தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அவன் பெயர் அனிருத்! (25)

அவன் பெயர் அனிருத்! (25)

அவன் பெயர் அனிருத்! (25)


PUBLISHED ON : ஏப் 27, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 27, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: கோடீஸ்வரர் ஒலிவேரா, அனிருத்தை கடத்தி விட்டார் என வழக்கு தொடுத்தனர் அனிருத்தின் பெற்றோர். ஒலிவேரா தரப்பு வக்கீலை வாதம் செய்ய அழைத்தார் நீதிபதி. இனி -

''என் கட்சிக்காரர் ஒலிவேரா கிறிஸ்டோபர், சமூகத்தில் மதிப்பு வாய்ந்தவர்; கோடீஸ்வரர்; ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வேலை கொடுத்து, வாழ வைப்பவர். அவருக்கு இரு குழந்தைகள்; மூத்தது பெண்; பெயர் அல்வினா கிறிஸ்டோபர், வயது, 21; இரண்டாவது, ராகுல் கிறிஸ்டோபர் வயது, 12.

''இவரைத் தான் எதிர்த்தரப்பு, அனிருத் என்கிறது; என் கட்சிக்காரரை இழிவுபடுத்த, எதிர் தரப்பு கடத்தல் நாடகம் ஒன்றை அரங்கேற்றியுள்ளது. ராகுல், ஒலிவேரா கிறிஸ்டோபருக்கு பிறந்தவன்; இஸபெல்லா மருத்துவமனையில், பிப்ரவரி 2, 2000 அன்று பிறந்தான். இதோ, பிறப்பு சான்றிதழின் ஒரிஜினல்...'' நீட்டினார், வக்கீல்.

சான்றிதழ், நீதிபதி கைக்குப் போனது.

''ராகுல் கிறிஸ்டோபர் பிறந்த போது எடுத்த புகைப்படம் இதோ... இது, ஒரு வயதில், இரண்டு வயதில், மூன்று வயதில், நான்கு வயதில், ஒன்பது வயதில் எடுத்த புகைப்படங்கள்...'' அனிருத் முகத்தை வைத்து, 'மார்பிங்' செய்யப்பட்ட புகைப்படங்களை சமர்ப்பித்தார்.

''ராகுல், நான்கு வயதில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனையில் இருந்த போது, அவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சாட்சியம் கூற இருக்கிறார்! ராகுல், அனிருத் இல்லை என்பதற்காக, பல சாட்சிகளை, இந்த நீதிமன்றத்தில் சமர்பிக்க உள்ளேன். ராகுலை, பிறந்ததிலிருந்து, பனிரெண்டு வயது வரை, பார்த்துக்கொண்ட தாதி, ராகுலின் பள்ளி ஆசிரியை, நண்பர்கள் இதில் அடக்கம்...''

''ஒரு பணக்காரனின் மகனை சொந்தம் கொண்டாடி நிற்கிறது, ஒரு நடுத்தர குடும்பம்; அக்குடும்பத்தின் உள்நோக்கம் என்ன என்பதை இந்த நீதிமன்றம் ஆராய வேண்டும். எதிர்தரப்பு, ராகுலை நாகப்பட்டினத்தில் கடத்தியதாக, இரு புகைப்படங்கள் சமர்ப்பித்துள்ளது.

''அப்படங்களில், எங்காவது கிறிஸ்டோபர் தெரிகிறாரா... அப்புகைப்படங்கள் போலியானவை; சுனாமி வரும் என, முன்னமே தெரிந்து கடத்தியதாக எதிர்த்தரப்பு காதில் பூ சுற்றுகிறது...

''சந்தீப் என்பவர், கிறிஸ்டோபரிடம் வேலை பார்த்து, அவரின் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தவர்; அவர் கொடுத்த வாக்குமூலம் உள்நோக்கம் கொண்டது; சித்தானந்தா ஸ்வாமிகளை, கிறிஸ்டோபர் சந்தித்ததே கிடையாது...

''எதிர்த்தரப்பு சொல்வதற்காக, டி.என்.ஏ., டெஸ்ட் எடுப்பதெல்லாம், கோர்ட்டின் நேரத்தை விரயம் செய்யும் வேலை...

''எல்லாவற்றுக்கும் மேலாக, சிறுவன் ராகுல் கிறிஸ்டோபரின், சத்திய பிரமாணத்தை இந்த நீதிமன்றம் பரிசீலித்த பின், எதிர்தரப்பின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என, பணிவன்புடன் வேண்டுகிறேன்...''

மோகன சுந்திரத்திடம் திரும்பினார் நீதிபதி.

''இப்போது உங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைக்கலாம்...''

மோகனசுந்தரம் தொண்டையை செருமிக் கொண்டார்.

''மாண்புமிகு நீதிபதி அவர்களே... இந்தியாவில் தான், அதிக குழந்தைகளும், பெண்களும் அதிகமாக கடத்தப்பட்டு, பிச்சையெடுத்தல், பாலியல் தொழில் போன்றவற்றில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

''முதன்முறையாக, ஒரு கோடீஸ்வரர் அபூர்வராசியில் பிறந்த சிறுவனை கடத்தி, மரணத்தருவாயில் இருக்கும் மகனுக்கு, பதிலியாக்கி இருக்கிறார்...

''தன் சார்பை பலப்படுத்தும் பொருட்டு, பல, 'மார்பிங்' புகைப்படங்களை எதிர்த்தரப்பு சமர்ப்பித்து இருக்கிறது. சில, பல, 'செட்டப்' பொய் சாட்சிகளை நீதிமன்ற கூண்டுக்கு கொண்டு வந்து நிறுத்துகிறது...

''ராகுல் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முழு விபரங்களை, அம்மருத்துவமனை வெளியிட வேண்டும்; மருத்துவமனையில், ஒருவர் இறந்து விட்டால், அந்த மருத்துவரின் அலட்சியத்தால் இறந்தாரா என, ஆராயும் மரண தணிக்கை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்...

''ஈஸ்வர் - ஜோதிலட்சுமியின் மனு பொய்யானதல்ல; அவர்களின் மகன் அனிருத், 2004 சுனாமியில் காணாமல் போனது உண்மை. அனிருத்தை தேடிய நாகை காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையை இதோ சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து, எட்டு ஆண்டுகளாக பல மாவட்டங்களில், ஈஸ்வர் - ஜோதிலட்சுமி தம்பதி காணாமல் போன அனிருத்தை தேடி இருக்கின்றனர்...

''அனிருத் கடத்தப்பட்ட இரு புகைப் படங்கள் எடுத்த ஜப்பானிய அமெச்சூர் போட்டோ கிராபர் அகிகிகோ, வன்கொலை செய்யப்பட்டிருக்கிறார். அகிகிகோ கொலைக்குப் பின், கிறிஸ்டோபரின் மாயக்கரங்கள் ஒளிந்திருக்கின்றன என, சந்தேகப் படுகிறேன். இன்டர்போல் மூலம், டோக்கியோ மெட்ரோ பாலிட்டன் போலீசின் விசாரணை அறிக்கையை பெற்றால், என் வாதம் வலுப்பெறும்...

''அனிருத் கடத்தலுக்கு அடித்தளமாக இருந்த சித்தானந்த ஸ்வாமி தற்சமயம் உயிருடன் இல்லை; 2004ல் ஸ்வாமி கோவாவின் பனாஜிக்கு உள்நாட்டு விமானம் மூலம் பறந்திருக்கிறார் என்பதற்கான ஆதாரத்தை, இதோ சமர்ப்பிக்கிறேன்...''

ஆதாரம் நீதிபதி பார்வைக்குப் போனது.

''எட்டு ஆண்டுகள், ஒரு தாய், பெத்த மகனை காணாமல், தினம் தினம் செத்து பிழைத்திருக்கிறார். அவனை தேடி, தமிழகத்தின் பல இடங்களில் அலைந்திருக்கிறார்; ஒரு கோடீஸ்வரனின் மகனை, நடுத்தர குடும்பத்து தாய் சொந்தம் கொண்டாடுகிறார் என, இந்த நீதிமன்றம் பார்க்க கூடாது...

''ஒலிவேரா கிறிஸ்டோபர், தன் இறந்து போன மகனின் ஸ்தானத்தை இட்டு நிரப்பவும், விசேஷ நட்சத்திரத்தில் பிறந்த சிறுவனை தன் மகனாக்கி, தன் அதிர்ஷ்டத்தை மேம்படுத்தவும், அனிருத் என்ற சிறுவனை கடத்தி இருக்கிறார்...

''டி.என்.ஏ., டெஸ்ட்டில், ராகுல் தான், அனிருத் என்பது நிரூபணமாகாவிட்டால், இந்த நீதிமன்றம் கொடுக்கும் தண்டனையை ஏற்க நானும், மனுதாரரும் தயாராய் இருக்கிறோம். தன் கன்றை, தேர் ஏற்றி கொன்று விட்டான் இளவரசன் என, ஒரு பசு முறையிட்ட போது, மன்னன் விசாரித்து, மகனை தேர் காலில் இட்டு கொன்றான்...

''மடியில் கனம் இருந்தால் தானே, வழியில் பயம் பிறக்கும்; கிறிஸ்டோபரின் மகன் தான் ராகுல், அவன் அனிருத் இல்லை என நிரூபித்து, மகனை பனாஜிக்கு கூட்டிச் செல்லட்டும்; ஆகவே, மாண்புமிகு கோர்ட்டாரை, டி.என்.ஏ., டெஸ்ட்டுக்கு உத்திரவிட வேண்டுகிறேன்...''

நீதிபதி, ''சிறுவன் ராகுலா, அனிருத்தா என்பதை உறுதி செய்ய, டி.என்.ஏ., டெஸ்ட்டுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதற்கான, சாம்பிள்களை, சம்பந்தப்பட்டவர்களிடம் சேகரிக்க, பரிசோதனைக் கூட அதிகாரிக்கு உத்தரவிடுகிறேன்...''

பற்களை, 'நற நற' வென கடித்தார், கிறிஸ்டோபர்.

கிறிஸ்டோபர், ஈஸ்வர் - ஜோதிலட்சுமி, அனிருத்தின் தலை முடிகளை, தடய அறிவியல் நிபுணர், கத்திரித்தார்; உள் கன்னத்து சதையை சிறிது சுரண்டி எடுத்தார்.

சாம்பிள்களுக்கு, 'லேபிள்' ஒட்டி, பெங்களூரு பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டது.

நீதிபதி சோதனை அறிக்கையை விரித்தார்.

அதில், ராகுல் எனப்பட்ட அனிருத், ஈஸ்வர் - ஜோதிலட்சுமி தம்பதியினருக்கு பிறந்தவன் என்பது நிரூபணமாகியுள்ளது என்பதை, பரிசோதனைக்கூடம் சான்றுரைத்திருந்தது.

எழுந்தார் மோகன சுந்தரம்.

''நாம், டி.என்.ஏ., டெஸ்ட் செய்த பரிசோதனைக்கூடம், ஏ.ஏ.பி.பி., தரச்சான்றிதழ் பெற்றது; இதுவரை, ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட சாம்பிள்களை சோதித்து, முடிவை அறிவித்துள்ளனர். 150 நகரங்களிலிருந்து சாம்பிள்களை பெற்று சோதித்த அனுபவம் அவர்களுக்கு உண்டு. இந்த நீதிமன்றம் சிறுவனை அனிருத் என்று அறிவித்து, அவனது பெற்றோருடன் அனுப்ப, உத்தரவிடுமாறு வேண்டுகிறேன்...''

''நிறுத்துங்கள்...'' என, ஆங்கிலத்தில் கூவினான், அனிருத்.

நீதிமன்றத்தின் அனைத்து முகங்களும், அவன் பக்கம் திரும்பின.

''நான், நீதிபதியிடம் சில விஷயங்களை முறையிட விரும்புகிறேன்...''

''கூண்டில் ஏறி, நீ விரும்பியதை கூறலாம்...''

''நீதிபதி அவர்களே... 100 டி.என்.ஏ., டெஸ்ட்கள் செய்து, என்னை அனிருத் என்று அறிவித்தாலும் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்; எதனாலும், என்னையும், என் தந்தை ஒலிவேரா கிறிஸ்டோபரையும் பிரிக்க முடியாது; நான், ஈஸ்வர் - ஜோதிலட்சுமி தம்பதியினருடன் செல்ல விரும்பவில்லை...

''ஒன்று, என்னை கிறிஸ்டோபருடன் செல்ல அனுமதியுங்கள் அல்லது சிறுவர் காப்பகத்தில் சேர்க்க உத்தரவிடுங்கள்; 18 வயது நிரம்பியவுடன், நான் தந்தை கிறிஸ்டோபருடன் இணைந்து கொள்கிறேன்...''

நீதிபதி முகம் வியர்த்தார்.

''என்னுடைய, 30 ஆண்டு சட்ட வாழ்க்கையில், இதுபோன்ற வழக்கை, கண்டதில்லை. என்ன செய்யலாம் மிஸ்டர் மோகன சுந்தரம்...''

அவர் காதுகளில், கிசுகிசுத்தான் இளவேனில்.

மோகனசுந்தரம் முகம் சூரியனித்ததது.

''கனம் கோர்ட்டார் அவர்களே... தாய் ஜோதிலட்மி, அனிருத் இருவரையும், இரண்டு மணிநேரம் தனியே விடுங்கள்; அதற்கு பின், அனிருத் எடுக்கும் எந்த முடிவுக்கும், கட்டுப்படுகிறோம்...''

ஜோதிலட்சுமியும், அனிருத்தும் தனி அறைக்கு நடந்தனர்.

அனிருத்தின் நெற்றிப்பொட்டினை தடவி விட்டு, மந்திரம் போல், 'முணு முணு'த்தான் இளவேனில்.

''பிறந்ததிலிருந்து காணாமல் போன வரை, நடந்த நிகழ்வுகள் அனைத்தும், அச்சு அசலாய் அனிருத்துக்கு ஞாபகம் வரட்டும்...''

அனிருத்தின் நியூரான் செல்களின் காட்சி தொகுப்புகளில் பிரளயம் பூத்தது.

- தொடரும்...

- ஆர்னிகா நாசர்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us