PUBLISHED ON : செப் 23, 2023

முன்கதை: தோப்பு கிணற்று தண்ணீரை குடித்ததால், வினோத சக்தி பெற்ற சிறுமியர் தியாவும், அனுவும் கிராமத்துக்கு வந்தனர். வழியில் நின்ற மர்ம வேனை கண்டு துப்பறிய முயன்றனர். அதில் இருந்த இருவர் அவர்களை பிடிக்க முயன்றனர். இனி -
''இங்கே எங்கு பார்த்தாலும், மரம், செடி, புதருமாக இருக்கிறது. திசையும் தெரியவில்லை. இடம் அடையாளமும் தெரியவில்லை. போன வழியே திரும்பி வந்ததால் பிழைத்தேன். இல்லையேல் காட்டில் எங்கேயாவது சிக்கி இருப்பேன் போல...''
''நிஜம் தான்... இங்கே எல்லா இடமும் ஒரே மாதிரி தான் இருக்கிறது... வா ரெண்டு பேரும் சேர்ந்து, அந்த பிள்ளைகளை பிடித்து விடலாம்...''
''எந்த பக்கம் போவது... எங்கே சென்று தேடுவது...''
''எங்கேயும் தேட வேணாம். அதோ இருக்கிறதே மரம், அதில் தான், அந்த பிள்ளைகள் ஒளிந்திருக்கின்றனர்...''
''நிஜமாவா...''
''எனக்கு மயக்கமாகி, நான் அசையாமல் இருந்த போது, அங்கிருந்து ஒரு பிள்ளை வந்து, என்னை பார்த்து போனது...''
உரையாடலை கவனித்து கொண்டிருந்த தியாவும், அனுவும் அதிர்ந்தனர்.
அவன் அசைவின்றி இருந்தாலும், அவன் நினைவு தப்பவில்லை என்ற விஷயமும், தியா அவனிடம் வந்து சென்ற நிகழ்வு அவனுக்கு தெரிந்திருக்கிறது என்ற விபரமும் புரிய வர இருவரும் பதறி போயினர்.
''நாம இங்கே இருக்கிறத கண்டுபிடிச்சுட்டாங்க... ஓடிடலாம்...''
மரத்திலிருந்து எளிதாக தாவி குதித்தாள் அனு. முதுகில் பை வைத்து இறங்க, தியாவுக்கு சிரமமாக இருந்தது.
''பார்த்து சீக்கிரம் வா அக்கா... கிளையில் கால் வைத்து இறங்கு...'' என்ற அனு அவளுக்கு உதவினாள்.
அவர்கள் இறங்கி, அந்த இருவரையும் விட்டு விலகி ஓடினர்.
''வீரா... பிள்ளைங்கள விட்றாத துரத்திப் பிடி...''
''அந்த பிள்ளைங்க மரங்களுக்கு இடையில புகுந்து புகுந்து ஓடுதுங்க...''
அவர்களை பின்தொடர செல்வாவுக்கும், வீராவுக்கும் சிரமமாக இருந்தது.
''அக்கா... என் கையை பிடித்தபடியே ஓடி வா. இந்த இடத்தில் பாதை இரண்டாக பிரியும். அதுக்கு பக்கத்துல ஒரு பெரிய புதர் இருக்கும். அந்த இடத்தில் மறைந்து கொள்ளலாம்...''
அனு சொன்னது போலவே, அந்த பாதை அமைந்திருந்தது. மீண்டும் ஒரு புதருக்குள் வந்து அவர்கள் மறைந்தனர். ஆனால், அவர்கள் ஓடும் போது, ஏற்பட்ட சத்தத்தை கவனித்த வீரா, சுலபமாக அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அங்கு வந்தான்.
அது சற்று அடர்த்தியான புதராக இருந்ததால், வேறு வழியில் ஓட முடியாத நிலை இருந்தது.
எக்கச்சக்கமாக சிக்கி கொண்டோம் என்பது சிறுமியருக்கு புரிந்தது.
''செல்வா அண்ணா... அந்த புள்ளைங்க மாட்டிக்கிட்டாங்க...'' கத்தினான் வீரா.
''விட்றாத இதோ நானும் வந்துடறேன்...''
குரல் கொடுத்தபடியே செல்வாவும் அங்கு ஓடி வந்தான்.
இருவரில் ஒருவரை எளிதாக பிடித்து விடுவான் என்பது தியாவுக்கும், அனுவுக்கும் புரிந்தது.
மனதிற்குள் பயம் வந்தது.
''முட்டுச்சந்துல சிக்கின மாதிரி இருக்கு அக்கா...'' என்ற அனு, தப்புவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என சுற்றும் முற்றும் பார்த்தாள்.
சட்டென்று கண்களில் ஒரு பிரகாசம்...
''இந்த ரெண்டு பேரையும் அலற விடுகிறேன். நீ ஓடுவதற்கு தயாராக இரு அக்கா...'' என்றவள் சட்டென பக்கவாட்டில் கையை நீட்டினாள்.
அவள் கைகளுக்கு எட்டும் தொலைவில் ஒரு பாம்பு இருக்க, அதை லாவகமாக பிடித்து, மின்னல் வேகத்தில் அவர்கள் மேல் போட்டாள்.
இதை சற்றும் எதிர்பார்க்காத வீராவும், செல்வாவும் பாம்பை கண்டு அலறி சிதறி ஓடினர்.
அனுவும், தியாவும் அந்த புதரின் உள்ளிருந்து வெளிப்பட்டு வேகமாக ஓடினர்.
அவர்களை துரத்தி வந்த இருவரும் சுதாரித்து, பின் தொடரும் முன், அவர்கள் கண்ணுக்கு மறைவான ஒரு பகுதிக்குள் வந்து விட்டனர்.
''இங்கே உள்ள கிராமத்து பொண்ணுங்க மாதிரி தெரியுது வீரா...''
''ஆமா அண்ணா... எனக்கும் அப்படித்தான் தோணுது. இங்கே இருக்கிற பாதைகள் எல்லாம் நல்லாவே தெரிஞ்சிருக்கு...''
''இன்னொன்று பாரேன்... பாம்பை அனாயசமா கையில் பிடித்து, துாக்கிப் போடுகிறது. இது நிச்சயமா கிராமத்து பிள்ளைங்க தான்...''
''இதுங்கள விடுறது ஆபத்து... சீக்கிரமே பிடித்து ஆகணும் வீரா...''
தேடலை தொடர்ந்தனர்.
''ரெண்டு பேரும் விடாமல் துரத்திட்டு இருக்காங்க அனு. நம்மை பிடிப்பதிலேயே குறியாக இருக்காங்க. நாம் அவர்களை திசை திருப்பி, பாதுகாப்பான இடத்துக்கு போயிடணும்...''
''ஆமாக்கா... நானாவது ஓடி விடுவேன். நீ ரொம்ப சிரமப்படுகிறாய்...''
''இப்படி ஓடி பழக்கம் இல்லையே எனக்கு...''
சற்று ஆசுவாசப்படுத்தி பேசினாள் தியா.
''இவர்கள் நம்மை தொடர்ந்து வந்தபடியே இருக்கின்றனர். இவர்கள் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்ப வேண்டும். இல்லையேல் பிடிபட்டு விடுவோம் என்று தோன்றுகிறது அனு...''
''நீ சொல்றது மிகவும் சரி அக்கா... எனக்கு ஒரு யோசனை இருக்கிறது...'' என்று திட்டத்தை சொன்னாள் அனு.
''அருமையான திட்டம்...'' என்றாள் தியா.
சில வினாடிகள் மவுனம் காத்த அனு, ''காட்டில், பெரும்பாலும் சத்தத்தை வைத்து தான், ஒருவர் இருக்கும் இடத்தை அடையாளம் பார்ப்பர். அசைவை பார்த்தும், அடையாளம் தெரிந்து கொள்ளலாம். எனவே, நாம் ஒரு இடத்தில் சத்தம் உண்டாக்கி, அவர்கள் கவனத்தை திசை திருப்பி விட்டால், வேறு வழியில் ஓடி தப்பி விடலாம்...'' என்றாள்.
- தொடரும்...
- ஜே.டி.ஆர்.
