/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
அதிமேதாவி அங்குராசு - பல்லுயிரினம் காக்கும் பழவேற்காடு!
/
அதிமேதாவி அங்குராசு - பல்லுயிரினம் காக்கும் பழவேற்காடு!
அதிமேதாவி அங்குராசு - பல்லுயிரினம் காக்கும் பழவேற்காடு!
அதிமேதாவி அங்குராசு - பல்லுயிரினம் காக்கும் பழவேற்காடு!
PUBLISHED ON : டிச 16, 2023

வங்க கடற்கரையில் அமைந்துள்ள மிகப்பெரிய உப்பு நீர் ஏரி, பழவேற்காடு. தமிழக - ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரியது. இது, 481 சதுர கி.மீ., பரப்பு உடையது. சென்னையில் இருந்து, 60 கி.மீ., தொலைவில் இருக்கிறது.
பழவேற்காடு பகுதி வரலாறு வித்தியாசமானது. பண்டைக்காலத்தில், திருப்பாலைவனம் என்ற பெயரில் துறைமுகமாக இருந்தது. ஐரோப்பியரான போர்த்துகீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் இதை பயன்படுத்தியுள்ளனர். பழவேற்காடு என்ற சொல் ஆங்கிலேயர் வாயில் நுழையாததால், 'புலிகாட்' ஆகிவிட்டது.
பழவேற்காடு பற்றிய வரலாற்று குறிப்பு கி.பி., 1ம் நுாற்றாண்டில் எழுதிய, 'எரிதேரியன் கடல் பயண குறிப்புகள்' என்ற நுாலில் கிடைக்கிறது. கிரேக்க அறிஞர் தாலமி தொகுத்த துறைமுக பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மசாலா பொருட்கள், சந்தனம், முத்து, கற்பூரம், பட்டு போன்றவை இங்கிருந்து வாணிபம் செய்யப்பட்டுள்ளன.
கி.பி., 13ம் நுாற்றாண்டில் வாழ்ந்த அரேபியரின் வசிப்பிட இடிபாடுகளை இன்றும் காணலாம். போர்த்துகீசியர்கள், கி.பி., 1502ல் வர்த்தக மையம் ஒன்றை இங்கு கட்டினர். இதற்கு விஜயநகர அரசு உதவியது. இதை டச்சுக்காரர்கள் கி.பி., 1609ல் கைப்பற்றினர்.
பின், டச்சு கிழக்கிந்திய கம்பெனி, ஜெல்ட்ரியா என்ற பெயரில் ஒரு கோட்டையை எழுப்பியது. கம்பெனி தலைமைப் பொறுப்பு வகித்த வெம்மர் வான் பெர்செம் என்பவரின் சொந்த ஊர் ஜெல்ட்ரியா. அப்பெயரே கோட்டைக்கு சூட்டப்பட்டது. இந்த கோட்டையை கைப்பற்ற, ஐரோப்பியர்கள் மோதிக்கொண்டனர். போர்களும் நடந்தன. இங்கு, 77 கல்லறைகள் உள்ளன. அவற்றில் டச்சு மொழியில் விபரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
டச்சு வணிகர்கள், 1690- வரை பழவேற்காட்டை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அந்த காலத்தில், 'பழைகட்டா' என அழைக்கப்பட்டது. பாழடைந்த கோட்டை, தேவாலயம், கல்லறைகள் தற்போது, இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ளன. விண்வெளி ஆய்வு தொடர்பான ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், இந்த பகுதியில் தான் உள்ளது.
சுவர்ணமுகி, காலாங்கி, ஆரணி ஆறுகள் பாய்ந்து இணையும், கழிமுகத்தில் பழவேற்காடு ஏரி உருவாகியுள்ளது. ஏராளமான தீவுகளுடன், 160 வகை மீன்கள், 12 வகை இறால்கள், 19 வகை மெல்லுடலிகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன. இங்கு, 150 வகை பறவைகள் வந்து செல்கின்றன. பறவை சரணாலயமாக, 1980ல் தமிழக அரசு அறிவித்தது.
பழவேற்காட்டில், கடல் காகங்கள், ஆலாக்கள் சுறுசுறுப்பாக பறந்து கொண்டிருக்கும். கரையில் உப்புகொத்தி பறவைகள், உணவு தேடி திரியும். வெள்ளை அரிவாள் மூக்கன் மணலை கிளறி இரை தேடும். பிளமிங்கோ என்ற பூநாரைகளும் வருகின்றன.
பூநாரை வருகையை திருவிழாவாக கொண்டாடுகிறது ஆந்திர அரசு. உலகின் வட பகுதியான சைபீரியா, ஆசிய நாடுகளான ஆப்கானிஸ்தான், மங்கோலியாவில் இருந்தும் பறவைகள் வலசை வருகின்றன. வித்தியாசமான, 'விம்ப்ரெல்' என்ற பறவையும் இங்கு வருகிறது.
பருவநிலை மாற்றத்தால் உலகின் இயற்கை சமநிலை குலைந்து வருகிறது. பெரும் மழை, கடும் வெப்பம் என காலநிலை மாறுகிறது. சமநிலை குலைவு காரணமாக பறவைகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பூவி வெப்பமாவதை தடுத்தால், இயற்கை சமநிலை அடையும். அப்போது, சுற்றுச்சூழல் நம் வாழ்வுக்கு ஏற்றபடி மேம்படும்.
இளஞ்சிவப்பு பூநாரை!
பழவேற்காடு ஏரியில், பூநாரைகள் இரை பிடிப்பது நளினமாக இருக்கும். இது நாரையினத்தைச் சேர்ந்த பறவை. அறிவியல் பெயர் பீனிகாப்டிரியே. நீண்டு வளைந்த கழுத்தும், மண்வெட்டி போல் வளைந்த அலகும் வித்தியாசமாக இருக்கும். கால் விரல்கள், வாத்து போல் ஜவ்வால் இணைந்திருக்கும்.
நிமிர்ந்து நின்றால், 150 செ.மீ., உயரமும், நான்கு கிலோ வரை எடையும் இருக்கும். செந்நிறம் கலந்த வெண் துாவலுடன் காணப்படும். இறக்கை ஓரம் கருமை படர்ந்திருக்கும். கூட்டம் கூட்டமாக மனதைக் கவரும். இரை தேடும் போது வால் மட்டும் தெரியும்; உடலை நீருக்குள் அமிழ்ந்தி, முக்குளித்த நிலையில் உண்ணும்.
சில நேரம் வாத்து போல் ஒலி எழுப்பும். ஆழமற்ற நீரில் தலையை அமிழ்த்தி, அலகை கவிழ்த்து, சேற்றைக் கலக்கிய வண்ணம் நடக்கும். கிண்ணம் போல் அமைந்திருக்கும் அலகில், கலக்கிய சேற்று நீரை சேகரிக்கும். நாக்கை மத்து போல் பயன்படுத்தி, கடைந்து, உணவை அலசும்.
அலகின் ஓரம் சீப்பு போன்ற இடைவெளியுடன் இருக்கும். அதன் வழியாக, நீர் மட்டும் வெளியேறி, உணவாகும் உயிரினங்கள் வாயில் தங்கி விடும். அலகுகள், வடிகட்டி போல வினோதமாக செயல்படும். சிறுநண்டு, கூனி இறால், பூச்சி, புழுக்கள், நீர்த்தாவர விதைகளை உண்ணும்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.