PUBLISHED ON : செப் 09, 2023

விழுப்புரம் மாவட்டம், மைலம், சிவப்பிரகாச சுவாமிகள் உயர்நிலைப் பள்ளியில், 1956ல் நான்காம் பாரம் என்ற, 9ம் வகுப்பில் சேர்ந்திருந்தேன்.
அன்று வகுப்பறையில் இருந்தபோது என் உடல் முழுதும் திடீரென வீக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, அரிப்பும் ஏற்பட்டதால், கடும் சிரமப்பட்டேன். தாங்க முடியாமல் கதறினேன்.
தலைமை ஆசிரியர் என்.ஆர்.வெங்கடரமணன் மிகவும் பதறி விட்டார். அந்த பகுதியில், தகுதியான மருத்துவர்கள் இல்லை. எனவே, ஹோமியோபதி மருத்துவம் செய்த ஒருவரை அழைத்து வந்து, 'பென்சிலின்' ஊசி போடச் செய்தார். அரிப்பும், வீக்கமும் படிப்படியாக குறைந்தது. பதற்றத்துடன், மாலையில் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
படிப்பை முடித்து, பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். அப்போது, கிராம பள்ளிகளில் அவசர உதவிக்கு, 'மருத்துவ கிட் பாக்ஸ்' வழங்கப்பட்டிருந்தது. அதில், தேள், பூச்சி கடி, பேதி, தீக்காயம் போன்ற பாதிப்புகளை சரி செய்ய உதவும் மருந்துகள் இருந்தன. காலம், நேரம் பாராமல் கிராம மக்களுக்கு உதவும் வகையில் அதை பயன்படுத்தினேன்.
ஒருநாள், நள்ளிரவில், பற்றி எரிந்த வீட்டுக்கு உதவ சென்ற போது, தீ காயத்தால் காலில் கொப்பளம் ஏற்பட்டது. அது போல் புண்பட்ட பலருக்கும் உதவியது பெரும் மகிழ்ச்சி தருகிறது.
என் வயது, 80; பள்ளியில் மருத்துவ உதவியின் முக்கியத்துவத்தை உணர்த்திய, அந்த தலைமை ஆசிரியருக்கு, 97 வயதாகிறது. மிகவும் நலமுடன் இருக்கிறார். அவர் விதைத்த சேவை எண்ணத்தை செயல்படுத்தி மகிழ்வுடன் வாழ்கிறேன்.
- அரங்க மன்னார், சென்னை.
தொடர்புக்கு: 87547 29889
