PUBLISHED ON : செப் 09, 2023

திருநெல்வேலி மாவட்டம், கள்ளிகுளம், புனித அலோசியஸ் உயர்நிலைப் பள்ளியில், 1977ல், 9ம் வகுப்பு படித்தபோது நடந்த நிகழ்வு...
உடற்கல்வி ஆசிரியர் செல்வராஜ் மிகவும் நகைச்சுவையாக பேசுவார். அன்று மாணவர்களை வரிசையில் நிறுத்தி, வேப்ப மரக்கிளையில் தொங்கி, 'புல் அப்' எடுக்க வைத்தார். பலரும் திறன் காட்டி அசத்தினர். என்னால், ஒன்று கூட எடுக்க முடியவில்லை. தொங்கியபோது சட்டை சற்று மேலேறி பானை போல வயிறு பெரிதாக தெரிந்தது.
தொங்கியபடி இருந்த என் அருகில் வந்தவர், 'என்னப்பா... வயிற்றில், 'புல்லா லோடு அப்' செய்து, 'புல் அப்' எடுக்க வந்தால் எப்படி முடியும்...' என புன்னகைத்தார்.
பின், 'இது போன்ற பயிற்சி எடுக்க வரும் போது, அரை வயிறு அளவில் சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், மீதி கால் வயிறு காலியாக இருக்க வேண்டும்...' என்று அறிவுரைத்தார். அதை கடைபிடித்து முறைப்படி பயிற்சி பெற்றேன்.
எனக்கு, 60 வயதாகிறது; பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். நீண்ட காலத்துக்கு முன் நடந்திருந்தாலும், அந்த ஆசிரியரின் நகைச்சுவை கலந்த அறிவுரையை நினைத்ததும் சிரித்து விடுகிறேன்.
- தே.ராஜாசிங் ஜெயக்குமார், தஞ்சாவூர்.
தொடர்புக்கு: 94433 94747
