
முன்கதை: தோப்பு கிணற்று தண்ணீர் குடித்த சிறுமியர் தியாவும், அனுவும் வினோத சக்தி பெற்றிருந்தனர். கும்பலிடம் சிக்கி வேனில் அடைபட்டனர். வினோத சக்தியால் அவர்களை மீட்டு, பூஜை நடந்த இடத்துக்கு அழைத்து சென்றார் தோப்பு கிணற்று மூதாட்டி. அவர்களை அங்கு விட்டு அவசரமாக சென்றார். பூஜை நடந்த இடத்தில், அனு, தியாவின் வினோத சக்தியால் பரபரப்பு ஏற்பட்டது. இனி -
பூஜையின் போது நடந்த வினோதங்களால் அங்கிருந்தோர் பயந்து ஓட்டம் பிடித்தனர். அப்போது கேட்ட திடீர் சத்தத்தில் தங்களை அறியாமல் கண் சிமிட்டினர் தியாவும், அனுவும்.
பூஜை இடத்தில் இருந்த குழி தோண்டும் கருவிகள் மீண்டும் தோன்றின.
சின்ன அசைவுடன் இயல்பு நிலைக்கு வந்தார் சாமியார்.
அனுவும், தியாவும் அதிர்ந்தனர். கத்தியபடி ஓடி வந்தான் வேன் ஓட்டுநர்.
அவனை உறைய வைத்திருந்த தோப்புக்கிணற்று மூதாட்டி, 'ஐந்து நிமிடம் அப்படியே இருப்பான்' என சொல்லியிருந்தது தியா நினைவுக்கு வந்தது. உண்மை நிலை புரிந்தது.
பூஜை நடந்த இடத்தில் -
இலக்கியனிடம், ''ஆமாம் சார்... இது அந்த பொண்ணுங்களோட வேலை தான்...'' என்றான் செல்வா.
''எப்படி உறுதியா சொல்ற...''
''ரெண்டு பொண்ணுங்களையும், வார்டனையும் வேனில் வைத்து பூட்டி கீழே நின்றிருந்தேன் சார். அப்போது, தோப்புக்கிணற்று பாட்டி வந்து, என்னை செயல்படாதபடி உறைந்து நிற்க வைத்தார். பின், அந்த பெண்களிடம் பேசினார். என்னால் அசைய முடியவில்லையே தவிர, பேசியதை கேட்க முடிந்தது...''
விபரம் கூறினான் ஓட்டுநர்.
''சார்... அவங்க உற்றுப் பார்த்தால் தான், இப்படி எல்லாம் நடக்கிறது. அவங்க, இங்கே நடப்பதை பார்க்க கூடிய அளவு துாரத்துல தான், எங்கேயோ இருக்கிறாங்க. அவங்கள தேடி பிடிச்சிட்டா, பிரச்னை தீர்ந்திடும்...''
''முதல்ல அந்த பொண்ணுங்களையும், பாட்டியையும் தேடிப் பிடிங்க...''
இலக்கியன் குரலை தொடர்ந்து நாலாபுறமும் விரைந்தனர்.
இதை கண்ட வார்டன், ''ஐயோ நம்மை தேடித்தான் வராங்க...'' என பதற்றத்தில் கத்தினார்.
அது கேட்டு மூவரையும் வளைத்து பிடித்தனர்.
அனு, தியாவை பார்த்த இலக்கியன் முகத்தில் வியப்பு.
''நீங்க நம்ம ஸ்கூல்ல தானே படிக்கிறீங்க...''
'ஆமா சார்...'
அப்போது, பதற்றமாய் குறுக்கிட்டார் சாமியார்.
''ஐயா... பூஜைக்கான நேரம் போய்ட்டே இருக்கு. உடனடியா துவங்கணும். அப்பதான், வானில் வளர்பிறை தெரிய ஆரம்பிச்சதும் தோண்ட முடியும்...''
தலையை அசைத்த இலக்கியன், ''பார்வையால தானே பிரச்னை கொடுக்குறாங்க. இவங்க கண்ணை கட்டி திருப்பி உட்கார வை...'' என்றார்.
அதன்படி, சபாரி அணிந்த மூவர் காவலாக நிற்க, பூஜை தொடர்ந்தது.
தாம்பாளத்தை இலக்கியனிடம் கொடுத்த சாமியார், ''ஐயா... இதுல, 108 பூ இருக்கு. இதை வெச்சு தான் பூஜை செய்யணும். அப்பதான் எண்ணிக்கை சரியா வரும்...'' என்றபடி கல்வெட்டு முன் நின்ற மாணவியரை அணுகினார்.
''இலக்கியன் சார்... ஒவ்வொரு பூவாக தேவதை சொரூபத்திற்கு போட்டு அர்ச்சனை செய்வார். அவர் ஒவ்வொரு முறை பூவை போடும் போதும், நீங்கள் இந்த கல்வெட்டில் செதுக்கி இருக்கும் பாடலை தப்பில்லாமல் படிக்க வேண்டும்...''
மாணவியர் ஒப்புதலாக தலையாட்டினர்.
''தொடர்ந்து தப்பில்லாமல் வாசித்து விட்டால், பூஜை சீக்கிரம் முடிந்து விடும். இடையில் தப்பாக வாசித்தால், திரும்பவும் முதலில் இருந்து, 108 முறை வாசிக்க வேண்டியது இருக்கும். அதனால் கவனமாக இருங்கள்...''
போலி அன்புடன் கூறினார் சாமியார்.
''தீப்பந்தங்களில் தொடர்ந்து எண்ணெய் ஊற்றியபடியே இருங்கள். இல்லையேல், புகை நிறைய வர ஆரம்பித்து விடும். அப்படி புகை வந்தால், தொலைவில் இருப்பவர்களுக்கு அது தெரியும். வனத்துறையினர் இங்கே வந்து விடுவர்...'' என எச்சரித்தார் பூசாரி.
''நாங்க ஒரு முறை அதை வாசித்துப் பார்த்துக் கொள்ளட்டுமா...''
கேட்டாள் மாணவியரில் ஒருத்தி.
''மனதிற்குள் வாசித்துக் கொள்ளுங்கள். பூஜையின் போது முறையாக வாசித்து விட்டால், உடனடியாக போய் விடலாம்...''
புன்னகையுடன் சொன்னார் சாமியார்.
பூஜை ஆரம்பமானது. இலக்கியன் முதல் பூவை மந்திரித்து வைத்திருந்த பொம்மையின் காலடியில் போட, மாணவியர் மூவரும் கல்வெட்டில் இருந்த பழந்தமிழ் பாடலை வாசிக்க துவங்கினர்.
கண்கள் கட்டி உட்கார வைக்கப்பட்டிருந்த தியா, ''பூஜையை துவங்கிட்டாங்க போல இருக்கு...'' என்றாள் கிசுகிசுப்பாக.
''ஆமா... பூஜை முடிந்ததும், எல்லாரையும் விட்டு விடுவாங்களா...''
மெல்லிய குரலில் கேட்டார் வார்டன்.
''விட்டு விடுவர் என்று தான் நினைக்கிறேன். ஆனால், பூஜை எதற்காக என்று இன்னும் புரியவில்லையே...'' என்றாள் அனு.
''ஒரு விஷயம்... தோப்புக் கிணற்றுப் பாட்டி இன்னும் சிக்கவில்லை...''
''டிரைவரை அப்படியே விட்டு விட்டு வந்து விட்டதால், திரும்பவும் அங்கே போயிருப்பார் என்று நினைக்கிறேன்...''
''ஆமாம். பாட்டி ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது...''
தியா சொல்லி முடித்த அடுத்த வினாடி பாடலை வாசித்துக் கொண்டிருந்த மாணவியர் முன் இருந்த கல்வெட்டு மறைந்து போனது. மாணவியர் திகைத்தனர்.
பதறிய இலக்கியனும், சகாக்களும் தியாவையும், அனுவையும் திரும்பி பார்த்தனர்.
கண்கள் கட்டப்பட்ட நிலையில், இருவரும் அமர்ந்திருந்தனர்.
''என்ன நடக்கிறது இங்கே...''
பதற்றமடைந்தார் இலக்கியன்.
''இது தோப்புக்கிணற்று பாட்டி வேலையாக இருக்கலாம் சார்...''
''பிடிங்க அந்த கிழவியை... கல்வெட்டைப் பார்க்கிற பகுதியில் தான் அவர் இருக்கணும்...''
இரண்டே நிமிடத்தில், மூதாட்டியை கண்டுபிடித்து அள்ளி வந்தனர்.
''கையில் இருக்கும் குச்சியை பிடுங்கி போட்டு, கண்களைக் கட்டி திருப்பி உட்கார வையுங்கள்...'' என்ற இலக்கியன், ''இன்னும் வேறு யாராவது இருக்கின்றனரா...'' என எரிச்சலடைந்தார்.
''இல்லை சார்... நான்கு பேரும் பிடிப்பட்டு விட்டனர்...''
பணிவாக சொன்னான் செல்வா.
இந்த கால அவகாசத்தில் மறைந்திருந்த கல்வெட்டு மீண்டும் தெரிய ஆரம்பித்தது.
''ஆறுமுறை தான் மந்திரம் சொல்லி இருக்கிறோம். பரவாயில்லை... திரும்பவும் முதலிலிருந்து ஆரம்பித்து விடலாம்...'' என்ற சாமியார், ஆறு பூக்களை எடுத்து தாம்பாளத்தில் வைத்தார். மீண்டும் ஆரம்பமானது பூஜை.
- தொடரும்...
- ஜே.டி.ஆர்.