தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாய மோதிரம் (18) - இருகூர் இளவரசன்

மாய மோதிரம் (18) - இருகூர் இளவரசன்

மாய மோதிரம் (18) - இருகூர் இளவரசன்


PUBLISHED ON : டிச 30, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 30, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுசீந்திரனின் தந்தை ஓட்டிவந்த காரை, கந்தசாமி கேட்டை திறந்து உள்ளே விட்டார். கார் வழக்கம் போல் கார் பார்க்கிங்கில் நிற்காமல் கேட் ஓரமாக நிறுத்திவிட்டு கோபத்தோடு இறங்கினார். ''கூப்பிடுய்யா உன் பையனை கையில என்ன ஆயுதத்தை வெச்சிருக்கான். சாதாரண மாகக் கன்னத்துல அறைஞ்சா காது ஜவ்வு கிழிஞ்சி போகுமா? ஏதோ ஆயுதத்தால தாக்கி இருக்கான்னு டாக்டர் சொல்றாரு... கூப்பிடு அவனை?''

''இதப்பாருங்க, கிரிக்கெட் பேட்டால தாக்கினது உங்க பையன்தான், ஏற்கனவே முட்டிவலியால நான் எண்ணெய் தடவி வைத்தியம் பாத்துட்டு இருக்கேன். அந்த முட்டியில உங்க பையன் அடிச்சான். என் பையன்கிட்ட எந்த ஆயுதமும் கிடையாதுங்க. அது மட்டுமில்ல... பதிலுக்கு சூடு போட்டாச்சு, சூட்டுக்காயத்துக்கு மருந்து போட்டு இப்பத்தான் சாப்பிடக் கொடுத்து தூங்க வெச்சிருக்கேன். தூங்கறவனை எழுப்பச் சொல்றீங்களே! இது நியாயமா?'' என்றார் முகுந்தனின் தந்தை.

''அதெல்லாம் எனக்குத் தெரியாது. அவன் எந்த ஆயுதத்தால தாக்கினான்னு தெரிஞ்சாகணும். கூப்பிடறியா இல்லையா?'' என்றார்.

''ஒரு நிமிஷம் இருங்க...'' என்ற கந்தசாமி வீட்டினுள் சென்று தூங்கிக் கொண்டிருந்த முகுந்தனை எழுப்பினார்.

''முகுந்தா... சுசீந்திரன் அப்பா கூப்பிடுகிறார். சுசீந்திரனுக்கு காது ஜவ்வு கிழிஞ்சு போச்சாம், ஆயுதத்துல தாக்கினியான்னு கேக்கறாங்க, வந்து பதில் சொல்லு!'' என்றார்.

''அவங்களுக்கு வேற வேலையே இல்லையா? கேக்கறதுக்கு இதுவா நேரம்? காலையில் கேக்கச் சொல்லுய்யா,'' என்றாள் வள்ளியம்மாள்.

''பரவாயில்லை, நான் இப்பவே வர்றேன்,'' என்றான் முகுந்தன்.

''என் யையன் கன்னத்துல நீ எந்த ஆயுதத்தை வெச்சுத் தாக்கின?'' சுசீந்திரனின் தந்தை கேட்டார்.

''ஆயுதமா? அப்படி எதுவும் இல்லீங்க, சும்மா கையாலதான் அடிச்சேன்,'' என்றான்.

''கையைக் காட்டுடா ராஸ்கல்,'' எனக்கூறி முகுந்தனின் கையைப் பிடித்துப் பார்த்தார்.

சாதாரணமாகத்தான் இருந்தது.

விரலை அழுத்திப் பார்த்தார். மிருதுவாகத்தான் இருந்தது. அதாவது மாயமோதிரம் முகுந்தனின் விரலில் இருக்கும் போது முகுந்தனின் உடல் அதிக வலிமையுள்ளதாக இருக்கும். இரவில் காரில் வரும்போது சுவாமிஜி முகுந்தனின் தோளை அழுத்திப் பார்க்கையில் பலமாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை.

''என் பையனோட எதிர்காலத்தையே வீணாக்கிட்டியேடா, ஆபரேஷன் செய்தாக்கூட என் பையனுக்கு காது கேக்கறது சந்தேகம்னுதான் சொல்றாங்க!''

''கண்டிப்பா சுசீந்திரனுக்கு காது கேக்கும் பயப்படாமப் போங்க!'' என்றான் முகுந்தன்.

''ஆமாம் இவன் கடவுளோட அவதாரம், டாக்டருக்கு தெரியாதது எல்லாம் உனக்குத் தெரியுமோ,'' என்று திட்டிவிட்டுச் சென்றுவிட்டார். சுசீந்திரன் காதைப் பிடித்தபடி முகுந்தனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்று இரவு சுவாமிஜியின் ஆசிரமத்தில் ராஜ மாணிக்கமும் சுவாமிஜியும் தூங்காமல் பேசிக் கொண்டிருந்தனர். நம் தொழிலுக்கு முகுந்தன் பெரும் உதவியாய் இருப்பான்; ஒன்று முகுந்தனை வைத்துக் கொள்ள வேண்டும், அல்லது அவனது விரலில் கண்ட ஒளிமயமான அந்த மோதிரத்தைக் கைப்பற்ற வேண்டும். என்ன செய்யலாம்?'' எனக் கேட்டார் சுவாமிஜி.

''முகுந்தன் உஷாரான பையன், நம்மிடம் அவன் வரவும் மாட்டான், அவன் அந்த மோதிரத்தைக் தரவும் மாட்டான்,'' என்றான் ராஜமாணிக்கம்.

''ஒரு சாதாரண விஷயம் இது? இதற்கு ஏன் யோசிக்கிற?

''இது சாதாரண விஷயமா? எப்படிச் சொல்றீங்க சுவாமிஜி?''

''முகுந்தனைக் கொன்றுவிட்டால் விஷயம் சுலபமாய் விடும் அல்லவா?''

''கொல்வதா?''

''ஆமாம், அவன் பள்ளிக்கூடம் செல்லும் வழியிலோ அல்லது விளையாடும் இடத்திலோ உன் காரைக் கொண்டு மோதினால் சுருண்டு விழுந்துவிடுவான், அவன் மயக்கமாய் இருக்கும் தருவாயிலோ அல்லது இறந்து கிடக்கும் தருவாயிலோ அந்த மோதிரத்தை அபகரித்துக் கொண்டால் விஷயம் சுலபமாகிவிடும்''

''அது சரிதான், மோதிரம் கைக்குக் கிடைத்தால் போதுமா... அவன் ஏதோ ஒரு மந்திரத்தை அதன் மீது ஓதுகிறானே! அந்த மந்திரம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?''

''அதுவும் சரிதான் அதற்கென்ன வழி?''

''சுவாமிஜி... முகுந்தன் இரக்க சுபாவம் உள்ளவன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் குணம் படைத்தவன், அதனால் யாருக்கேனும் பாதிப்பை உண்டாக்கி அந்த விஷயத்தை அவனுக்குத் தெரியப்படுத்தினால் அவன் அந்த இடத்திற்கு எப்படியும் வந்துவிடுவான். பாதித்தவர்களை காப்பாற்றும் முன்பு அந்த மந்திரத்தைச் சொல்வான். அவனது சர்ட் பாக்கெட்டில் பேனா, மைக்கை வைத்துவிட்டால் அவன் சொல்கிற மந்திரம் நமக்குக் கேட் விடும் இதுதான் சரியான ஐடியா இதைவிட்டு நாம் என்ன யோசித்தாலும் அது பயன்படாது,'' என்றான் ராஜமாணிக்கம்.

''சரி, இந்த வழியைப் பின்பற்றுவோம் எந்த மாதிரியான ஆபத்தை உண்டாக்கலாம்?''

அதிகாலை சூரிய ஒளிக்கதிர் பூமியெங்கும் பிரகாசத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. முகுந்தனின் வீட்டு வாசலில் வள்ளியம்மாள் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

தகரடப்பாக்களும், பழைய உடைந்த பிளாஸ்டிக் பொருட்களையும் வாங்கி வியாபாரம் செய்யும் சிங்காரம் சைக்கிளில் வந்து இறங்கினான்.

''ஏம்மா... வீட்டுல ஏதாவது இரும்பு கம்பி தகரம், உடைஞ்ச பிளாஸ்டிக் பக்கெட், கொடம்னு இருந்தாக் குடுங்க எடை போட்டு காசு தர்றேன், இல்லைன்னா புதுசா பிளாஸ்டிக் பக்கட்டோ, கொடமோ தர்றேன்.''

''இங்க ஒண்ணும் இல்லப்பா!''

''கேட்டதும் பதில் சொன்னா எப்படி? உள்ள போயிபாரு... நஞ்சுபோன பொருளா இருந்தாக்கூட வாங்கிக்கறேன். முதன் முதலா வியாபாரத்துக்கு வந்திருக்கேன். இதுக்கு முன்ன உன் கையால போனிப் பண்ணி நல்லா வியாபராம் நடந்துச்சு தாயி,'' என்றான் பாத்திரக்காரன்.

இவன் ஏதாவது வாங்காமல் போகமாட்டான் என்று வள்ளியம்மாளுக்கும் தெரியும். கோலம் போடுவதை நிறுத்திவிட்டு வீட்டினுள் சென்றாள். உப்பு, பருப்பு, உளுந்து போடும் பழைய தகரப் டப்பாக்களையெல்லாம் எடுத்தாள். ஒரு பிளாஸ்டிக் குப்பைக் கூடையும், பக்கெட்டும் வண்டு போய்க் கிடந்தது. அதையும் எடுத்தாள், பிறகு ஏதேனும் கிடைக்கிறதா என்று அங்கும் இங்குமாய் பார்க்கும்போது இரவு ஒரு தகர டப்பாவில் மாயமோதிரத்தை வைத்து சுவர் மீது முகுந்தன் வைத்திருந்த டப்பா வள்ளியம்மாள் கண்ணில் பட்டது. அதுவும் பழைய தகர டப்பா பிரயோஜனமில்லாமல் இருந்ததால் அதனுள் எதுவும் போடாமல் வைத்திருந்தாள். எல்லா டப்பாக்களோடு அந்த டப்பாவையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

''இவ்வளவுதான் இருக்கு! இதுக்கும் மேல ஒண்ணும் கெடையாது''

''கொஞ்சமாகத்தானே இருக்கு! இதை வெச்சு என்னத்தக் கொடுக்கறது?''

''புது பக்கெட் ஒண்ணு கொடு போதும்!''

''புதுபக்கெட் 40 ரூபா... மேற்கொண்டு பத்து ரூபாவாச்சும் கொடு பக்கெட் தர்றேன்.''

''குடுத்தாக்குடு, இல்லைன்னா நடையக்கட்டு,'' என்று வள்ளியம்மாள் நறுக்கென்று பதில் சொன்னதும், புது பக்கெட்டை கொடுத்து விட்டு சைக்கிள்காரன் சென்று விட்டான்.

இரவு நேரம் கழித்துத் தூங்கியதால் முகுந்தன் எழுந்திருக்க நேரம் ஆனது. அன்று சனிக்கிழமை என்பதால் பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. படுக்கையை விட்டு எழுந்து வெளியே வந்தான். புது பிளாஸ்டிக் பக்கெட்டைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டான்.

''ஏது சித்தி இந்த பக்கெட்டு, புதுசா இருக்கு?''

''நான்தான் வாங்கினேன். பழைய டப்பாக்களையும், ஒடைஞ்ச பிளாஸ்டிக் சாமான்களையும் போட்டு புதுசா எடுத்தேன், இதுல தண்ணி கொண்டு வந்து முகம் அலம்பிக் கை,கால் கழுவிக்க,'' என்றாள் வள்ளியம்மாள்.

பழைய தகரடப்பா என்றதும் முகுந்தனுக்கு நினைவு வந்தது. மாயமோதிரம் வைத்திருக்கும் டப்பாவைப் பார்க்க வீட்டினுள் ஓடினான். தான் வைத்த இடத்தில் டப்பா இல்லை.

''சித்தி... சித்தி... '' என்று கத்தினான்.

''என்னாச்சு முகுந்தன்? ஏன் இப்படிக் கத்தறே?''

''இங்க ஒரு டப்பா வெச்சிருந்தேனே... அந்த டப்பா எங்கே?''

''அதையும் தூக்கிப் போட்டுட்டேன். ஏன் என்ன விஷயம்?'' என்றார் சித்தி.

''கடவுளே அதை ஏன் தூக்கிப் போட்டீங்க, அந்த டப்பா எனக்கு வேணுமே''

''அது துருவேறிக்கிடந்த டப்பாதானே... உனக்கு அது எதுக்கு?''

''ஐயோ... உங்ககிட்ட நான் எப்படிச் சொல்றதுன்னு தெரியலியே! அது எனக்கு வேணுமே சித்தி.''

''சைக்கிள்காரன்கிட்டப் போட்டேன். அவன் போயி அரைமணிநேரம் ஆயிடிச்சே!''

''அவன் எங்க போயிருப்பான்?''

''எனக்கென்ன தெரியும்? இப்படிக் கிழக்குப் பக்கமாக சைக்கிளை ஓட்டிட்டுப் போனான்.''

''நான் அவனைப் பாக்கணும், அவன் எப்படி இருப்பான்?''

''காக்கி டவுசரும், கிழிஞ்ச வெள்ளை பனியனும், தலையில செகப்புத் துண்டும் கட்டியிருந்தான்.

இதைக் கேட்டதும் முகுந்தன் அங்கிருந்து ஓடினான். இதுநாள் வரையில் விரலில் பத்திரமாய் இருந்த மோதிரம் மற்றவர்களுக்கு தெரிந்தால் மோதிரத்திற்கோ தனக்கோ ஆபத்து வந்து விடக்கூடும் என்கிற எச்சரிகையில் கழட்டி வைத்தது எவ்வளவு தப்பாகப் போய்விட்டது. சித்தி இப்படி செய்வாள் என்று முகுந்தன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஓடினான்... ஓடினான். தெரு எங்கும் ஓடினான். ஆனால் அந்த சைக்கிள்காரன் முகுந்தனின் கண்களில் படவேயில்லை.

மதியம்வரையில் தேடிப்பார்த்தும் சித்தி சொன்ன அடையாளத்தில் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எப்படியாவது சித்தியின் மூலமாகத்தான் அந்த நபரை அடையாளம் கண்டு அந்த டப்பாவை வாங்க வேண்டும் என, நினைத்து சோர்வாய் வீடு திரும்பினான்.

பழைய இரும்பு சாமான்களும், பிளாஸ்டிக் சாமான்களும் எடைக்கு வாங்கும் கடை அது. அந்தக் கடைவாசலுக்கு வந்து நின்றான் அந்த சைக்கிள்காரன் சிங்காரம்.

தலையில் தொப்பியும், முகத்தில் தாடியுமாய் ஒருவர் அந்தக் கடையில் இருந்தார்.

''பாய்... பழைய சாமன் கொண்டு வந்திருக்கேன், மொத்தமாக எடையைப் போட்டு சீக்கிரமாய் காசைக் கொடு, வீட்டுக்குப் போகணும்'' என்றான் சைக்கிள்காரன்.

பழைய நியூஸ் பேப்பர் தனியாக எடைக்கு எடுத்து வைத்தான். பழைய உடைந்த பிளாஸ்டிக் பொருட்களையும் எடுத்து வைத்தான். பிறகு தகரடப்பாக்களைக் கொட்டினான். அந்த டப்பாக்கள் கூட்டத்தில் மாய மோதிரம் இருக்கும் டப்பாவும் இருந்தது.

மொத்தமா அள்ளி தராசில் உள்ளே போட்டுவிட்டு, ஆயிரக்கணக்கில் உள்ளே கொட்டிக் கிடக்கும் டப்பாக்கள் மத்தியில் மாயமோதிர டப்பாவும் போய் சேர்ந்தது.

-18 தொடரும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us