PUBLISHED ON : அக் 21, 2023

விழுப்புரம், முனிசிபல் பள்ளியில், 1961ல், 8ம் வகுப்பு படித்தேன். அப்போது, விருப்ப பாடமாக, சமஸ்கிருதம், ஹிந்தி, மொழிகள் படிக்கலாம் என்ற விதி இருந்தது. நான், சமஸ்கிருதம் படிக்க விருப்பம் தெரிவித்து, சில நாட்கள் சிறப்பு வகுப்புக்கு சென்றேன்.
இதை அறிந்த வகுப்பாசிரியர் முத்துசாமி என்னை அழைத்து, 'ஹிந்தி மொழி படிப்பது வாழ்வில் உயர்வுக்கு வழி தரும்...' என அறிவுரைத்தார். அத்துடன், தலைமை ஆசிரியர் எஸ்.ரத்தினத்திடம் பரிந்துரைத்து, உடனடியாக, ஹிந்தி வகுப்பிற்கு மாற்றினார். கவனம் செலுத்தி படித்து முன்னேறினேன்.
பின், சொந்த ஊரான அரக்கோணத்துக்கு குடி வந்தோம். விழுப்புரம் செல்லும் போதெல்லாம் அந்த பள்ளிக்கு சென்று ஆசிரியர்களை வணங்குவதை வழக்கமாக்கிக் கொண்டேன். ஒருமுறை, 1965ல் தந்தையுடன் சென்ற போது பள்ளி தகவல் பலகையில், என் பெயரில் கல்வி உதவித்தொகை வந்திருப்பதாக அறிவிப்பு இருந்தது.
அது பற்றி, அந்த ஆசிரியரிடம் முறையிட்டோம். அவரே முன்னின்று உதவித்தொகையை வாங்கி கொடுத்தார். நன்றாக படித்து, அரசு பணியில் சேர்ந்தேன். 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றேன்.
தற்போது என் வயது, 76; ஹிந்தி மொழியை நன்கு அறிந்துள்ளதால் வட மாநிலங்களில் தைரியமாக சுற்றி வருகிறேன். நண்பர்கள் ஏற்பாடு செய்யும் சுற்றுலாக்களில் உடன் அழைத்து செல்கின்றனர். சிறப்பான வாழ்வுக்கு வழிகாட்டிய அந்த ஆசிரியரை நன்றியுடன் மனதில் தாங்கியுள்ளேன்!
- கே.கோவிந்தராஜ், திருவள்ளூர்.
தொடர்புக்கு: 63694 79797
