PUBLISHED ON : நவ 18, 2011

சங் குழப்பமடைந்தான். அவனைப் பொறுத்தமட்டில் அவன் உடல் வழக்கம்போல்தான் இருந்தது. கால்களால் நீரில் இறங்கி, கைகளால் நீரை கொண்டு, முகத்தைக் கழுவி, வாயால் நீர் பருகி எல்லாம் வழக்கம்போல்தான் நடைபெற்றன. தாகம் தணிந்தபின் படியில் ஏறினான். கைகளைச் சட்டையில் துடைத்துக்கொண்டு தொப்பியைக் கழற்றினான். 'சூ மந்திரக்காளி!' என்று யாரோ சொன்னது போல் சட்டென்று நீர்பரப்பில் அவன் உடம்பு பிரதிபலிப்பானது. மேலும் இரண்டு படி ஏறியதும், ஓடிவந்து ஒட்டிக் கொண்டதுபோல் தரையில் அவன் நிழலும் விழுந்தது.
சங் யோசித்துப் பார்த்தான். மறுபடியும் தொப்பியைத் தரித்துக் கொண்டு பரிசோதனை செய்தான். தண்ணீரில் அவனது பிரதிபிம்பமோ, தரையில் அவனது நிழலோ தென்படவில்லை. சங்கிற்கு விஷயம் விளங்கிவிட்டது. தன்னிடம் இருப்பது மாயத்தொப்பி என்று தெரிந்துவிட்டது. அதை அணிந்துக்கொண்டால் தன் உடம்பு பிறர் கண்ணுக்குத் தென்படாது என்றும், தான் எங்கும் செல்வதை யாரும் பார்க்க முடியாது என்றும் தெரிந்து, சங் சந்தோஷப்பட்டான்.
சங் தலைநகரத்தை அடைந்தான். பசியாக இருந்ததால் முதலில் தென்பட்ட உணவு விடுதிக்குச் சென்றான். சாப்பாட்டுக்குக் கொடுக்கத் தன்னிடம் பணமில்லாததால் வாய் திறந்து எதுவும் கேட்க சங் தயங்கினான். அவனது முகச் சாயலைக் கவனித்த கடைக்காரன், அவன் முதல் நாள் வந்தவனின் சகோதரன் என்று ஊகித்தான். இவனிடமும் தங்கக்காசு இருக்கும் என்று நினைத்த கடைக்காரன் அவனை வரவேற்று, கையில் தட்டைக் கொடுத்து, சங் எதுவும் சொல்வதற்கு முன்னரே உணவு பரிமாற ஆரம்பித்து விட்டான்.
உணவு பரிமாறியபடியே கடைக்காரன், ''நேத்தி இங்க சாப்பிட்ட வந்த ஒருத்தரு பார்க்கிறதுக்கு உங்க சாடையாகவே இருந்தாரு. அவர் ரொம்ப ஏழையா தெரிஞ்சதால அவருக்கு சாப்பாடு போட தயங்கினேன். அவர் நல்லா சாப்பிட்டிட்டு ஒரு கிழிஞ்ச பர்சிலேந்து ஒரு தங்கக்காசு எடுத்துக் கொடுத்தாரு. மீதியை தர வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டாரு.''
சங் பதறிப்போனான். ''ஐயா, அவன் என் தம்பிதான். இங்கேயிருந்து அப்புறம் எங்கே போனான்? வீடு திரும்பலையே,'' என்று சங் விசாரித்தான்.
''அவரு உங்க தம்பியா? மத்த கடைகளிலேயும் அவரு எது வாங்கினாலும் தங்கக்காசாவே குடுத்திட்டு போனாரு. அதனால அவர் மேல சந்தேகப்பட்டு சிப்பாய்கள் வந்து பிடிச்சு ராணியம்மா கிட்ட கொண்டுபோயிட்டாங்க. அவர் வீடு திரும்பலைன்னு நீங்க சொல்றதால அவரை சிறையில போட்டிருப்பாங்க,'' என்று கடைக்காரர் கருத்துத் தெரிவித்தார்.
அதிர்ச்சியுடன் சங் எழுந்தான். ''இதோ இப்பவே அரண்மனைக்குப் போயி விசாரிக்கிறேன்,'' என்று கிளம்பினார்.
''அப்படியே செய்யுங்க... இப்ப நீங்க சாப்பிட்டத்துக்கு காசு குடுத்துட்டு போங்க,'' என்று நினைவூட்டினான் கடைக்காரன்.
சங் விழித்தான். ''காசா! என்கிட்ட செப்புக் காசு கூட இல்லியே. அதனாலதான் நான் சும்மா நின்னுகிட்டிருந்தேன். நீங்கதான் தட்டை என் கையில திணிச்சு சாப்பாடு போட ஆரம்பிச்சுட்டீங்க,'' என்றான்.
''என் தம்பி நேத்திக்கு தங்கக்காசு கொடுத்திட்டு பாக்கி பணத்தை வாங்கிக்காம போயிட்டான்னு சொன்னீங்களே, அதில் என் கணக்கை சரி பண்ணிக்குங்க,'' என்று கேட்டுக்கொண்டார்.
கடைக்காரன் ஒப்புக்கொள்ளவில்லை. ''அது வேற கணக்கு. நேற்றைய கணக்கு நேற்றோடு முடிஞ்சு போச்சு. நேற்றைக்கு ஓடின ஆற்றுத் தண்ணியில இன்னிக்கு குளிக்க முடியுமா? இப்போ சாப்பிட்டதுக்கு காசு கொடுத்தாதான் போகவிடுவேன்,'' என்று மிரட்டி அவன் சங்கின் சட்டையைப் பிடித்துக் கொண்டான்.
சங்கிற்குச் சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. கையிலிருந்த தொப்பியைத் தலையில் மாட்டிக் கொண்டான். அடுத்த வினாடியே அங்கிருந்து அனைவரது கண்களுக்கும் அவன் காணாமல் போய் விட்டான்!
அவன் நேராக அரண்மனைக்குள் போய்விட்டான். தம்பி காணாமல் போனதற்கு ராணிதான் காரணமென்பதால், அவளது அறைக்குள் முதலில் சென்றான். ராணி சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். மேஜைமேல் ஏராளமான உணவு வகைகள் பரப்பி வைக்கப் பட்டிருந்தன. மசாலா கூட்டில் பாம்புக் கறி மிதந்து கொண்டிருந்தது. ராணி ரசனையுடன் ஒலி எழுப்பிக் கொண்டு ஒவ்வொரு தட்டிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துச் சாப்பிட்டாள்.
ஏற்கெனவே தான் சாப்பிட்டுவிட்ட போதிலும், ராணியின் மேஜைமீது, தான் இதுவரை பார்த்திராத உணவுப் பண்டங்களைப் பார்த்தும் சங்கிற்கு மீண்டும் பசி வந்துவிட்டது. யார் கண்ணுக்கும் தெரியாத நிலையில் அவனும் ஒரு நாற்காலியில் அமர்ந்து, உணவுத் தட்டுகளைத் தின்பண்டங்களையும் எடுத்து உண்ணத் தொடங்கினான்.
ராணியிடமிருந்த சில தட்டுகளையும் பறித்துக் கொண்டான். ராணி அதிர்ச்சியடைந்தாள். பிறகு சமாளித்துக் கொண்டாள். ஏதோ ஒரு தேவதை உருவமற்ற நிலையில் தட்டுகளை இழுத்து உணவுகளைச் சாப்பிடுகிறது என்று ராணி முடிவுகட்டினாள். அவள் கைகூப்பி, ''உனக்கு என்ன வேண்டும்? தருகிறேன். என்னை சாப்பிடவிடாமல் வதைக்காதே,'' என்று கெஞ்சினாள்.
''மகாராணியாரே! என் பெயர் சங். என் தம்பி பெயர் சிங். நேற்று அவனை அரண்மனைக்குப் பிடித்துவந்து வஞ்சகமாக சிறையில் அடைச்சுட்டீங்க. அவனை விடுவித்தால்தான் உங்களைச் சாப்பிட விடுவேன். இல்லாட்டவிட்டால், இனி நீங்க எப்ப சாப்பிட உட்கார்ந்தாலும் அந்த உணவுகளை எல்லாம் நான் பிடுங்கி சாப்பிட்டிடுவேன். நீங்க பட்டினியால கஷ்டப்பட்டு செத்துப் போக நேரிடும்,'' என்று தன் நிபந்தனையைத் தெரிவித்தான்.
ராணிக்கு பயமும் கவலையும் உண்டானது. ''சரி, விடுதலை செய்கிறேன். ஆனால், நேற்று சிறையில் அடைக்கப்பட்டவனுடைய அண்ணன் நீதான் என்பதற்கு என்ன ஆதாரம்? உன் உருவம் கண்ணுக்குத் தெரிந்தால் அல்லவா உங்கள் ரெண்டு பேரிடமும் உருவ ஒற்றுமை தெரிகிறதா என்று நாங்கள் ஒப்பிட முடியும்?'' என்று ராணி தன் ஆட்சேபனையைத் தெரிவித்தாள்.
ராணி சொன்னதில் இருந்த நியாயத்தை உணர்ந்த சங், தலையிலிருந்து தொப்பியை நீக்கினான். உடனே அவன் முழு உருவத்துடன் காட்சியளித்தான். அவன் உருவம் அவன் தம்பியின் உருவத்துடன் ஒத்துப்போனதை ராணி கவனித்தாள். ''இது உனக்கு எப்படி சாத்தியப்பட்டது? என்ன மந்திரத்தை சொன்னால் உடம்பு மறைவதும் தோன்றுவதும் சாத்தியப்படும்?'' என்று போலி அன்புடன் விசாரித்தாள்.
''மந்திரமோ, தந்திரமோ இல்லீங்க, இந்த கிழிஞ்ச பழைய தொப்பியை பார்த்தீங்களா? இதை போட்டுக்கிட்டா உடம்பு அப்படியே இருந்தாலும் மத்தவங்க கண்ணுக்கு ஆள் தெரியமாட்டான். தொப்பியை கழட்டிட்டா மறுபடியும் எல்லார் கண்ணுக்கும் ஆள் தெரிவான்,'' என்று சங் விளக்கினான்.
''போய்யா போ, நம்ப முடியாத கதையை சொல்றியே. குப்பையில எறிய வேண்டிய இந்த அசிங்க தொப்பியை தலையில் மாட்டிக்கிட்டா ஆள் காணாம போயிடுவானாம்! பைத்தியம் போல உளறாதே,'' என்று ராணி கண்டித்தாள்.
''அப்படியில்லீங்க? நான் சத்தியமா சொல்றேன். இது மாயத் தொப்பிங்க,'' என்றான்.
''சரி, நீ சொல்வதைப் பரிசோதித்துவிடலாம்,'' என்று கூறி ராணி அவனிடமிருந்து தொப்பியை வாங்கித் தன் தலையில் அணிந்துக்கொண்டாள்.
உடலளவில் அவள் அங்கேதான் அப்படியேதான் இருந்தாள். ஆனால், அவள் நிற்பது யார் கண்ணுக்கும் தெரியவில்லை. முதல்நாள் பர்சைப் பிடுங்கிக் கொண்ட மாதிரி இந்த மாயத் தொப்பியையும் தனதாக்கிக் கொள்ள விரும்பினாள். உடல் வெளியே தெரியாத நிலையிலேயே அவள் அங்கிருந்த காவலர்களிடம், ''இந்தப் பயலைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்,'' என்று ஆணையிட்டாள்.
சங் அழுது புலம்பிப் பார்த்தான். காவலர்கள் அவனைத் தரதரவென்று இழுத்துச் சென்று சிறையில் அடைத்துவிட்டனர்.
சிறையில் சகோதரர்கள் சந்தித்தனர். அதற்காக மகிழ்ந்தாலும் மறுநாள் அவர்களின் தம்பி சுங் தலைநகரத்துக்கு அவர்களைத் தேடிவந்து இதேபோல் சிறையில் தள்ளப்பட்டு விடுவானோ என, அவர்கள் கவலைப்பட்டனர்.
'தலைநகருக்கு வராதே' என்று அவனுக்குச் செய்தி சொல்லி அனுப்பவும் வழியில்லை. நடக்கிறபடி நடக்கட்டும் என்று முடிவு எடுத்தனர். ஆனால், அவர்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. தங்கள் தந்தைக்குத் தாங்கள் மூவரும் கடைசிக் காலம்வரை சேவை செய்து, அவரைப் பராமரித்து, 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்று அவர் பேச்சுக்கு மரியாதை கொடுத்து வந்ததால், கடைசியில் நல்லதே நடக்கும் என்று நம்பினார்.
மூன்றாம் நாள், சகோதரர்களில் இளையவனான சுங் குழம்பிப் போயிருந்தான். அண்ணன்மார்கள் திரும்பி வராதது அவனுக்குப் புதிராய் இருந்தது. வேறு வழி யின்றி அவர்களைத் தேடிக் கொண்டு அவனும் தலைநகரத்திற்குப் புறப்பட்டான். வெறுங்கையுடன் நடப்பது அவனுக்கு ஏதோ மாதிரித் தோன்றியதால், தரையைத் தோண்டி எடுத்த மாட்டுக் கொம்பைக் கையில் எடுத்துச் சென்றான்.
(-2 தொடரும்)
