வேகமாக ஓடி தன் கூண்டுக்குள் சென்று படுத்துக் கொண்டது.

இதுவரையில், பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் சுவர்மீது தாவித்குதித்து முகுந்தனைத் தூக்கிச் சத்தம் போட்டனர். கிழவியின் கண்கள் பெரிதாகி, முகுந்தனைப் பார்க்கவே பரிதாபப் பட்டாள்.

''முகுந்தா... எங்களைக் காப்பாற்று... காப்பாற்று...'' என்று சிறுவர்கள் கத்தினர். லாரிகள் நிற்கும் இடம் நோக்கி முகுந்தன் ஓடினான். எல்லாரும் வந்து இந்து லாரியில் ஏறிக் கொள்ளுங்கள்,'' என்றான். பிள்ளைகள் ஓடி வந்து லாரியில் ஏற ஆரம்பித்தனர்.

''போகக் கூடாது... போனால் அடி கிடைக்கும்'' என்று கத்தினாள் கிழவி.

''மாயமோதிரமே... கிழவி கத்துவது சப்தமாக வெளியே வரக்கூடாது,'' என்றான் முகுந்தன்.

கிழவியின் வாயிலிருந்து வெறும் காற்று மட்டுமே வந்து கொண்டிருந்தது.

காவலாளிகள் இருவர் கேட்டை மூடி சவுக்குடன் நின்றார்கள்.

சிறுவர்களை அடிக்க சவுக்கை உயர்த்தினர்.

''காவலாளிகள் உயர்த்திய கை, கீழே வராமல் அப்படியே இருக்க வேண்டும்,'' என்று மாய மோதிரத்தைக் கேட்டுக் கொண்டான் முகுந்தன். சவுக்கால் அடிக்க காவலாளிகள் ஓங்கிய கை அப்படியே நின்று விட்டது. கிழவியின் வாயிலிருந்து சப்தம் வராமல் காற்று மட்டுமே வந்து கொண்டிருந்தது. சிறுவர்களை லாரியில் ஏற்றிக் கொண்டான் முகுந்தன்.

லாரியின் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டான். லாரியை ஓட்டிப் பழக்கம் இல்லாதவன் முகுந்தன். இப்போது சிறுவர்களை ஏற்றிய லாரியை எப்படி ஓட்டப் போகிறான்?

''மாய மோதிரமே... எங்களை சென்னையில் கொண்டு சென்று சேர்க்க வேண்டியது உன் பொறுப்பு. அனைவரையும் காப்பாற்று,'' என்று வேண்டிக் கொண்டான்.

லாரி ஸ்டார்ட் ஆகி ஓடியது. காவலாளிகள் மூடியிருந்த கேட்டைப் பிய்த்துக் கொண்டு அந்த லாரி சென்றது. ஒரு காடு போன்ற இடம் அது. மண்ரோடுதான் தெரிந்தது. சுற்றும் முற்றும் மரங்கள் சூழ்ந்து கொண்டிருந்தன. முகுந்தனின் கையில் லாரியின் ஸ்டேரிங் இருந்தது. சிறிது தூரம் சென்றதும் மெயின் ரோடு வந்தது. அங்கு சென்னை 260 கிலோமீட்டர் என்கிற போர்டு தெரிந்தது. அம்புக்குறியிட்ட பகுதியில் லாரியை திருப்பினான் முகுந்தன்.

லாரி சென்னையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

கிழவி மடியில் வைத்திருந்த மொபைல் போனில் குஷ்வந்த் சிங்க்கு தகவல் சொல்ல முயன்றாள். வார்த்தை வராமல் காற்றுதான் வந்தது. காவலாளிகள் கைகளைத் தூக்கியபடி, இனி இங்கு இருந்தால் மாட்டிக் கொள்வோம் என, நினைத்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

எதிரே வரும் வாகனங்களை அனுசரித்து லாரி வேகமாய் சென்று கொண்டிருந்தது. வெகு நாட்களாக கொத்தடிமைக் காற்றைச் சுவாசித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்தனர்.

காம்பவுண்டுக்குள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கப்பர் சிங் மெதுவாக எழ முயன் றான். பிறகு, கிழவி மொபைல்போனில் பேச முடியாமல் தவித்துக் கொண்டிருப்பத்தைக் கண்டான். மெதுவாக கிழவியின் அருகில் வந்தான். கிழவி மொபைல் போனை கப்பர் சிங்கிடம் கொடுத்தாள். ஜாடையில் விஷயத்தைச் சொல்லச் சொன்னாள். கப்பர் சிங் மொபைல்போனைக் காதில் வைத்தான்.

''ஹலோ''

''நான் குஷ்வந்த் சிங் பேசறேன் என்னாச்சு? போன் பண்ணிட்டு பேசாமலேயே இருக்கீங்களே?''

''சார்... பாட்டியால பேச முடியலை. அதுக்குக் காரணம் என்னன்னு தெரியலை. ஆனா இங்க நிலைமை ரொம்ப மோசம் ஆயிடிச்சு சார்... அந்த முகுந்தன் இங்க இருந்த நாய்களைக் கொன்னுட்டான். சிறுவர்கள் எல்லாரையும் லாரியில ஏத்திட்டு இங்கிருந்து புறப்பட்டு விட்டான்.'

''லாரியிலயா? லாரியை யாருய்யா ஓட்டுறா?''

''ஒண்ணுமே தெரியலை சார்... நம்ப முடியலை... ஆனா நான் சொல்றதெல்லாம் உண்மை. அவன் லாரியோட ஊர் போய்ச் சேர்ந்தா நாம எல்லாரும் மாட்டுவோம் சார்.''

குஷ்வந்த் சிங் மனம் பட படத்தது.

'அந்த லாரியை வழியில் மடக்கி பிடிக்க வேண்டும். என்ன செய்வது?' யோசித்தான் குஷ்வந்த் சிங்.

- தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us