PUBLISHED ON : செப் 23, 2023

ஸ்ரீவில்லிபுத்துார், சி.எம்.எஸ்.உயர்நிலைப் பள்ளியில், 1963ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது, சற்று குண்டான உடல் கட்டுடன் இருப்பேன். அறிவியல் பாட ஆசிரியராக இருந்த நெல்சன் சாமுவேல், அடிக்கடி கேள்வி கேட்டு தெளிவு ஏற்படுத்துவார்.
அன்று சரியான பதில் சொல்ல முடியவில்லை. பெஞ்சில் நிற்க வைத்து, வலது மற்றும் இடது உள்ளங்கையில் பிரம்பால் விளாசினார். வேதனையில் கண்ணீர் வர தவித்தேன். உடன் படித்த நண்பர் சந்திரசேகரன், 'நன்றாக படித்து தேர்ச்சி பெற முயற்சி செய்...' என கூறினார்.
பலவகையில் முயன்ற போதும், முடியாமல் தவித்தேன். என் குடும்பம் வறுமையில் வாடியது. இதனால், வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. படிப்பை பாதியில் நிறுத்தி, பல ஊர்களில், பல விதமான வேலைகள் செய்து சொந்த ஊர் திரும்பினேன்.
எனக்கு, 77 வயதாகிறது. சிறிய அளவில் வியபாரம் செய்து வருகிறேன். கைகளை விரிக்கும் போதெல்லாம், வகுப்பறையில், 'முயற்சி செய்து படி...' என, அன்று அந்த நண்பர் கூறியது காதில் ஒலிக்கிறது. பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற அவருடன் இன்றும் நட்பை பேணி வருகிறேன்.
- கே.கிருபானந்தம், சிவகாசி.
தொடர்புக்கு: 97864 09697
