தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மந்திரக்கல்!

மந்திரக்கல்!

மந்திரக்கல்!


PUBLISHED ON : ஏப் 27, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 27, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறுசேரி கிராமத்தில், தவசி என்ற விறகு வெட்டி வாழ்ந்து வந்தான்; காட்டில், தினமும் விறகு வெட்டுவது வழக்கம்.

ஒரு நாள் -

வழக்கம் போல், விறகு வெட்டுவதற்காக, கோடாரியுடன் சென்றான்.

திடீரென்று, கடுமையான மழை பெய்தது; விறகு வெட்ட முடியவில்லை; ஒரு குகையின் உள்ளே, ஒதுங்கி நின்றான்.

அப்போது, உள்ளே யாரோ இருமும் சத்தம் கேட்டது.

ஒரே இருட்டு; மெல்லத் தடுமாறியபடியே நடந்துச் சென்றான்.

குகையின் உட்பக்கம், பெரிய மேடை இருந்தது; அதன் மேல், விளக்கு ஒன்று எரிந்தது.

அந்த விளக்கு வெளிச்சத்தில், வயதான முனிவர் ஒருவர் தெரிந்தார்; அவர் அருகே சென்றான் தவசி.

''அப்பனே... நெடு நாட்களுக்குப் பின், இக்காட்டில், ஒரு மனிதனை பார்க்கிறேன்; என் மந்திரக் கல்லை பெறுகிற அதிர்ஷ்டசாலி நீ தான்...'' என்றார்.

குழப்பத்துடன் அவரைப் பார்த்தான், தவசி.

''வணங்குகிறேன் ஐயா; மந்திரக்கல் என்று தாங்கள் கூறுகிறீரே, அது என்ன...'' என்று ஆவலோடு கேட்டான், தவசி.

''அப்பனே... என்னிடத்தில் சக்தி வாய்ந்த ஒரு மந்திரக்கல் இருக்கிறது; நீ என்ன கேட்கிறாயோ, அதை உடனே கொடுத்து விடும்; ஆனால், அக்கல்லை, உன் விரலால் தேய்த்தபடி, ஒருமுறை தான் கேட்க வேண்டும்.

''மறுமுறை கேட்டால், அக்கல்லால் எந்தப் பயனும் இல்லை; அதனால், கேட்கிற போதே, கவனமாக கேட்க வேண்டும்; தப்பித் தவறி தவறாக கேட்டு விட்டால், அதுவும் பலித்து விடும்; எனவே, இக்கல்லை மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும்...'' என்றார்.

அதை கேட்டு, அளவிலா மகிழ்ச்சி அடைந்தான் தவசி.

'எத்தனையோ நாட்கள் விறகு வெட்டி, குறைந்த விலைக்கு விற்று, அரை வயிறு, கால் வயிறு கஞ்சி குடித்து வருகிறோம்; இப்போது நம் கஷ்டம் தீர, நல்ல வழி கிடைத்து விட்டது; இந்த மந்திரக்கல்லின் உதவியால், பெரும் பணக்காரனாகலாம்' என்று முடிவு செய்தான்.

அந்த முனிவர், மந்திரக்கல்லை கொடுக்கவே, பய, பக்தியுடன் வாங்கி, விடைபெற்று, குகையை விட்டு வெளியே வந்தான்; அந்நேரம் காட்டில் மழை விட்டிருந்தது.

'மனைவியிடம் இக்கல்லை பற்றி தெரியப்படுத்துவோம்; அவள் மிகவும் மகிழ்ச்சியடைவாள்' என்ற எண்ணத்தோடு, குடிசைக்கு வந்தான்.

''என்னங்க... மழையால், விறகு வெட்டாமல் திரும்பி வந்துடீங்களே... இன்றைய பொழுதை எப்படி ஓட்டுவது...'' என்று கவலைப்பட்டாள் அவன் மனைவி.

''இனிமேல் நாம் அதிர்ஷ்டசாலிகள். யாருக்குமே கிடைக்காத மந்திரக்கல் கிடைத்துள்ளது; அதை வைத்து நாம், கோடீஸ்வரராக மாறி விடலாம்...'' என்றபடி, அந்த மந்திரக்கல்லை காட்டினான், தவசி.

''என்ன... மந்திரக்கல்லா... எனக்கு ஒன்றுமே புரியலயே; கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களேன்...'' என்றாள். அவனும், நடந்த விஷயங்களை கூறினான்; மகிழ்ச்சியடைந்தாள்.

''இந்த கல்லிடம் என்ன கேட்கலாம்...'' என்றாள்.

''எதுவாக இருந்தாலும், ஒரே ஒருமுறை தான் கேட்க வேண்டும்; மறுமுறை கேட்டால் கொடுக்காது... நாம் கோடீஸ்வரராக வேண்டும் என்று கேள்...'' என்றான் தவசி.

''கோடீஸ்வரராக மாறிவிட்டால், நம்மிடம் ஏராளமான பணம் இருக்கும்; அதன்பின், திருடர்கள் வந்து, நம் பணத்தை எல்லாம் களவாடிச் சென்று விடுவர். அதனால், ஏராளமான தங்க நகைகள் வேண்டும் என்று கேட்கிறேன்...'' என்றாள்.

''தங்க நகைகளை திருடர்கள் விட்டு வைப்பரா... அதையும் திருடிச் சென்று விடுவர்...''

''அப்படியானால், பெரிய முத்து மாலையும், வைர நகைகளும் வேண்டுமென்று கேட்கிறேன்...'' என்றாள் மனைவி.

''அதையும், கள்வர்கள் திருடிச் சென்று விடுவர்...''

''அப்படியானால், அந்த கள்வர்களை விரட்ட, இரண்டு பூதங்களையும் கேட்போம்; அந்த பூதங்கள் அவர்களை விழுங்கிச் செல்லட்டும்...'' என்று ஆவேசமாக கூறினாள்.

அந்நேரத்தில், அவளது கை விரல், அவளையும் அறியாமல், அந்த மந்திரக்கல்லை உராய்ந்து விட்டது; உடனே, திடீரென அந்த இடத்தில், இரண்டு பூதங்கள் தோன்றின.

மின்னல் வேகத்தில், தவசியையும், அவன் மனைவியையும் விழுங்கி ஏப்பம் விட்டன.

என்ன குட்டீஸ்... பேராசையால் தங்களுக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை, இழந்து விட்டனர் பார்த்தீர்களா... நீங்க எப்பவும் புத்திசாலிகளா இருக்கணும்; பேராசைக்காரர்களா இருக்க கூடாது. சரியா...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us