PUBLISHED ON : டிச 30, 2011

பாபர் சக்கரவர்த்தி இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர். அரபி மொழியில், 'பாபர்' என்றால் 'சிங்கம்' என்று பெயர். அவர் பிறவி வீரர். மாவீரர்களான செங்கிஸ்கான், தைமூர் ஆகியோரின் வம்சத்தைச் சேர்ந்தவர்.
பாபர் 1520ல் டில்லியைக் கைப்பற்றி ஆட்சி செய்யத் தொடங்கினார். கத்தி பிடிப்பதில் மட்டுமல்லாமல், பேனா பிடிப்பதிலும் வல்லவராயிருந்தார். பாபர் பிறவிக் கவிஞர்; உரைநடையிலும் வல்லுவர். தமது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை, 'பாபர் நாமா' என்னும் உரைநடை நூலில் வர்ணித்துள்ளார்.
இயற்கையை மிகவும் நேசித்த அவர்,தாம் சென்ற, வென்ற இடங்களில் எல்லாம் பூங்காவனங்களை அமைத்தார். தமது மகனான இளவரசன் ஹூமாயூன் நோய் காரணமாக மரணப்படுக்கையில் இருந்தபோது பாபர் ஆண்டவரை வேண்டிக்கொள்ள, அதன்படி ஹூமாயூன் குணமடைந்தார்; பாபரின் உயிர் பிரிந்தது.
பாபர், புனித குரான் நூலைக் துருக்கிய மொழியில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார். மாமன்னராயினும் எழுத்தாளர் என்ற முறையில் அவரிடம் ஒரு குறுகுறுப்பு அல்லது பலகீனம் இருந்தது. எழுத்தாளர்களால் தாங்கள் எழுதுவதைப் பிறரிடம் காண்பிக்காமல் இருக்க முடியாது. அவர்கள் தங்கள் மனசாட்சியிடம் சான்றிதழ் கேட்காமல், பிறருடைய அங்கீகாரத்துக்காக ஏங்குவதும் வழக்கம். இது ஒருவகை மனநோய் அல்லது தான் பெரிய அறிவாளி என்பதை மறைமுகமாகத் தெரிவிப்பதற்கான முயற்சி என்றுதான் கருதவேண்டும்.
இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும். எழுத்தாளர் தனது படைப்பை இன்னொருவரிடம் காண்பிக்கும்போது பணிவின் அவதாரம்போல் சொல்வார். 'என் படைப்பில் ஏதாவது சொற்பிழை, கருத்துப்பிழை, இலக்கணத் தவறு இருந்தால் தயங்காமல் தெரிவியுங்கள். திருத்திக்கொள்ள வசதியாக இருக்கும்' என்பர். இதை நம்பி வாசிப்பவர் ஏதேனும் குறையைச் சுட்டிக்காட்டினால், எழுத்தாளர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார். மறுப்பர்; எதிர்வாதம் செய்வர்; சண்டை போடுவர்; ஜென்ம விரோதியாகக்கூட நினைப்பர்; பழிவாங்கக் காத்திருப்பர்.
பாபர் சக்கரவர்த்தியாக இருந்தபோதிலும், தாம் ஓர் எழுத்தாளர் என்ற பெருமிதத்துடன் தமது புனித குரான் மொழிபெயர்பைத், தம்மைச் சந்திக்க வரும் அறிஞர்களிடம் காண்பிப்பார். அவர்களை மதிப்பீடு செய்யச் சொல்வார். மொழி பெயர்ப்பிலுள்ள தவறுகளைத் தயங்காமல் சுட்டிக் காட்டுமாறும் கேட்டுக் கொள்வார்.
பாபர் இயற்கையாகவே சிறந்த அறிஞர். கடவுள் பற்று நிறைந்தவர். ஆகவே, அவரது மொழி பெயர்ப்பு சிறப்பானதாகத்தான் இருந்திருக்கும். ஆனால், எந்த நூலும் எல்லாவிதத்திலும் முழுமையாக இருக்க முடியாதே. மொழியெர்ப்பு என்றாலே குறைகள் சற்று அதிகமாகவே இருக்கும். ஏனெனில் மூலநூலிலுள்ள சொற்களுக்கு மிகப் பொருத்தமான சொற்கள் இன்னொரு மொழியில் கிடைப்பது சிரமம்.
சங்கடம் என்னவென்றால் அது சக்கரவர்த்தியின் மொழிபெயர்ப்பாயிற்றே. அதில் குறை தேடும் துணிச்சல் யாருக்குண்டு?
இப்படி எல்லாரும் பாராட்டியதால் பாபருக்கு மகிழ்ச்சியும், பெருமிதமும், கர்வமும் ஏற்பட்டிருக்க வேண்டுமல்லவா? அதுதான் இல்லை. மாறாக, அவருக்கு அதிருப்பதியே உண்டானது. தனது நூலைப் படித்தவர்களின் பாராட்டு மனப்பூர்வமானதா, போலியா, அவர்கள் உண்மையைச் சொல்ல அஞ்சுகிறார்களா என்று பாபரால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. தன் நூலில் குறை ஏதும் இல்லை என்று மகிழ்வதற்குப் பதிலாக பாபர், யாராவது தன் நூலில் குறையைச் சுட்டிக் காட்டும் நாள் வந்திடாதா என்று ஏங்கத் தொடங்கினார்.
அந்த நாளும் வந்தது.
ஓர் அறிஞர் பாபரின் அவையில் நுழைந்தார். அவர் பாபரின் பேரரசின் எல்லைக்கு அப்பால் வசிப்பவர். ஆகவே, அவர் பாபரிடம் அஞ்ச வேண்டிய நிலையில் இல்லாதவர். அவர் துணிச்சலாக, பாபரிடம், ''மஹாராஜா! தாங்கள் இயற்றிய புனித குரானின் மொழி பெயர்ப்பின் ஏட்டுச்சுவடிபிரதி ஒன்று எனக்கு வாசிக்க கிடைத்தது. அதில் ஓரிடத்தில் ஒரு பெரிய தவறு உள்ளது. அதைப் பற்றி நேரில் விளக்கம் பெறவே வந்துள்ளேன்,'' என்றார்.
பாபருக்கு கோபம் உண்டாகவில்லை. 'அப்பாடா!' என்று மகிழ்ச்சியடைந்தார். சபையில் இருந்தவர்கள் என்ன நடக்கப்போகிறதோ என்று கவலைப்பட்டனர். அறிஞரின் தலை உருளப் போகிறது என, அஞ்சினர்.
அந்த அறிஞர், பாபர் தவறு செய்துள்ள இடம் என்று மொழிபெயர்ப்பில் ஒரு பகுதியைச் சுட்டிக் காட்டினார். பாபர் அமைதியாக கவனமாக மரியாதையுடன் அறிஞரின் கருத்தைப் பரிசீலித்தார். அறிஞரிடம் கேள்விகள் கேட்டுக் கூடுதலான விளக்கமும் பெற்றுக்கொண்டார். ஆனால், அறிஞர் புரிந்துக்கொண்ட விதம் தவறானது என்றும், அவர் கூறிய திருத்தம் தேவையற்றது என்றும் பாபர் உணர்ந்தார். தன் மொழி பெயர்ப்பு சரியாகவே உள்ளது என்றும் பாபருக்கு நம்பிக்கை இருந்தது. ஆனாலும் தான் நினைத்ததை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அறிஞரைக் கோபிக்கவில்லை. அவமானப்படுத்தவில்லை. அவருடன் வாதம் புரியவில்லை.
''மிகவும் கவனமாகச் செய்யப்பட்ட இந்த மொழிபெயர்ப்பில் கூட உங்களால் தவறு கண்டுபிடிக்க முடிகிறது என்றால் நீங்கள் படித்திருக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது. நீங்கள் எடுத்துக்கொண்ட தீவிர ஆர்வத்திற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாசகர் ஓர் எழுத்தாளரின் நூலைக் குறை கூறினாலும் பரவாயில்லை. அதை அவர் படித்தார் என்பதே கூட எழுத்தாளரைத் திருப்பதிப்படுத்திவிடும். உமது கூர்ந்த அறிவு பரமிப்பூட்டுகிறது. இதோ உங்கள் எதிரிலேயே நீங்கள் சொன்னபடியே திருத்தம் செய்துகொள்கிறேன்.'' என்ற பாபர் தேவையான திருத்தம் செய்து, அதை அந்த அறிஞருக்குக் காண்பித்து, அவரது ஒப்புதலைப் பெற்ற பிறகு, அவருக்கு சன்மானம் அளித்து விடைகொடுத்து அனுப்பினார்.
அறிஞர் சபையைவிட்டுச் சென்றதும், பாபர் ஓலைச்சுவடியில் அறிஞர் கூறிய தான் செய்த திருத்தத்தை அடித்துவிட்டார். மொழிபெயர்ப்பை முன்னிருந்தபடியே வைத்தவிட்டார். பாபரின் அருகில் நின்றபடி அவர் முதலில் செய்த திருத்தத்தையும் பிறகு அதை அவர் ரத்து செய்து விட்டதையும் கவனித்த முதலமைச்சர் பணிவுடன் கேட்டார்.
''சக்கரவர்த்தி அவர்களே! நான் ஒரு சந்தேகம் கேட்பதற்குக் கருணையுடன் மன்னிக்கவும். இப்போது வந்த அறிஞர் தங்களது மொழிபெயர்ப்பில் ஓரிடத்தில் தவறு உள்ளது என்று கூறித் திருத்தம் சொன்னார். தாங்கள் ஆட்சேபிக்கவில்லை. எதிர்வாதம் செய்யவில்லை. அவர் சொன்னபடிக்கே மொழிபெயர்ப்பைத் திருத்தினீர்கள். அவருக்கு சன்மாமும் கொடுத்து மரியாதையுடன் அனுப்பினீர்கள். ஆகவே, நாங்கள் எல்லாரும், 'அவர் சொன்ன திருத்தம் சரியானது' என்று தாங்கள் ஒப்புக்கொண்டதாக நினைத்தோம். ஆனால், அவர் புறப்பட்டுச் சென்றதும் அவர் கூறித் தாங்கள் செய்த திருத்தத்தை அடித்துவிட்டீர்களே. மொழி பெயர்ப்பை முதலில் இருந்தபடியே வைத்துக் கொண்டுவீட்டீர்களே. இந்த ரகசியத்தைத் தாங்கள் விளக்கியருளினால் குழம்பிப்போன எங்கள் மனம் தெளிவடையும்,'' என்றார்.
பாபர் மெல்லச் சிரித்தபடி தமது குறுந்தாடியை வருடிக்கொண்டார்.
''என் நூலில் இதுவரை யாருமே குற்றம் கண்டுபிடித்ததில்லை. முழு நூலுமே நன்று என்றே அனைவரும் பாராட்டி வந்துள்ளனர். அவர்கள் உண்மையாகவே நூலை கவனமாக படித்தார்களா, போலியாக புகழ்கிறார்களா அல்லது அச்சத்தின் காரணமாக பாராட்டுகிறார்களா... என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது வந்து போன அறிஞர்தான் விதிவிலக்கு. அவர் என்னை சக்கரவர்த்தி என்ற கோணத்தில் பார்த்துத் தயங்கவில்லை; பயப்படவில்லை; எழுத்தாளர் என்ற உரைகல்லை வைத்தே என்னை மதிப்பீடு செய்திருக்கிறார். இதற்குத்தான் நான் ஆசைப்பட்டேன். எழுத்தாளரின் ஆயுள் கால எல்லைக்கு உட்பட்டது. ஆனால், அவர் எழுதியது அவருக்குப் பிறகும் வாழும். ஆகவே, அவருடைய நூல்களில் உள்ள தவறுகளும் தலைமுறை தலைமுறையாக நீடிக்கும்.
இதைக் கருத்தில் கொண்டே அந்த அறிஞர், அவர் தப்பென்று நினைத்ததைத் தயங்காமல் என் முகத்துக்கு நேரே சொன்னார்.
ஆனால், நான் எழுதியதில் எந்தவிதமான தவறுமில்லை. அவர் புரிந்துக்கொண்ட விதம்தான் தவறு. அதை அந்த அறிஞர் எதிரேயே கூறி அவரை அவமானப்படுத்த விரும்பவில்லை. எல்லோர் எதிரிலும் அவரை சிறுமைப்படுத்த இஷ்டப்படவில்லை. 'பிறர் மனத்தைப் புண்படுத்துவதால் துயரமே சூழும்' என்று புனித குரான் எச்சரித்துள்ளது. அறிஞருக்கு நான் சன்மானம் அளித்தது அவர் என் நூலை உழைத்து படித்தற்காகதான். தவறு என்று நினைத்ததை என் முகத்துக்கு நேரேயே சொன்ன அஞ்சாமைக்காக என் நூலில் தவறே இருக்கக் கூடாது என்று அவர் காட்டிய அக்கறைக்காக,'' என்றார் பாபர்.
பாபரின் பெருந்தன்மையான பேச்சைக் கேட்டு தர்பாரில் இருந்தவர்கள் மெய்சிலித்தனர். அனைவரும் மரியாதையுடன் சிரம் தாழ்த்தி பாபரை 'சலாம்' செய்தனர்.
***
