தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாய மோதிரம் (23) - இருகூர் இளவரசன்

மாய மோதிரம் (23) - இருகூர் இளவரசன்

மாய மோதிரம் (23) - இருகூர் இளவரசன்


PUBLISHED ON : பிப் 03, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 03, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: மாயமோதிரத்தை பெறுவதற்காக நம்பூதிரியின் உதவியை நாடினர் ராஜமாணிக்கம் கூட்டத்தினர். இனி-

நம்பூதிரி மீண்டும் உரக்கக் கத்தினார்.

''ஏய் சாத்தானே... என் கண்முன்னே வந்துவிடு!'' அவர் முன்னால் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் ஒரு மரப்பாச்சி பொம்மையைக் காட்டினார். அந்த பொம்மை நெருப்பு சூடு பட்டதும் நம்பூதிரிக்கும், ராஜமாணிக்கத்திற்கும், சுவாமிஜிக்கும் ஒரு குரல் கேட்டது.

''போதும்... என்னை சுடாதே? என்னால் நெருப்பின் சூடு பொறுக்க முடியவில்லை! இதோ வந்து விட்டேன்,'' எனக்கூறி எரிந்து கொண்டிருந்த நெருப்பில் புகையை அதிகமாக்கி, அந்த பட்ட மரத்தின் கிளையில் குட்டிச்சாத்தான் காணப்பட்டது.

''ஹா..ஹா..ஹா...'' என உரக்கச் சிரித்தது குட்டிச்சாத்தான்.

மூன்றடி உயரத்தில் கருத்த உருவம், கருவிழியில்லாத வெள்ளை விழிகள், கரடியைப் போல் உடலெங்கும் கருத்த ரோமங்கள், கைவிரல் நகங்களும், கால் விரல் நகங்களும், கூர்மையாக நீண்டு காணப்பட்டன. சுவாமிஜியும் சரி, ராஜ மாணிக்கமும் சரி குட்டிச்சாத்தான் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறார்களே தவிர நேரில் பார்த்தது இல்லை.

''என்னை எதற்காக அழைத்தாய்?'' எனக் கேட்டது குட்டிச் சாத்தான்.

''அரும் பெரும் காரியம் ஒன்றைச் செய்து முடிக்க வேண்டும்.''

''என்ன காரியம்?''

''முகுந்தன் என்கிற சிறுவனின் கையில் சக்தி வாய்ந்த மோதிரம் ஒன்று இருக்கிறது. அந்த மோதிரத்தை அவனிடமிருந்து பறித்துக் கொண்டு வந்து என்னிடம் தர வேண்டும்!''

''மோதிரமா? சக்திவாய்ந்த மோதிரமா? அது என்ன சக்தி? என்னை விடவும் சக்தி வாய்ந்தவர்கள் எவரும் இந்த உலகத்தில் இல்லை,'' ஹா...ஹா...வெனச் சிரித்தது சாத்தான்.

''சாத்தானே... என்னைப் பொறுத்தவரையில் நீயே சக்தியில் சிறந்தவன். அதனால்தான் நான் உன்னை நம்பிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் அந்த மோதிரம் எனக்காகவோ, நான் பயன்படுத்து வதற்காகவோ அல்ல. இதோ, என்னை நம்பி வந்த இவர்கள் இருவரும் பயன்படுத்து வதற்காகத்தான்,'' என்றார் நம்பூதிரி.

குட்டிச்சாத்தான் சுவாமிஜியையும், ராஜ மாணிக்கத்தையும் பார்த்தது.

''இவர்களுக்கு நான் உதவ வேண்டுமானால் உன்னைப் போல் இவர்களையும் என்னை வணங்கச் சொல்; நானே உலகைக் காப்பவன் என்று நம்பச் சொல்; சாத்தானே வணக்கத்திற்குரியவன் என்று என்னிடம் தஞ்சமடையச் சொல்; காவி உடையைக் களைந்து கறுப்பு உடையை உடுத்தச் சொல்; எனது சின்னமான வவ்வால் சின்னத்தை ஏற்படுத்தச் சொல்... செய்வார்களா...?''

சுவாமிஜியைப் பார்த்தார் நம்பூதிரி.

''குட்டிச்சாத்தானை நம்பித்தான் நான் வாழ்கிறேன்... இந்தக் குட்டிச்சாத்தான் நான் சொல்வதை எல்லாம் செய்யும். காரணம், நான் வணங்குவதே சாத்தானைத்தான். உங்களுக்கு உதவ வேண்டுமானால் சந்தானை வணங்குவதாக ஒப்புக் கொள்ளுங்கள்,'' என்றார் நம்பூதிரி.

''காவி உடை உடுத்திக்கொண்டு இறைவன் பெயரில் போதை மருந்துகளை விற்று லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் சுவாமிஜிக்கு பணம் மட்டுமே குறிக்கோள் என்கிற பட்சத்தில் கறுப்பு உடை மாற்றிக் கொண்டு கோடிக்கணக்கில் சம்பாதித்தால் என்ன, நமக்குத் தேவை சுகபோக வாழ்க்கை. சரி என்று ஒப்புக்கொள்ளலாம்,'' என்றார் ராஜமாணிக்கம்.

சுவாமிஜி ஒரு கணம் யோசித்தார். பிறகு, சரி என்று ஒப்புக்கொண்டார்.

''சரி... இந்த நிமிஷம் முதல் நான் சாத்தானின் வேதத்தை ஓதுகிறேன். சாத்தானே நான் வணங்கும் தெய்வம், என் பக்தர்களுக்கெல்லாம் பணத்தை அள்ளிக் கொடுத்து, அவர்களையும் கறுப்பு உடை அணியச் செய்து, அந்த உடையில் வவ்வால் சின்னத்தைப் பொறுத்தி, சாத்தானின் பக்தர்களாக உருவாக்கி தினம்தோறும் சாத்தான் பூஜை நடத்துகிறேன்,'' என வாக்குக் கொடுத்தார் சுவாமிஜி.

''ஹா...ஹா...ஹா... நல்லது; உங்கள் மூலம் உலகமெங்கும் என் நாமம் ஓதப்பட வேண்டும். சாத்தானே உலகம் என்றும், உலகைப் படைத்தும் காப்பதும் அனைத்தும் சாத்தானே என்கிற முழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்,'' என்றது சாத்தான்.

''செய்கிறேன்; கண்டிப்பாகச் செய்கிறேன்; ஆனால், அந்த மோதிரம் எனக்கு வர வேண்டும்,'' என்றார்.

''மோதிரம் என்ன அதை அணிந்திருக்கும் அந்தப் பையனையும் இந்த இடத்திற்கு இழுத்து வருகிறேன். பையனை எனக்காகப் பலி கொடுங்கள், மோதிரத்தை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். பையனின் விபரமும், அவன் இருக்கும் இடத்தையும் கூறுங்கள். நடுசாமம் முடிவதற்குள் என் வேலையை முடித்துவிட்டு நான் திரும்ப வேண்டும்''

''அதாவது பையனின் பெயர் முகுந்தன். அவன் ஒரு பெரிய அப்பார்ட்மெண்டில் வாட்ச்மேனாக இருக்கும் கந்தசாமியின் மகன். அந்த அப்பார்ட்மெண்டில் வாட்ச்மேனுக்கென்று சிறியதாய் ஒரு கெஸ்ட் ஹவுஸ் மாதிரியான வீடு இருக்கிறது. இந்த நேரம் அந்த வீட்டிற்குள் அவன் உறங்கிக் கொண்டிருப்பான்.

''அவனை உறக்கத்திலிருந்து விழிக்க வைப்பது எப்படி என்று எனக்கு தெரியும். அதே நேரம் அவனை விரட்டிக்கொண்டு, இங்கு வரவும் எனக்குத் தெரியும். என்னை அழைத்த என் பக்தனே... நான் எந்த உருவத்திற்குள் நுழைந்து இக்காரியத்தைச் செய்ய வேண்டும் என்று நீ கூறவில்லையே?''

''கறுப்பு நிற நாயின் உடலுக்குள் புகுந்து கொள்,'' என்றார் நம்பூதிரி.

''கறுப்பு நிற நாய் என்னிடமே இருக்கிறது. ஆனால், அந்த நாய் கொடூரமானது. கடித்துவிடும்,'' என்றார் சுவாமிஜி.

குட்டிச்சாத்தான் சிரித்தது.

''என்னைக் கண்டால் நாய், நரியிலிருந்து வாயில்லாத ஜீவன்கள் அனைத்தும் பயந்து ஓடும். அவைகள் கண்களுக்கு நான் நன்றாகத் தெரிவேன். நாயின் உருவத்திற்குள் சென்றால், நானும் கடிப்பேன்; குதறுவேன். உன் நாயை அழைத்து வா!''

சுவாமிஜி வேகமாகச் சென்று, நாயை அவிழ்த்து வந்தார். நாய் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. குட்டிச்சாத்தான் இருக்கும் பகுதிக்கும் வர மறுத்து பெரிதாகக் குரைத்தது. என்றாலும் சுவாமிஜி இழுத்துக்கொண்டு வந்தார்.

நம்பூதிரி நாயைப் பார்த்து, அவர் அருகில் இருந்த பானையில் நெல்மணிகள் நிறைந்திருந்தன. அந்த நெல் மணியை ஒருபிடி எடுத்தார். 'சாத்தான் நமஹ' எனக்கூறி நாயின்மீது எறிந்தார்.

நாய் மயங்கிபோய் படுத்துக் கொண்டது.

மரத்தின் கிளையில் நின்றிருந்த சாத்தான் நாயின் அருகில் வந்தது. நாயின் உடலுக்குள் ஒரு புகையைப்போன்று உருமாறி புகுந்தது.

படுத்திருந்த நாய் சட்டெனக் கண்விழித்தது. வெள்ளை நிறத்தில் இருந்த நாயின் விழிகள் சிகப்பு நிறத்தில், 'பல்ப்' எறிவது போல் தெரிந்தது. அங்குள்ளவர்களைப் பார்த்தது. பிறகு சடவு எடுப்பதுபோல் ஒருமுறை நெளிந்தது. அவர்கள் பூஜை செய்து கொண்டு இருந்த இடத்திற்கும், அந்த ஆசிரம வளாகத்தின் மதில் சுவருக்கும் சுமார் முன்னூறு மீட்டர் நீளமாவது இருக்கும். நாய் ஒரே தாவில் அந்தக் காம்பவுண்டுச் சுவர்மீது நின்றது. அங்கிருந்து மீண்டும் ஒரு தாவு தாவி தலைதெறிக்க ஓடியது.

நள்ளிரவு நேரம் என்பதால் நாய் சென்று கொண்டிருந்த பாதையில் பெரிதாக ஆள் நட மாட்டமோ வாகனங்களின் போக்குவரத்துக்களோ எதுவும் இல்லை. நாயின் ஓட்டம் மின்னல் வேகத்தில் இருந்ததால் ரோட்டில் படுத்திருந்த மற்ற நாய்கள் மற்றும் மாடுகள் போன்ற மிருகங்கள் தலைதெறிக்க ஓடின.

முகுந்தன் படுத்திருக்கும் வீட்டின் காம்பவுண்டுப் பக்கம் அந்த நாய் வந்து நின்றது. கேட்டின் ஓரம் ஸ்டூல்போட்டு முகுந்தனின் தந்தை கந்தசாமி அரைத் தூக்கத்தில் உட்கார்ந்திருந்தார். கேட்டிற்குள் நாய் நுழையாதபடி பூட்டியிருந்தார்.

நாய் ஒரே தாவில் மதில்சுவர் மீது நின்றது. ஏதோ ஒருவிதக் கெட்ட காற்று தன்மீது மோதியது போல் உணர்ந்தார் கந்தசாமி. சட்டெனக் கண்விழித்தார். சுற்றும் முற்றும் பார்த்த போது, பயங்கரமான நாய் ஒன்று மதில்சுவர்மீது நின்றிருப்பதைக் கண்டார்.

'இதென்ன விசித்திரமாய் இருக்கு! மதில்மேல் பூனையைப் பார்த்திருக்கிறேன். இவ்வளவு பெரிய நாயைக் கண்டதில்லையே. துரத்தி விடலாம் என நினைத்து அங்கிருந்த அவர் பயன்படுத்தும் தடியை எடுத்து ஓங்கினார்.

அவ்வளவுதான், ஒரே தாவில் கந்தசாமி மீது பாய்ந்தது நாய். நாயின் உருவத்தில் இருப்பது குட்டிச்சாத்தான் என்பதை உணர முடியாத கந்தசாமி...''ஆண்டவா காப்பாத்து!'' என்று பெருத்த அபயக் குரல் கொடுத்தார். அவ்வளவுதான் காம்பவுண்டு வீட்டுக்குள் இருந்த சிலரும், முகுந்தனும், வள்ளியம்மாளும் ஓடினர்.

கந்தசாமியைக் கடித்துக் குதறிக்கொண்டிருந்தது நாய்.

முகுந்தன் பார்த்துத் திகைத்தான்.

முகுந்தனைப் பார்த்ததும், நாய் கடிப்பதை நிறுத்திக் கொண்டது.

நாயின் கண்களுக்கு முகுந்தன் விரலில் அணிந்திருந்த மாயமோதிரம் மின்னியது, அதைப் பார்க்க கண்ணும் கூசியது.

நாய் முகுந்தன் மீது பாய்ந்து அவனை இழுத்துக்கொண்டு செல்லலாம் என, நினைத்தது.

''மாயமோதிரம், இந்த நாயிடமிருந்து நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்,'' என்று கேட்டுக் கொண்டான்.

நாய் சட்டென முகுந்தன் மீது பாய முகுந்தன் மோதிரவிரலால் ஒரு குத்துவிட்டான். நாய் பத்தடி உயரப் பறந்து தொப்பெனக் கீழே விழுந்தது.

ஆட்கள் கந்தசாமியைத் தூக்கிக் கொண்டு ஓரமாக நின்றனர்.

''இது ஏதோ வெறிபிடித்த நாய் போல் தெரிகிறது. உடனே போலீசுக்குத் தகவல் சொன்னால் நாயைக் கொல்ல துப்பாக்கியுடன் வருவார்கள்'' என்றனர் சிலர்.

''அதற்குள் முகுந்தனைக் காப்பாற்ற வேண்டும்,''

நாய் மீண்டும் முகுந்தன் மீது பாய, முகுந்தன் நாயின் வாயை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டான். அதைக் கடிக்க விடாமல் புரண்டான். நாயும் முகுந்தனும் போராடுவதை அனைவரும் வேடிக்கை பார்த்து வாய்பிளந்து நின்றனர்.

காம்பவுண்டு கேட்டைத் திறந்தான் முகுந்தன்.

நாய் அவனை முறைத்தது.

இது சாதாரண நாய் அல்ல, ஏதோ ஒரு விபரீத சக்தியுள்ள நாயாய் இருக்க வேண்டும். தனது மோதிரக் கையால் குத்துப்பட்டும் தன்னுடன் போராட நினைக்கிறதே என, யோசித்தான் முகுந்தன்.

நாய் மீண்டும் மோதியது. இருவரும் கட்டிப் புரண்டு ரோட்டுக்கு வந்தனர்.

நாய் முகுந்தனின் கால்டவுசரைக் கடித்து இழுத்துச் சுருட்டி வீசியது. முகுந்தனும் பத்தடி தூரம்பறந்து விழுந்தான்.

''இதென்ன நாயா பேயா?'' என ஒருவர் கேட்டார்.

அப்படிக் கேட்டவரை நாய் முறைந்தது.

முகுந்தன் அங்கிருந்து ஓட ஆரம்பித்தான். நாய் அவனை விரட்டியது. இருவரின் ஓட்டமும், மின்னல் வேகத்தில் இருந்தது. பல தெருக்கள் ஓடி, ஓடி மோதிரம் கிடைத்த மலைமீது ஓடினான் முகுந்தன்.

நாய் விட்டபாடில்லை. தனியாக மாட்டி விட்டான். இதுதான் தக்க தருணம் என்று அவனை விரட்டிக் கொண்டே இருந்தது.

நள்ளிரவு... மலைமீது தெரியும் விளக்கு வெளிச்சத்தை நோக்கி ஓடினான். அந்த வெளிச்சத்தில் நான்கு சுவர்கள் மட்டுமே எழுப்பப்பட்டு கதவு கூட இல்லாமல் இருந்த அறைக்குள் ஆஞ்சநேயர் சிலை இருந்தது. ஓடிச்சென்று 'ஜெய் ஆஞ்சநேயா' என்று ஆஞ்சநேயரைக் கட்டிக்கொண்டான். முகுந்தன்.

அவ்வளவு தூரம் துரத்திவந்த குட்டிச்சாத்தான், ஆஞ்சநேயரைக் கட்டிக் கொண்டிருக்கும் முகுந்தன் மீது பாய்ந்தது.

-தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us