PUBLISHED ON : செப் 23, 2023

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில், 1981ல், 9ம் வகுப்பு படித்தேன். உடற்பயிற்சி ஆசிரியராக இருந்த ராமு, விளையாட்டுத்துறை செய்திகளையும், கிரிக்கெட் போட்டி முடிவுகளையும், திரைப்படம் போல காட்சிபடுத்துவார். அந்த செய்திகள், விளையாட்டின் மீது பெரும் ஆர்வம், ஈடுபாட்டை ஏற்படுத்தும். அவரது வகுப்புக்காக தவமிருப்போம்.
ஒருநாள் வகுப்பறையில் இரு மாணவர்கள் இடையே சிறு தகராறு ஏற்பட்டது. பேச்சு முற்றி அடித்துக் கொண்டனர். அந்த நேரத்தில் வகுப்பறைக்குள் வந்த ஆசிரியர், இருவரையும் கொத்தாக பிடித்து, 'என்ன பிரச்னை...' என்றார்.
சுதாரித்தபடி, 'திடீரென யாராவது தாக்க வந்தால் தடுத்து தப்பிப்பது பற்றிய செயல்முறை விளக்கம்...' என்று, சாதுர்யமாக பதில் கூறினர். அனைவரும், 'கொல்...' என சிரித்து விட்டோம். நடந்ததை யூகித்த போதும், சாமார்த்தியமான பதிலால், தண்டனை கொடுக்காமல் எச்சரித்து அனுப்பினார்.
என் வயது, 56; மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறேன். பணியின் போது ஏற்படும் சிக்கல்களை சாதுர்யமாக சமாளிக்க, சமயோசிதத்துடன் பேசினால் தவிர்க்கலாம் என்பதை நினைவூட்டிக் கொண்டிருக்கிறது, அந்த சம்பவம்.
- ப.ராஜகோபால், திருவாரூர்.
