PUBLISHED ON : நவ 18, 2011

இதுவரை: சிறுவர்களை கடத்திச் சென்று அடிமைகளாக நடத்தினான் குஷ்வந்த் சிங். அந்த சிறுவர்களுடன் தப்பினான் முகுந்தன். இனி-
தனது படுக்கை அறையில் நின்றவாறு குஷ்வந்த் சிங் யோசித்தான். இத்தனை காலமாய் சிறுவர்களை கடத்திச் சென்று கொத்தடிமைகளாய் வேலைக்குப் பயன்படுத்தி லட்சம் லட்சமாய் சம்பாதித்துக் கொண்டிருந்தான். முகுந்தன் நல்ல பலசாலி என்பதால் லாரிகளில் பெரிய பெரிய பார்சல்களை ஏற்றி விட உதவியாய் இருப்பான் என எண்ணியிருந்தான்.
ஆனால், இதுவரையில் குஷ்வந்த்சிங் இயக்கி வந்த தொழிற்சாலையிலிருந்து யாரும் தப்பித்து வெளியே வந்ததே இல்லை. பெரிய பெரிய ரவுடிகளை பாதுகாப்பு காவலர்களாக வைத்திருந்தான். அதைவிட, மனிதர்களைக் கடித்துக் குதறிக் கொல்லும் நான்கு நாய்களையும் வைத்திருந்தான்.
ஒரு சாதாரண சிறுவன் முகுந்தன். இத்தனை தடை களையும் மீறி நாய்களைக் கொன்று, காவலர்களை அடித்து நொறுக்கி, லாரியில் சிறுவர்களை ஏற்றிக் கொண்டு சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கிறான் என்றால் எப்படி சாத்தியம்?
சாதாரண சிறுவர்களால் இப்படிப்பட்ட காரியத்தைச் செய்ய இயலுமா? ஒருவேளை ஏதேனும் சக்தி அவனிடம் இருக்குமோ? எதுவானாலும் சரி, போலீசில் மாட்டும் முன்பு அந்த லாரியை விபத்துக்கு உள்ளாக்க வேண்டும். மொத்த சிறுவர்களும் செத்தால் கூடத் பரவாயில்லை. பாம் போட்டாவது அவர்கள் அனைவரையும் தீர்த்துக் கட்ட வேண்டும், என்று தீர்மானித்தான் குஷ்வந்த்சிங். உடனே, மொபைல் போனில் சில எண்களைத் தட்டி விட்டு, காதில் வைத்தான்.
மறுமுனையில் லாரி ராஜ மாணிக்கம் என்பவன் பேசினான். அவன் தலைநிறைய முடியும், தாடியும் மூக்கில் ஒரு வளையமும் மாட்டிக் கொண்டு குண்டான உடலமைப்பில் பார்க்கவே பயங்கரமாக இருந்தான்.
''ஹேலோ'' என்றான் லாரி ராஜமணிக்கம்.
''நான் குஷ்வந்த் சிங் பேசறேன்''
''சொல்லுங்க முதலாளி''
''ரொம்ப சீரியஸான மேட்டர்.''
''சீரியஸா?''
''ஆமாம்... இன்னும் கொஞ்ச நேரத்துல நீ, நான் எல்லாரும் போலீஸ்ல மாட்டப் போறோம்.''
''முதலாளி...?''
''சின்னப் பசங்களைக் கடத்தி, அவங்களை கொடுமைப் படுத்தி நாம வேலை வாங்கற விஷயம் அம்பலமாகப் போகுது.''
''கூடாது... அது வெளியே தெரிஞ்சா ஆபத்து. பாதுகாப்போட இருக்கற பசங்க என்ன ஆனாங்க?''
''முகுந்தன்னு ஒரு பையனை. புதுசா கடத்திக் கொண்டு போனேன். அவன் பலசாலி, எல்லாப் பசங்களையும் லாரியில் ஏத்திக்கிட்டு சென்னை நோக்கி வந்துக்கிட்டு இருக்கான். அவன் போலீஸில் சொல்லிட்டா நம் கதை முடிஞ்சிடும்.''
''அவனை சொல்ல விடக்கூடாது.''
''அந்த லாரி சென்னை வராமப் பாத்துக்கணும், விபத்துக்குள்ளாக்கி அத்தனை பேரும் செத்தாக் கூடப் பரவாயில்லை. லாரி ராஜ மாணிக்கம்னு உனக்குப் பேர். லாரியைப் பயன்படுத்தி பல விபத்துக்களை உண்டு பண்ணினவன் நீ... இந்த விஷயத்தை முடிச்சா உனக்கு பத்து லட்சம் பணம் தர்றேன்.''
''முதலாளி... பணத்துக்காக என்ன வேணும் ஆனாலும் செய்வான் இந்த லாரி ராஜமாணிக்கம். லாரி எந்த ஊரைக் கிராஸ் பண்ணி வந்துட்டு இருக்குங்கறதை சொல்லுங்க. ஒரு பெட்ரோல் டாங் லாரியை எடுத்துக்கிட்டு, அதுல பாம் வெச்சு பையன்கள் வர்ற லாரி மேல் ஆக்ஸிடண்ட் பண்ணி விட்டிடறேன்.''
''வெரிகுட்... அப்படி நீ செய்தால்தான் நாம பிழைக்க முடியும், உடனே செய்!''
''சரி, பையன்கள் வர்ற லாரி எந்த ஊர்ல வந்துட்டு இருக்குங்கற தகவலை உடனே எனக்குச் சொல்லுங்க!''
''என் தொழிற்சாலை காம்பவுண்டை விட்டு லாரி புறப்பட்டு பதினைந்து நிமிஷம்தான் ஆச்சு. ஓசூர் பஸ் ஸ்டாண்டை கிராஸ் பண்ணி வந்துக்கிட்டு இருக்கும். நீ கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் ரோட்டுல உன்னோட லாரியை ஓட்டிட்டுப் போ. லாரி கலர் பச்சை. லாரி நம்பர் டி.என்.8593 ஓ.கே.''
''ஓ.கே. இனி நாம் பாத்துக்கறேன்.''
லாரி ராஜமாணிக்கம் மொபைல்போனை ஆப் பண்ணிவிட்டு எழுந்தான். லாரி ராஜமாணிக்கம் மிகவும் கொடூரமான சுபாவம் உள்ளவன். பாவகாரியங்கள் செய்வதில் வல்லவன். ஐயோ பாவம் என்கிற எண்ணம் அவன் மனதில் துளியும் கிடையாது. பணத்துக்காக யாரைக் கொலை செய்யச் சொன்னாலும் செய்வான். குஷ்வந்த் சிங் பத்துலட்சம் பணம் தருவதாகச் சொல்லியிருக்கிறான். பணம் கைக்கு கிடைத்து விட்டது போலவே, உணர்ந்தான் லாரி ராஜமணிக்கம்.
வேகமாக ரோட்டிற்கு வந்தான். ஒரு பெட்ரோல் பங்க் பக்கத்தில்வந்து நின்றான். அந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக வந்து நின்று கொண்டிருந்த லாரியை கவனித்தான். அந்த லாரி டிரைவர் பங்க் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருப்பதை கவனித்தான்.
இதுதான் சரியான சமயம் என்பதை உணர்ந்து பெட்ரோல் நிரப்பியிருக்கும் டேங்க் லாரியில் ஏறி அமர்ந்தான். வண்டியில் சாவியும் இருந்தது. ரொம்பவும் சவுகரியமாகப் போய் விட்டது. லாரியை ஸ்டார்ட் பண்ணி ஓட்டினான். அந்த லாரி டிரைவர் கண்ணாடி அறைக்குள் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்தாரே தவிர, லாரி ராஜமணிக்கம், தான் ஓட்டி வந்த பெட்ரோல் டாங்க் லாரியை ஓட்டிச் சென்றதை கவனிக்கவில்லை.
கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் செல்லும் பிரதான சாலையில் ராஜமாணிக்கம் ஓட்டிச் செல்லும் பெட்ரோல் டாங்க் லாரி விரைந்து கொண்டிருந்தது.
அதே போல் ஓசூரிலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் கடந்து முகுந்தன் ஓட்டி வரும் லாரியும் வந்து கொண்டிருந்து. சின்னஞ்சிறு சிறுவன் லாரி ஓட்டிக் கொண்டு செல்வதை பலரும் வேடிக்கை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.
மாயமோதிரத்தின் சக்தி முகுந்தனின் உடலுக்குள் புகுந்து கொண்டதால், லாரியை ஓட்டிக் கொண்டு சென்றான். லாரி சக்கரங்கள் தரையில் உருள்கிறதா? அல்லது அந்தரத்தில் உருண்டு செல்கிறதா எனக்கூட தெரியாமல் வழியில் வருவோர் போவோர் விழித்தனர். இவ்வளவு வேகமாக லாரி சென்றாலும் எந்தவித விபத்துக்கும் ஆட்படாமல் சென்று கொண்டிருந்தது.
அதே போலத்தான் லாரி ராஜமாணிக்கம் ஓட்டும் லாரியும் சென்று கொண்டிருந்தது. லாரியில் பல வித்தைகளைக் கற்றுத் தேர்ந்திருந்தான் ராஜ மாணிக்கம். அவனது அடைமொழி பெருக்கேற்ப லாரி சென்று கொண்டிருந்து.
குறைந்தது ஒரு மணி நேரமாவது இரு லாரிகளும் எதிர் எதிரே அதிவேகத்தில் வந்து கொண்டிந்தது. லாரி ராஜமாணிக்கம் எதிர்பார்த்த முகுந்தனின் லாரி எதிரே வந்து கொண்டிருப்பதை தெரிந்துக் கொண்டான். உடனே அவன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த ஒரு அலாரம் அடிக்கும் கடிகாரம் போல இருந்த டைம் பாம்பை எடுத்து லாரி சீட்டில் வைத்துக் கொண்டு கதவைத் திறந்து குதித்தான்.
சற்றும் எதிர்பாராத முகுந்தன் வந்த லாரி அந்த பெட்ரோல் டாங்க் லாரி மீது மோதியது. மோதிய வேகத்தில் முகுந்தனின் லாரி சிதைந்த நிலையில் கவிழ்ந்து விழுந்தது. டேங்க் லாரி வெடித்தது. பெட்ரோல் டாங்கும் வெடித்தது. அந்த இடம் ஒரு எரிமலைப்போல் நெருப்பு எறிந்து மேலே கறுப்புப் புகையைக் கக்கிக் கொண்டிருந்தது.
முகுந்தனின் லாரியில் வந்த சிறுவர்கள் தூக்கி ஏறியப்பட்டு சிதறிக்கிடந்தனர். அந்த வழியாக வந்த வாகனங்கள் நின்றன. வழியில் வந்த மக்கள் கூடி லாரிக்கு அடியில் சிக்கிக்கிடக்கும் சிறுவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
முகுந்தனின் தலையில் அடிபட்டு மயக்கமாய் இருந்தான். மணிகண்டன், கணேசன், குமார் மற்றும் முள்ள சிறுவர்கள் காயங்களுடன் சிலர், தீக்காயங்களுடன் தெரிந்தனர்.
ஒரு ஆள் அந்தப் பகுதியிலுள்ள அரசு மருத்துவ மனைக்குப் போன் செய்தான். சிலர் தங்களது காரிலும், வேறு வண்டியிலும் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த ஒரு பஸ்சை நிறுத்தினர்.
அதிலுள்ள பயணிகளை இறக்கினர். யாருக்கும் உயிர் சேதம் இருக்காது என்று சிலர் பேசிக்கொண்டிருந்தனர். சிலர் மயக்கமாகவும், சிலர் வலி தாங்க முடியாமல் அழுதுக்கொண்டும் இருந்தனர். அனைவரையும் பஸ்சில் ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றது பஸ்.
ராஜமணிக்கம் கூட்டத்தில் ஒருவனாக நின்று விபத்திற்கும், தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் வேடிக்கை பார்த்து நின்றான். பிறகு குஷ்வந்த் சிங்குக்கு போன் செய்தான்.
''முதலாளி... நீங்க சொன்னது போல செய்தேன், விபத்தும் நடந்திடிச்சு.''
''எல்லாரும் செத்துட்டானுங்களா?''
''நெருப்புல எரிஞ்சு போயிடுவாங்கன்னு நெனைச்சென். ஆனா அந்த லாரியை ஓட்டி வந்தவன் ரொம்ப சாமர்த்தியமா வண்டியை ரைட்டுல திருப்பி நெருப்புல எரியாதபடி வண்டியை சாய்ச்சு விட்டுட்டான்.''
''அதெப்படி சாத்தியம்? டிரைவரே இல்லாம சின்னப் பையன் வண்டியை ஓட்டி வந்திருக்கான். அவனுக்கு இவ்வளவு சாமர்த்தியம் இருக்க முடியுமா?''
''அதுதான் எனக்கும் சந்தேகமா இருக்கு! என்னோட வாழ்நாள்ல நான் பிளான் பண்ணிச் செய்த ஆக்ஸிடண்டுல யாருமே பிழைச்சது கிடையாது! இந்தப் பிள்ளைகள் எத்தனை பேர் பிழைச்சிருக்காங்க! எத்தனை பேர் செத்திருக்காங்கன்னு தெரியலை! ஊர் ஜனங்க ஒரு பஸ் மூலமா அவங்களை அரசு ஆஸ் பத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்க.''
''என்ன இப்படிச் சொல்றே! ஒருத்தன் வாயை திறந்தாலும் மாட்டுவோமே! ஆஸ்பத்திரியில கூட யாரும் பிழைக்காதபடி செய். அதுலேயும், என்னைப் பத்தி விபரம் மத்த பசங்களுக்குத் தெரியாது. என்னைப் பத்தித் தெரிஞ்ச ஒரே ஒருத்தன் முகுந்தன் தான். முகுந்தனால மட்டும்தான் என்னைக் காட்டிக் கொடுக்க முடியும்! முகுந்தன் யாருன்னு கண்டுப்பிடிச்சு, அவனை மட்டும் தீர்த்துக் கட்டிடு. மத்தவங்களுக்கு என்னைப் பத்தியோ நம் பேக்டரி இருக்கற இடத்தையோ சொல்லத் தெரியாது புரியுதா?''
''ஓ.கே. பாஸ்... நான் இன்னிக்கே அரசு மருத்துவ மனைக்குப் போயி, அந்த முகுந்தனோட கதையை முடிச்சிடறேன்.''
குஷ்வந்த்சிங் போனைத் துண்டித்து விட்டுச் சிரித்தான்.
அரசு மருந்துவமனை டாக்டர்கள் பரபரப்பாக இருந்தனர். விபத்துக்குள்ளான மாணவர்களை ஸ்டெச்சரில் வைத்தும், கையில் தூக்கிக் கொண்டும்,காலால் நடக்க வைத்துமாய் ஒரு பெரிய வார்டில் சிகிச்சைக்காக முதலுதவியைச் செய்து கொண்டிருந்தனர்.
இவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? இவர்கள் வந்த லாரியை ஓட்டி வந்தது யார்? என்று டாக்டர்கள் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
''யாருக்கும் தெரியாது. விபத்து நடந்த இடத்தில் டிரைவர் இல்லை. லாரி யாருடையது. ஓட்டி வந்தது யார் என்பது போன்ற விபரங்களை போலீஸ்காரர்கள் பார்த்துக் கொள்வார். இந்தக் குழந்தைகளை எப்படியாவது காப்பாற்றுங்கள், என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.
பொதுமக்களில் ஒருவனாக லாரி ராஜமாணிக்கம் மருத்துவமனைக்குள் நுழைந்தான். வரிசையாக சிறுவர்களைப் படுக்க வைத்து குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டிருந்தனர். தற்போது குழந்தைகள் இருக்கும் நிலையில் யாரும் பேச்சுக் கொடுக்க வேண்டாம்! அது மட்டுமல்ல, போலீஸ் வந்து விசாரணை நடத்தும் வரையில் பொதுமக்கள் யாரும் பக்கத்தில் வரக்கூடாது என்று தலைமை டாக்டர் கூறினார். என்றாலும், லாரி ராஜமணிக்கம் முகுந்தன் யார் என்பதைக் கண்டறிய படுக்கையில் படுத்திருக்கும் சிறுவர்களை நோட்டம் விட்டான்.
-12 தொடரும்
