தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஜிம்பலக்கா ஜீம்! (1)

ஜிம்பலக்கா ஜீம்! (1)

ஜிம்பலக்கா ஜீம்! (1)


PUBLISHED ON : நவ 11, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 11, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சீனாவில் ஒரு முதியவர் இருந்தார். அவருக்கு சங், சிங், சுங் என்ற மூன்று மகன்கள். முதியவர் நீண்ட காலமாக படுக்கையில் இருந்தார். ஒருநாள் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து விட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இனி பிழைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த அந்தக் கிழவர், மகன்களைக் கட்டில் அருகில் அழைத்தார்.

''பிள்ளைகளே, எனது வாழ்க்கை முடியும் வேளை நெருங்கிவிட்டது. இந்த மாதிரி சமயங்களில் சொத்தைப் பிரித்துக் கொடுப்பதைப் பற்றிச் சொல்வதுதான் வழக்கம். ஆனால், உங்களுக்கென்று விட்டுச்செல்ல அப்படி என்ன சொத்து என்னிடம் உள்ளது?

''பிள்ளைகளே, நான் ஒருநாள் ஜமீன்தாரின் வயலில் கூலிக்கு உழுது கொண்டிருந்தபோது பூமியின் கீழிருந்து மூன்று பொருள்கள் வெளிப்பட்டன. அழுக்கேறிய ஒரு பர்ஸ், ஒரு பழைய தொப்பி, மண் படிந்த மாட்டுக் கொம்பு ஒன்று. அவற்றைக் தூக்கி எறிய நான் குனிந்தபோது, யாரோ என் கையைப் பிடித்துத் தடுப்பதுபோலிருந்தது. ஒரு குரலும் கேட்டது, 'இந்த மூன்றையும் வீட்டிற்குக் கொண்டுபோய் புதைத்து விடு. நீ இறக்கும் சமயம் உன் பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு பொருள் கொடு,' என்று அந்தக் குரல் சொன்னது. நான் அந்தக் குப்பை பொருள்களை வீட்டுக்கு எடுத்துவரக் கூச்சப்பட்டேன். வழியில் ஓரிடத்தில் அவற்றைப் பிரித்துப் பார்க்க முயன்றேன். மீண்டும் குரல் கேட்டது. 'அவற்றை ஆராயாதே, உனக்கு வயதாகி விட்டது. அவை உனக்குப் பயன்படாது. அவை உன் மகன்களின் சொத்து; அவர்கள் அனுபவிக்கட்டும்,' என்று அந்தக் குரல் எச்சரித்தது. அந்த மூன்றையும் அப்படியே பூமியில் புதைத்துவிட்டேன். இப்போது நான் படுத்திருக்கும் கட்டிலின் அடியில் உள்ள தரையில்தான் அவை உள்ளன. நான் இறந்த பின் தரையைத் தோண்டி, அவற்றை எடுத்து, ஆளுக்கு ஒன்றாக வைத்துக்கொள்ளுங்கள்,'' என்றார் கிழவர்.

மறுநாள் கிழவர் காலமாகி விட்டார். அவரது இறுதிச் சடங்குகள் முடிந்ததும் பிள்ளைகள் அவரது கட்டிலின் கீழ் தரைப் பகுதியைத் தோண்டினார். அவர் சொன்னபடியே மாட்டுப் கொம்பு, தொப்பி, பர்ஸ் ஆகியவை குப்பையில் கிடந்தன. முதலில் பிள்ளைகள் அவற்றைக் குப்பையில் ஏறிய நினைத்தனர். பிறகு தந்தையை நினைவுபடுத்தும் சின்னங்களாக அவற்றைப் பாதுகாக்க முடிவு செய்தனர்.

சகோதரர்கள் நிலமில்லாததால் நிலையான வருமானம் கிடைக்காமல் கஷ்டப்பட்டனர். ஒருநாள் நடு சகோதரன் சிங் அண்ணனிடம், ''சங் அண்ணா, தலைநகரத்துப் போய் ஏதாவது வேலை செய்தால்தான் நம் கஷ்டம் தீரும். நீங்கள் பெரியவர், அலைய வேண்டாம். தம்பி சுங் சிறியவன், சிரமப்பட வேண்டாம். ஆகவே, நான் தலைநகரத்துப் போய் சம்பாதித்துக் கொண்டு வருகிறேன்,'' என்று கூறிவிட்டு, தலைநகரத்தில் சம்பாதிக்கும் பணத்தைப் போட்டுக் கொண்டுவர, தந்தை மூலம் கிடைத்த பழைய பர்சை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

வெயிலில் நீண்ட தொலைவு நடந்து தலைநகரை அடைந்த சிங்கிற்கு அபாரப் பசி ஏற்பட்டது. பசியோடு வேலை தேடவோ, வேலை செய்யவோ முடியாது என்று உணர்ந்தான். சாலையில் கையேந்தி பவன் சாப்பாட்டுக் கடை ஒன்று தென்பட்டது. அதைச் சென்றடைந்த சிங் தயங்கினான். ஏனெனில் அவனிடம் பணமில்லையே.

'முதலில் சாப்பிட்டு விடலாம். பிறகு பர்சைத் திறந்து பார்த்து விட்டு, 'ஐயையோ, பர்சில் வைத்திருந்த பணத்தைக் காணோமே' என்று அழுது நடிக்கலாம், கடைக்காரன் இரக்கப்பட்டு விட்டுவிடுவான். அவன் அடிக்க வந்தால் அப்படியே ஓடிப்போய் விடலாம்' என்று நினைத்தான்.

அதன்படி சிங், கடைக்காரனிடம் மண்டாரின் சிக்கன் ரைஸ் முதலிய விசேஷமான உணவு வகைகளாகப் பார்த்து வாங்கிச் சாப்பிட்டான். அடி விழுந்தாலும் அதற்கு முன் நல்ல சாப்பாடாகச் சாப்பிடலாம் என்பது அவனது திட்டம். வயிறு புடைக்கச் சாப்பிட்ட பிறகு, ''மொத்தம் எவ்வளவு ஆனது?'' என்று கேட்டபடி சிங் அலட்சியமாக பர்சைத் திறந்தான். விரலை உள்ளேவிட்டுத் துழாவியதும், 'ஐயோ! பணத்தை காணோமாமே! எவனோ திருடிட்டானே! ' என்று கத்த எண்ணியிருந்தான். விரலில் ஏதோ தட்டுப்பட அதை எடுத்துப் பார்த்தான். தகதகவென்று மின்னியது ஒரு தங்கக்காசு! பிரமித்துப்போனான் சிங். அந்தப் பர்சில் ஏதோ மாயம் இருக்கிறது என்று புரிந்துக் கொண்டான். தனது வியப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல், சிங் அந்தக் தங்கக்காசைக் கடைக்காரனிடம் எறிந்தான்.

''மீதியை நீயே வைத்துக் கொள்,'' என்று கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றான். சில்லறைக் காசுகளுக்குப் பதிலாக ஒரு தங்க நாணயமே கிடைத்துவிட்ட ஆனந்த அதிர்ச்சியில் கடைக்காரனுக்கு ஏறத்தாழ மயக்கமே வந்துவிட்டது .

அடுத்து ஒரு சர்பத் கடையில் அதிக விலையுள்ள குல்கந்து சர்பத் வாங்கிக் குடித்தான். இன்னொரு கடையில் விலை உயர்ந்த பன்னீர் புகையிலை வாங்கி வாயில் அடக்கினான். நடைபாதைத் துணிக்கடை ஒன்றில் பட்டுத் துண்டு வாங்கித் தலைப்பாகைபோல் கட்டிக்கொண்டான். அவன் எங்கு எது வாங்கினாலும் தனது கிழிந்த பர்சிலிருந்து தங்கக் காசாகவே எடுத்துக் கொடுத்தான்.

இதையெல்லாம் அரண்மனை ஒற்றன் ஒருவன் கவனித்துக்கொண்டிருந்தான். சிங் சாப்பிட்ட கடையில்தான் அந்த ஒற்றனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தங்கக்காசை வீசியதைப் பார்த்து ஒற்றனுக்கு சந்தேகம் வந்து விட்டது. பரம ஏழைபோல் அழுக்கேறிய கிழிந்த உடை அணிந்தவனிடம் தங்கக்காசு எப்படி வந்தது என ஆச்சரியப்பட்டான். ஆகவே, அவன் சிங்கைப் பின்தொடர்ந்து சென்றான். மற்ற கடைகளிலும் சிங் தங்கக்காசாகவே கொடுத்ததை ஒற்றன் கவனித்தான். எங்கிருந்தோ தங்கக்காசுகளைத் திருடி வந்து இப்படிச் செலவழிக்கிறான் என்று அவனுக்குத் தோன்றியது.

அந்த நாட்டை ஓர் கொடுங்கோல் அரசி ஆட்சி செய்துவந்தாள். ஒற்றன் அரண்மனைக்குத் திரும்பி அரசியை வணங்கினான்.

''மகாராணியாரே! இன்று கடைத்தெருவில் ஒரு பட்டிக்காட்டான் தென்பட்டான். கிழிந்த அழுக்கு ஆடை அணிந்திருந்தான். பழைய பர்ஸ் வைத்திருந்தான். ஆனால், எங்கு சாப்பிட்டாலும் என்ன வாங்கினாலும் தங்கக்காசாகவே பர்சிலிருந்து எடுத்துக்கொடுத்தான். மீதிப் பணம் வேண்டாமென்றும் சொல்லிவிட்டான். ஒரு ஏழைக்கு இது எப்படி சாத்தியமாகும் என்று புரியவில்லை,'' என்றான் ஒற்றன்.

அந்தக் கொடுங்கோல் ராணி காவலர்களை அழைத்து, ''இந்த ஒற்றன் அடையாளம் காட்டும் பட்டிக்காட்டானைப் பிடித்துவாருங்கள்,'' என்று கட்டளையிட்டாள்.

பாவம் சிங்! வாழ்க்கையில் முதல்முறையாக தைரியமாக இஷ்டப்படி விதம் விதமாக உண்டும், பருகியும் களிப்புடன் இருந்தபோது, காவலர்கள் வந்து அவனைக் கைது செய்து அரசியின் முன் கொண்டுவந்து நிறுத்தினர்.

அரசி சிங்கை ஏற இறங்க பார்த்தாள். அவன் பரம ஏழை என்பது அவனுடைய பலகீனமான களையற்ற உடலையும், அழுக்கேறிய உடைகளையும் பார்த்ததுமே தெரிந்தது. அரசி அவனை முறைத்துப் பார்த்தாள்.

''நீ பரம தரித்திரனாகத் தெரிகிறாய். ஆனால், தங்கக்காசாக எடுத்து செலவழிக்கிறாயாமே, எங்கே கொள்ளையடித்தாய்? இன்னும் எவ்வளவு காசு மிச்சம் வைத்திருக்கிறாய்? எங்கே ஒளித்துவைத்திருக்கிறாய்?'' என்று அதட்டலாகக் கேட்டாள்.

சிங்கின் உடல் நடுங்கியது. அந்த அரசி எவ்வளவு கொடியவள் என்பது சுற்றுவட்டாரம் எங்கும் பரவியிருந்தது. சிங்கிற்கும் இது தெரியும்.

''மகாராணியாரே! நான் திருடன் இல்லை. இதோ இந்த பர்சிலேர்ந்து எடுத்துதான் செலவு செஞ்சேன்,'' என்று கூறியபடி பர்சைத் திறந்து காண்பித்தான்.

அந்த அழுக்கான பர்சைப் பார்த்து அரசி அருவருப்பு அடைந்தாள். '' என்னடா உளறுகிறாய்? பார்க்க சகித்தா இந்த பர்சிலா தங்கக்காசு இருந்தது? இப்போது இதில் ஒன்றும் காணோமே,'' என்றாள்.

''மகாராணியாரே! நானும் அப்படித்தான் முதல்ல நினைச்சேன். ஆனா பர்சுக்குள்ள விரலை விட்டா தங்கக்காசு தட்டுப்படுது.'' சொன்னபடியே செய்துகாட்டி விரல்களை பர்சின் உள்ளேயிருந்து எடுத்தபோது விரல்களில் ஒரு தங்க நாணயம் மின்னியது.

அந்தக் கொடுங்கோல் அரசி பேராசைக்காரி சிங்கிடமிருந்து பர்சைப் பிடுங்கிக் கொண்டாள்.

''இந்த பயலை சிறையில் போடுங்கள்,'' என்று காவலர்களுக்கு உத்தரவிட்டாள். அந்த அப்பாவி கிராமத்து இளைஞன் கதறியும், கெஞ்சியும் பயனில்லை. காவலர்கள் அவனைச் சிறையில் அடைத்துவிட்டனர்.

மறுநாள் காலை சங்கும், சுங்கும் தங்கள் நடுசகோதரன் திரும்பி வராதது குறித்துக் கவலைப்பட்டனர். மூத்தவன் சங் தம்பியைத் தேடிவர நகரத்திற்குப் புறப்பட்டான். வெயில் வந்தால் சமாளிக்கத் தொப்பியை எடுத்துக் கொண்டான். தலைநகருக்குப் போகும் வழியில் அவனுக்கு மிகவும் தாகம் எடுத்தது. அப்போது ஒரு சிறு குளம் தென்பட்டது. அதில் இறங்கித் தண்ணீர் குடிக்க நினைத்த அவன், தொப்பி ஈரமாகாமல் இருக்க அதைத் தலையில் அணிந்து கொண்டான். உடனே இதுவரை அவனைப் பிரியாமல் கூடவே வந்த நிழல் காணாமல் போய்விட்டது! கடைசிப் படியை அடைந்தபின் நீர் பரப்பைப் பார்த்தான். அதில் அவனது உடலின் பிரதிபிம்பம் தெரியவில்லை!

(-1 தொடரும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us