PUBLISHED ON : ஜூலை 26, 2019

பிரம்மபுரம் கிராமத்தில், ஒரு ஏழை விறகு வெட்டி இருந்தான். அவனுக்கு, மனைவியும், கடம்பன், வேந்தன் என்ற மகன்களும் இருந்தனர்.
ஒரு நாள் -
மலையில், விறகுகளை வெட்டி, கட்டாக வைத்திருந்தான் விறகுவெட்டி. அங்கு வந்த வினோத பறவை, விறகுக்கட்டு மீது, ஒரு முட்டை இட்டு பறந்தது. அந்த முட்டை, பொன் நிறமாக இருந்தது. அதை எடுத்து வந்து, மனைவியிடம் தந்தான்.
விலைமதிப்பற்ற அந்த முட்டையை, வியாபாரியிடம், 200 பொற்காசுகளுக்கு விற்றாள் அவன் மனைவி.
அதைக் கண்டு மகிழ்ந்த விறகு வெட்டி, 'நம் ஏழ்மையைப் போக்க, இறைவன் அளித்த பரிசு இது... முட்டை கிடைத்த ரகசியத்தை யாரிடமும் கூறாதே...' என்று எச்சரித்தான். அவளும், 'சரி...' என, தலையை ஆட்டினாள்.
மறுநாள் -
விறகுக் கட்டின் மீது, இன்னொரு முட்டையிட்டது அந்த பறவை; அதையும் விற்றாள் விறகுவெட்டி மனைவி; பொற்காசுகள் குவிந்தன.
அந்த முட்டைகள் கிடைக்கும் விதம் பற்றி, அறிய விரும்பினான் வியாபாரி காலிக். அவள் கூற மறுத்து விடடாள். ஒரு சூனியக்கார கிழவியின் உதவியை நாடினான் வியாபாரி.
தங்க முட்டை கிடைக்கும் விதத்தை, மந்திர சக்தியால் அறிந்த சூனியக்காரி, 'அந்த பறவையால், அதிர்ஷ்டங்கள் வாய்க்கும்; அந்த பாக்கியத்தைப் பெற, அதை கொன்று, இறைச்சியை சாப்பிட வேண்டும். அதன், தலை எலும்பை வைத்திருப்பவர், நாட்டின் அரசனாகலாம்; அதன் கால் எலும்புகளை வைத்திருப்பவருக்கு, தினமும் துாங்கி எழும்போது, 100 பொற்காசுகள் கிடைக்கும்...' என்றாள்.
அந்த பறவையை பிடிப்பதற்கு, உதவும்படி கேட்டான் வியாபாரி. அதற்கு இணங்கிய சூனியக்கார கிழவி, விறகு வெட்டி மனைவியின் மனதை மாற்றி, மந்திரப்பறவையை பிடித்து வரும்படி வற்புறுத்தினாள்.
கிழவியின் பேச்சைக்கேட்டு, பறவையை பிடித்து வர, தினமும் கணவனை நச்சரித்தாள். தொல்லை தாங்காமல், அந்தப் பறவையை பிடித்து கொடுத்தான் விறகுவெட்டி.
பறவை கிடைத்ததும், 'நான் அடுத்து என்ன செய்ய வேண்டும்...' என்று கிழவியைக் கேட்டாள் விறகுவெட்டியின் மனைவி.
'அந்த பறவையைக் கொன்று, தலையை தனியாகவும், காலை தனியாகவும் உணவாக சமைத்து வை. நான் வியாபாரியை அழைத்து வருகிறேன். அந்த உணவைக் கொடுத்தால், ஏராளமாக பணம் தருவான். அதில் மகிழ்ச்சியாக வாழலாம்...' என்று கூறினாள் கிழவி. அதன்படி, கால், தலை இறைச்சிகளை, தனித்தனியே சமைத்து உணவாக்கி காத்திருந்தாள்.
குறிப்பிட்ட நேரத்தில் வியாபாரி வரவில்லை. அதனால், வியாபாரியைத் தேடி புறப்பட்டாள்.
சற்று நேரத்தில், விறகு வெட்டியின் மகன்கள் வீடு திரும்பினர். உணவு வாசனை மூக்கை துளைத்தது.
பசியால் வாடியிருந்த அவர்கள், அந்த சுவையான உணவை ருசித்தனர். கடம்பனுக்கு, பறவையின் கால் இறைச்சியில் சமைத்த உணவும், வேந்தனுக்கு, அதன் தலைப் பகுதி இறைச்சியில் சமைத்த உணவும் கிடைத்தன. உணவருந்திய பின், கால், தலை எலும்புகளை தாயத்தாக்கி, கழுத்தில் அணிந்து கொண்டனர்.
இதற்குள் விறகுவெட்டியின் மனைவி, வியாபாரி காலிக்கை அழைத்து வந்தாள். அவன் அவசரமாக உணவு பாத்திரத்தை துழாவினான். அதில், மந்திரப் பறவையின் தலையோ, கால்களோ இல்லாததை கண்டு ஆத்திரம் அடைந்தான். வெறி பிடித்தவன் போல் கத்தினான்.
'தவறு என்னுடையதல்ல... உரிய நேரத்தில் வராததால் உங்களை தேடி வந்தேன். அப்போது, பள்ளியிலிருந்து திரும்பிய, என் மகன்கள் அந்த பறவையில் சமைத்த உணவை சாப்பிட்டுவிட்டனர். கொஞ்சம் பொறுங்கள்; நொடியில் வேறொரு பறவையை பிடித்து, இதை விட ருசியாக சமைத்து தருகிறேன்...' என்றாள் விறகு வெட்டியின் மனைவி.
'வேறு பறவை வேண்டாம். அந்த பறவை இறைச்சி தான் வேண்டும்; உன் பிள்ளைகள் எங்கே...' என்றான் வியாபாரி.
கதவுக்குப் பின்னால் நின்ற கடம்பனும், வேந்தனும் இதைக்கேட்டு திடுக்கிட்டனர். இங்கிருந்தால் ஆபத்து என்று எண்ணி, வீட்டின் பின் பக்கம் வழியாக வெளியேறி, ஓடினர்.
வெகுநேரம் காத்திருந்த வியாபாரி, கடும் கோபத்துடன் புறப்பட்டான். விறகுவெட்டியின் மனைவி அழுது புலம்பினாள்; அவள் பார்வை பறிபோனது. மனைவியை எண்ணி, கண்ணீர் விட்ட விறகுவெட்டியின் பார்வையும் பறிபோனது.
கடம்பனும், வேந்தனும், கால்போன போக்கில் நடந்தனர். ஒவ்வொரு நாளும், காலை, கடம்பன் எழுந்ததும், 100 பொற்காசுகள் தோன்றின. வழிச்செலவுக்கு அதை பயன்படுத்தினர்.
அவர்கள் சென்ற பாதை, இரண்டாகப் பிரிந்தது. பிரிந்த இடத்தில், ஒரு அறிவிப்புப் பலகை இருந்தது. அதில் -
'ஒன்றாக பயணம் செய்யும் இருவர், ஒரே பாதையில் சென்றால், மரணம் அடைவர். பிரிந்து வெவ்வேறு பாதைகளில் பயணித்தால் நன்மை கிடைக்கும்' என, எழுதப்பட்டிருந்தது.
எச்சரிக்கை பலகையை கண்டதும், இருவரும் பிரிந்தனர்.
பல நாட்களுக்குப் பின், ஒரு அழகிய கோட்டை வாசலுக்கு வந்தான் கடம்பன். அங்கே, இளைஞர்கள் அழுதபடி குழுமியிருந்தனர். அவர்களின் வேதனைக்கான காரணத்தைக் கேட்டான்.
'நாங்களெல்லாம் பெரிய செல்வச் சீமான்களின் புதல்வர்கள்; இந்த கோட்டையில் ஒரு அழகி இருக்கிறாள். அவள் எங்களை ஏமாற்றி, பொற்காசுகளை எல்லாம் பிடுங்கி, விரட்டியடித்து விட்டாள். வெறும் கையுடன் நிற்கிறோம்; எங்கள் நாட்டுக்கு எப்படி திரும்பி போக முடியும்...' என்றனர்.
இதற்கு முடிவு கட்ட எண்ணி, கோட்டைக் கதவைத் தட்டிய கடம்பன், 'என்னிடம், 100 பொற்காசுகள் உள்ளன; இன்றிரவு இங்கு தங்க அனுமதி கிடைக்குமா...' என்றான்.
அவனை, பணிப்பெண் வரவேற்று, கோட்டை அழகியிடம் அழைத்துச் சென்றாள். அங்கு தங்க அனுமதித்த அழகி, பணிசெய்வதற்கு ஒரு பெண்ணை உடன் அனுப்பினாள்.
அன்றிரவு, கோட்டையின் உண்மை நிலையை அறிந்த கடம்பன், அந்த பணிப் பெண்ணிடம், 'இன்னும் ஒரு இரவு, கோட்டையில் தங்க வேண்டும்; அதற்கு உரிய கட்டணத்தை தருகிறேன்...' என்று, தலையணை அடியில் மறைத்து வைத்திருந்த பொற்காசுகளை அள்ளிக் கொடுத்தான்.
பறவையின் கால் எலும்புகளை அவன் வைத்திருப்பதால், பொற்காசுகள் கிடைப்பதை, மந்திர சக்தியால் அறிந்த கோட்டையின் அழகி, அதை அபகரிக்க திட்டமிட்டாள்.
அன்றிரவு, கடம்பன் தங்கியிருந்த அறைக்கு சென்று, பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தாள். அவன் மயங்கியதும், பறவையின் கால் எலும்புகளை அபகரித்தாள். பின், அவனைத் துாக்கி கோட்டைக்கு வெளியே வீசினாள்.
- தொடரும்...
