தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாய விழிகள்! (15)

மாய விழிகள்! (15)

மாய விழிகள்! (15)


PUBLISHED ON : அக் 21, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: தோப்பு கிணற்று தண்ணீர் குடித்த சிறுமியர் தியாவும், அனுவும் வினோத சக்தி பெற்றிருந்தனர். கிராமத்துக்கு சென்ற வழியில், காட்டில் நின்ற மர்ம வேனை பற்றி, துப்பு துலக்க முயன்றனர். துரத்தியவர்களிடம் இருந்து நுாதனமாக தப்ப முயன்றனர். இனி -



கண்ணில் படும் வகையிலேயே ஓடிய அனு, செல்வா, வீரா இருவரையும், மேலும் காட்டுக்கு உட்புறத்திற்கு வரச் செய்து, வட்டப்பாதை பகுதிக்கு அழைத்து வந்து விட்டாள்.

பின், புதர்களுக்கு இடையே ஓடி, அவர்கள் கண்ணில் இருந்து மறைந்தாள். அந்த வட்டப்பாதையில், அவளை தேட துவங்கும் போது, அங்கிருந்து விலகியவள், தியா இருந்த இடத்திற்கு பாய்ந்து வந்தாள்.

கிட்டத்தட்ட மூன்று நிமிட நேரத்தில், இந்நிகழ்வு முடிந்திருந்தது. அனு வரும் வரை பதற்றத்துடன் இருந்தாள் தியா.

''அனு... என்ன ஆச்சு...''

''ஒன்றும் இல்லை அக்கா... சாலைக்கு வந்தவர்களை மீண்டும் இழுத்துட்டு போய் காட்டுக்குள் விட்டுட்டேன். அவர்கள், இங்கு வர இன்னும், 20 நிமிடம் ஆகும்...'' என கூறி, புன்னகைத்தாள் அனு.

''நீ செய்ததை பார்த்து, நான் பயந்தே போயிட்டேன்...''

''பயப்படாதக்கா... வா, அந்த வேன் பக்கம் செல்லலாம்...''

வேனை நெருங்கினர் அனுவும், தியாவும்.

வேனுக்குள், மாணவியரின் சத்தம் கேட்டது. பக்கவாட்டில் இருந்த ஒரு மரத்தின் அருகில் மறைந்தபடி இருவரும் நின்று, வேன் ஓட்டுநரை கவனித்தனர்.

இருக்கையில் சாய்ந்தபடி, அலைபேசியை பார்த்து கொண்டிருந்தான் வேன் ஓட்டுநர்.

''அனு... அவனை சிறிது நேரம் உறைய செய். நான், வேனுக்குள் சென்று, என்ன நிலவரம் என பார்த்து வருகிறேன்...''

''சரிக்கா...'' என கூறி, வசதியாய் ஒரு இடத்தில் நின்றவாறு, வேன் ஓட்டுநரை உற்றுப் பார்த்தாள் அனு.

அவள் கண் முன் புகை மூட்டம் தோன்றியது. மறுகணமே, செயலற்று அப்படியே உறைந்தான் வேன் ஓட்டுநர்.

''கண்ணை சிமிட்டாதே... நான், வேனுக்குள் செல்கிறேன்...''

வேனை நெருங்கிய போது, ஜன்னல்களில் கம்பி வலை அமைக்கப்பட்டு இருந்தன. ஏ.டி.எம்., இயந்திரத்தில், பணம் நிரப்ப எடுத்து வரும் வண்டி போல இருந்தது.

பின்பக்க கதவுக்கு வெளிப்புறத்தில், இரண்டு தாழ்பாள் போடப்பட்டிருந்தாலும், பூட்டு இல்லாமல் இருந்தது.

தாழ்பாள்களை விலக்கி, மெல்ல கதவை திறந்தாள் தியா.

உள்ளே, அவள் விடுதியை சேர்ந்த மூன்று மாணவியரும், வார்டனும் இருந்தனர்.

தியாவை அங்கு எதிர்பார்க்காதவர்கள், அதிர்ச்சியும், ஆச்சரியமாய் பார்த்தனர். தன் வாயில், ஒற்றை விரலை வைத்து, 'சத்தம் போடாதீர்...' என சைகையால் எச்சரித்தாள் தியா.

''அமைதியாக இருங்கள். நான், சிறிது நேரத்தில் மீண்டும் வருகிறேன்...''

தகவல் கூறி அனுவிடம் ஓடி வந்தாள் தியா.

''அனு... வேனுக்குள், மூன்று மாணவியரும், வார்டனும் உள்ளனர். அவர்களை எங்கேயாவது அழைத்து சென்று விடலாமா...''

தியாவின் குரல் கேட்டு, கண்ணை சிமிட்டி திரும்பிப் பார்த்தாள் அனு.

''ஆமாக்கா... அவர்களை அழைத்து இடது பக்கம் இருக்குற, ஒற்றையடி பாதை வழியா சிறிது துாரம் நடந்தால், ஒரு சின்ன கல் திட்டு வரும்; அங்கு சென்று காத்திருங்கள். சிறிது நேரத்தில், நானும் வந்து விடுகிறேன்...'' என்றாள் அனு.

அனு கண் சிமிட்டியதால், உணர்வுக்கு வந்த வேன் ஓட்டுநர், நடந்தது தெரியாமல் சிறிது நேரம், தன் கை, கால்களை மாறி மாறி பார்த்து திகைத்தான். முகத்தில் பயம் தெரிந்தது.

''அக்கா... வேன் ஓட்டுநரை மீண்டும் உறைய வைக்கிறேன். நீ செல்...''

அனு உற்றுப் பார்க்க, மீண்டும் அசைவின்றி உறைந்த நிலைக்கு சென்றான் வேன் ஓட்டுநர்.

வேகமாக ஓடி, வேனுக்குள் சென்றாள் தியா.

வேனுக்குள் இருந்த மாணவியரும், வார்டனும் மிரட்சி மாறாமல் இருந்தனர்.

''பயப்படாதீங்க... உங்களை காப்பாற்ற தான் வந்துள்ளேன்...'' என மெல்லிய குரலில் கூறினாள்.

''தியா... நீ இங்கு எப்படி வந்தாய்...''

ஆச்சரியத்துடன் கேட்டார் வார்டன்.

''எல்லாம் விபரமாக சொல்கிறேன். முதலில் நான்கு பேரும், சத்தமின்றி கீழே இறங்குங்கள்...''

சுற்றுமுற்றும் பார்த்தவாறு இறங்கினர். காட்டுப் பகுதியில், ஒரு மண் சாலையில் இருப்பது தெரிந்தது.

''தியா... நாங்கள், எங்கே இருக்கிறோம்...'' என விசாரித்தார் வார்டன்.

''வார்டன்... இது அனுவின் ஊர். காட்டுப்பகுதி; எல்லாம் விபரமாக சொல்றேன்; முதலில், இங்கிருந்து புறப்படலாம்; என் கூடவே நடங்கள்...''

மாணவியரையும், வார்டனையும், வழிநடத்தியவாறு, அனு கூறிய ஒற்றையடிப் பாதை வழியாக, கல் திட்டுக்கு வந்தாள் தியா.

அங்கு வந்ததும், தங்களை ஆசுவாசப்படுத்தினர். வேனில் கடத்தி வந்த கும்பலிடமிருந்து தப்பியதில், ஒரு நிம்மதி இருந்தாலும், பயம் கலந்த பதற்றத்துடன் இருந்தனர் அனைவரும்.

''வார்டன்... என்ன நடந்தது...'' என விசாரித்தாள் தியா.

''மேல் படிப்பு வகுப்பு மாணவியரில், நன்றாக படிப்போரை, சுற்றுலா அழைத்துப் போவதற்கு, கம்பெனி ஒன்று, 'ஸ்பான்சர்' செய்ய முன் வந்தது. மாணவியருக்கு துணையாக, வார்டன் இருவர் வரலாம் என்றனர். அதனால், அந்தந்த வகுப்புகளில், முதல் மூன்று, 'ரேங்க்' எடுத்த மாணவியர் மொத்தம், ஒன்பது பேருக்கு, ஒருநாள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது...''

''வார்டன்... மீதி ஆறு பேர் எங்கே...''

''தியா... நாங்கள் எல்லாரும், ஒரே டெம்போ டிராவலர் வேனில் தான் கிளம்பினோம்...

''இடையில், எங்களை இரண்டு பிரிவாக பிரித்து, வேனில் ஏற்றி, இங்கு அழைத்து வந்தனர். இது, காட்டுப் பகுதியாக இருப்பதால், நாங்கள் திரும்பி போவதாக கூறினோம்; ஆனால், அவர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை...''

''ஐயோ...''

''எங்களை, ஏதோ ஒரு காரணத்திற்காக கடத்தியுள்ளனர். அது என்னவென்று தெரியவில்லை...''

படபடப்பு குறையாத குரலில் கூறினார் வார்டன்.

''சற்று இளைப்பாருங்கள். சிறிது நேரத்தில், அனு வந்து விடுவாள். பின், பாதுகாப்பான இடத்திற்கு செல்லலாம்; இங்கிருந்து எப்படி தப்புவது என்பதை யோசிக்கலாம்...'' என்றாள் தியா.

''சரி... நீ, இங்கு எப்படி வந்தாய்...''

வார்டன் கேட்க, தோப்புக்கிணறு சம்பந்தப்பட்ட விஷயங்களை மறைத்து, நடந்ததை விவரித்தாள் தியா.

அனுவின் வருகைக்காக காத்திருந்தனர். நீண்ட நேரமாக அவள் வரவில்லை.

மிகவும் பதற்றம் அடைந்தாள் தியா.



- தொடரும்...

ஜே.டி.ஆர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us