தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாயவிழிகள்! (9)

மாயவிழிகள்! (9)

மாயவிழிகள்! (9)


PUBLISHED ON : செப் 09, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: சிறுமியர் தியாவும், அனுவும் தோப்பு கிணற்றில் குடித்த தண்ணீரால் வினோத சக்தி பெற்றிருந்தனர். இருவரும் கிராமத்துக்கு செல்லும் வழியில் மர்ம வாகன நடமாட்டம் இருப்பதை கண்டனர். அதை உற்று நோக்கி நடப்பதை அறிய முயன்றனர். இனி -

அனு கூறியது போல், மேடான பகுதி இருந்தது. அதில் ஏறி பார்த்தபோது, அந்த வாகனம் ஒரு வேன் என்பது தெரியவந்தது.

''அக்கா... இம்மாதிரி வாகனங்கள் வந்ததே இல்லை. பெரும்பாலும், ஜீப் அல்லது மரம் எடுத்துச் செல்ல லாரி வரும். மற்ற வாகனங்களுக்கு இங்கு அனுமதி கிடையாது. ஏதோ தப்பான செயல் நடப்பதாக படுகிறது...''

''என்ன சொல்ற அனு...''

''வழக்கத்திற்கு மாறாக, எதுவோ நடக்கிறது. என்னன்னு பார்க்கணும்...''

''நாம் என்ன செய்ய முடியும் அனு...''

''அக்கா... இது, எங்க ஊர். என்னோட மக்கள்; எதுவானாலும், நாங்க தான் கவனிக்க வேண்டும்...''

குட்டி பெண் அனு பேசுவதை கேட்டு, ஆச்சரியபட்டாள் தியா.

அந்த வேன் ஓரிடத்தில் நின்றது. அதில் இருந்து இறங்கியவர், ஒரு மரத்துப் பக்கம் ஒதுங்கினர். கூர்ந்து கவனித்தாள் அனு.

''அக்கா... ஏதோ பெரிதாக நடக்கிறது...''

''எப்படி சொல்ற...''

''அந்த வாகனத்துக்குள் சத்தம் கேட்கிறது. அதுவும் குழந்தைகளின் குரல்...''

உற்று கவனித்தாள் தியா.

''எனக்கு கேட்கலையே...''

''இல்லை அக்கா, கேட்கிறது. சிறிது கவனித்தால், உன்னாலும் கேட்க முடியும்...''

''எனக்கு கேட்கல...''

''அந்த வேன் இருக்கும் திசையிலிருந்து, நம்மை நோக்கி காற்று வீசுகிறது. அதனால், ஒலியை கவனித்தால் நம்மால் உணர முடியும்...''

''ஆமா... உற்று கவனிச்சதும் தெரியுது, ஏதோ சத்தம் கேட்கிறது...''

''வா அக்கா... அருகில் சென்று பார்க்கலாம்...''

அனு சொல்ல, ஆர்வமுற்றாள் தியா.

அங்கிருந்த ஒரு ஒற்றையடி பாதை வழியாக, அந்த வேனை நோக்கி சென்றனர்.

வேனை நெருங்க நெருங்க குழந்தைகளின் கூச்சல் கேட்டது. அந்தக் குரல்களை கவனித்ததும், அதிர்ந்தனர்; அவர்களுக்குள் பெரும் பதற்றம் தோன்றியது.

அவர்களுடன் விடுதியில் தங்கி படிக்கும் சக தோழியரின் குரல் போல் இருந்தன.

''நம்ம தோழியர் குரல் மாதிரி இருக்குது அனு...''

''ஆமா அக்கா, வா பார்க்கலாம்...''

வேனை நெருங்கிய சமயம், மரத்தடியில் ஒதுங்கியிருந்த இருவர் திரும்பி வந்தனர். அவர்கள் கண்ணில், அனுவும், தியாவும் பட, ''ஹே... வீரா... ரெண்டு பிள்ளைங்க தப்பித்து ஓடுகின்றனர் பிடி...'' என்றபடி பாய்ந்து வந்தான் ஒருவன்.

ஒரு நிமிடம் நிதானித்த மற்றவனும், பின் தொடர்ந்து வந்தான்.

சட்டென தியாவின் கையை பிடித்து இழுத்தபடி, ''அக்கா... என் பின்னாடியே வா...'' என்ற அனு, மரங்களுக்கு இடையில், புதர் பகுதிக்குள் அனாயசமாக தாவினாள்.

அவளது லாவகமான தாவலையும், ஓட்டத்தையும் பின் தொடர முடியாமல் தடுமாறினாள் தியா.

முதுகில் மாட்டியிருந்த பை பாரமாக இருந்தது.

''என்னால் வேகமாக ஓடி வர முடியல... கொஞ்சம் மெதுவா போ அனு...''

''நின்றால் மாட்டிக் கொள்வோம்; கொஞ்சம் சமாளித்து, என் கூடவே ஓடி வா...''

இடது புறம், வலது புறம் என்று மாறி மாறி ஓடி, துரத்தி வந்தவர்களை விட்டு இருவரும் விலகினர். அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வந்திருந்தனர்.

நிறைய கிளைகளுடனும், அடர்ந்த இலைகளுடனும், ஒரு குட்டையான மரம் அங்கு நின்றது.

''அக்கா... உனக்கு மரம் ஏற தெரியுமா...''

''ஐயையோ... அதெல்லாம் எனக்கு பழக்கம் இல்லை...''

''இப்போ பழகிக்கோ அக்கா...''

''முயற்சி செய்றேன்...''

''நான் சொல்வது மாதிரி, கிளையில் ஏறிடு. இங்கே மறைவாக நின்று கொள்ளலாம். துரத்துபவர்கள் சென்ற பின், கீழே இறங்கலாம்...''

''என்னால் முடியுமா என்று தெரியவில்லையே...''

''கிளைகள் எல்லாம், அருகே தான் இருக்கிறது. சுலபமாக ஏறி விடலாம் அக்கா... முயற்சி செய்...''

அது சுலபமாக தான் இருந்தது தியாவிற்கு.

ஏணிப்படியில் ஏறுவது போல, கிளைகளில் ஏறி, இலைகளின் மறைவுக்குள் நின்றாள்.

''அருமை...'' என்ற அனு, நொடியில் தாவி, அவள் அருகில் வந்தாள்.

இப்போது இருவரும் புதர் போன்ற அந்த மரத்தினுள் முற்றிலும் மறைவாக நின்றனர்.

அது சற்று உயரமாக இருந்ததால், அங்கிருந்த ஒற்றையடி பாதை தெரிந்தது.

''சிறிது நேரம் காத்திருக்கலாம்...''

''எனக்கு பயமாயிருக்கு...'' என்றாள் தியா.

''எனக்கு கவலையாய் இருக்கு...'' என்றாள் அனு.

''நம்ம தோழியரை எதுக்காக, இவங்க இந்த காட்டுக்கு அழைத்து வந்திருக்காங்க... அதுவும், தடை செய்யப்பட்ட பகுதிக்குள்...''

''தெரியலையே...''

''கண்டுபிடிக்கணும்... எப்படியாவது அவங்கள காப்பாற்றணும்...''

கிசுகிசுப்பாக பேசிய போதே, அந்த ஒத்தையடி பாதையில், துரத்தி வந்த இருவரையும் காண முடிந்தது.

அனுவும், தியாவும் சிறு அசைவும் இன்றி கவனித்தனர்.

இருபுறமும் தேடியபடியே வந்த அவர்கள் பேசுவது காதில் விழுந்தது.

''செல்வா அண்ணா... நாம அழைத்து வந்த பிள்ளைகளிலிருந்து ரெண்டு பேர் மட்டும் எப்படி தப்பிச்சாங்கன்னு தெரியவில்லையே...''

''எனக்கும் புரியவில்லை வீரா... கதவை பூட்டி தானே வைத்திருந்தோம்...''

''ஆமா... பூட்டு உறுதியாக தான் இருந்தது...''

''அவர்களை எப்படியாவது பிடித்து விட வேண்டும். இல்லா விட்டால் பிரச்னையாகி விடும்...''

''ம்... எங்கே சென்று விடுவர்; பிடித்து விடலாம்...''

திடீரென அலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டது. வந்தவர்களில் செல்வா என்பவன் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து அலைபேசி கருவியை எடுத்தான்.

''டிரைவர் கூப்பிடுறான்...'' என்றபடி அலைபேசியை உயிர்பித்து பேசினான்.

''ஹலோ... சொல்லு...''

தொடர்ந்து எதிர் முனையில் பேசியதை கவனித்தான்.

- தொடரும்...- ஜே.டி.ஆர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us