PUBLISHED ON : பிப் 03, 2012

ஆனந்தன் ஒரு பெரிய ஏற்றுமதி நிறுவனத்தில் பணி புரிந்து வந்தான். அவனுக்கு வேலை செய்வது என்றால் அழுகை வரும். ஜாலியாக ஊர் சுற்றுவது என்றால் மிகவும் பிடிக்கும். அடிக்கடி லீவு எடுப்பான். அதுவும் மாதத்தில் பாதி நாள் வேலைக்குப் போக மாட்டான்.
பொறுத்துப் பார்த்த மானேஜர் பொறுமை இழந்து, ''ஆனந்தா! இனி நீ லீவு எடுக்கக் கூடாது. எடுத்தால் உன் சீட்டை கிழித்து விடுவேன்,'' என்று அவனைக் கடுமையாக எச்சரித்தார்.
அதற்கு மறுநாள் ஆனந்தனின் மாமனாரிடம் இருந்து மஞ்சள் தடவிய கடிதம் ஒன்று வந்தது. பிரவசத்திற்குப் பிறந்த வீட்டிற்கு போய் இருந்த அவனுடைய மனைவி அழகிய ஆண் குழந்தையைப் பெற்று இருக்கிறாள் என்றும் கூடவே, உங்கள் மகனையும், மனைவியையும் பார்ப்பதற்கு உடனே புறப்பட்டு வாருங்கள்,'' என்று கடிதத்தில் எழுதி இருந்தது.
ஆனந்தனுக்கு அதைப் படித்ததும், உடனே ஊருக்குப் பறந்து செல்ல வேண்டும் என்ற துடிப்பு ஏற்பட்டது. அப்பொழுது, 'ஆனந்தா! இனி லீவு எடுக்கக் கூடாது. எடுத்தால் உன் சீட்டைக் கிழித்து விடுவேன்' என்று மானேஜர் எச்சரித்தது அவனுக்கு ஞாபகம் வந்தது.
அதனால் அப்பொழுது ஊருக்குப் போகும் முடிவைக் கை விட்டு, ஒரு திட்டத்துடன் அலுவலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றான்.
அலுவலகத்திற்குச் சென்றதும் தன் மாமனருக்கு கடிதம் எழுதினான். அதில், மானேஜர் ஒரு மாங்கா மடையன் அவன் லீவு தரமாட்டான். அதனால் என் மனைவிக்கு ரொம்ப சீரியஸ் என்று தந்தி அடியுங்கள். அதை மானேஜர் மடையனிடம் காட்டி லீவு வாங்கிக் கொண்டு புறப்பட்டு வருகிறேன், என்று எழுதி முடித்தான்.
அந்தச் சமயத்தில் அவன் இருந்த பக்கமாக மானேஜர் வரவே, எழுதிய கடிதத்தை அவசரமாக ஒரு பையில் திணித்தான் ஆனந்தன். அதைக் கவனித்துக் கொண்டிருந்த மானேஜர், ''ஆனந்தா அந்த பையைக் கொடு,'' என்று, பையை வாங்கிக் கொண்டு தன் அறைக்குப் போய் விட்டார்.
ஆனந்தன் ஆடிப் போனான்.
சிறிது நேரத்தில், மானேஜர் அவனை அழைத்தார். நடுக்கத்துடன் அவர் அறைக்குச் சென்றான் ஆனந்தன்.
''ஆனந்தா! நீ உன் மாமனாருக்கு எழுதிய கடிதத்தைப் படித்துப் பார்த்தேன். என்னை மாங்கா மடையன் என்று எழுதி இருக்கிறாய். அதைப் பற்றிக் கவலை இல்லை. குழந்தையைப் பெற்று நலமாக இருக்கும் உன் மனைவிக்கு சீரியஸ் என்று தந்தி கொடுக்கும்படி எழுதி இருக்கிறாயே! அது மிகவும் தவறு. நீ பொறுப்பு இல்லாமல் ஜாலியாக ஊர் சுற்றுவதால் உனக்கு லீவு தரமாட்டேன் என்று சொன்னேன். உனக்கு லீவு தானே வேண்டும்? எடுத்துக் கொள்,'' என்றார் மானேஜர்.
ஆனந்தனுக்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை? இவரைப்போய் மாங்காய் மடையன் என்று சொல்லிவிட்டோமே. இவர் மாங்கா மடையன் இல்லை ஈரமான மனம் படைத்த மனிதர். அவசியமான காரியத்திற்கு என்றால் லீவு கொடுக்கத் தெரிந்த அற்புதமான நிர்வாகி என்று அவன் மனம் முணுமுணுத்தது. தவறை உணர்ந்தவனாய் மன்னிப்பு கேட்டான் ஆனந்தன்.
***
