PUBLISHED ON : நவ 11, 2023

முன்கதை: தோப்பு கிணற்று தண்ணீர் குடித்த சிறுமியர் தியாவும், அனுவும் வினோத சக்தி பெற்றிருந்தனர். காட்டில் நின்ற வேனை துப்பறிந்து அதில் இருந்த மாணவியரை காப்பாற்றும் வகையில் செயல்பட்டனர். அப்போது, வேன் கும்பலிடம் சிக்கினர். அவர்களின் சாதுர்யமான விசாரணைக்கு தக்கவாறு பதில் பேசினர். இனி -
''முதல்ல நம்ம கிட்ட இருந்து தப்பி போன அந்த நாலு பேரையும் கண்டுபிடிச்சாகணும். இந்த பிள்ளைகளை வெளியில் விடுவது ஆபத்து...''
''அப்போ வேனுக்குள்ளே வைத்து பூட்டி விட வேண்டியது தான்...''
டிரைவர் சொல்ல உடனடியாக மறுத்தான் செல்வா.
''இவங்கள வேனில் பூட்டி வைத்தால், காவலுக்கு ஆள் வேண்டும். ஏற்கெனவே அந்த டீச்சரையும், பிள்ளைகளையும் வேனில் பூட்டி வைத்து தான் மிஸ் பண்ணிட்டோம். திரும்பவும் ரிஸ்க் எடுக்க முடியாது...''
''அப்போ என்ன தான் செய்றது...''
தீவிரமாக யோசித்தான் செல்வா.
சட்டென அவன் முகத்தில் ஒரு பிரகாசம்.
''அந்த பிள்ளைகளை நான் வேற மாதிரி டீல் செய்றேன் வீரா. அவர்களை கீழே இறக்கு...''
''என்ன செய்யப் போற செல்வா அண்ணா...''
''காட்டுல வழி தெரிஞ்ச பிள்ளைங்க இவங்க... இவங்கள வழிகாட்டி மாதிரி வெச்சுக்கிட்டு தேடலாம். அதேசமயம், இவங்க மேல கவனமா இருக்கணும். இவங்க ஒரு பக்கம் தப்பிச்சு ஓடிட கூடாது...'' என்றான் செல்வா.
அனு, தியாவை வேனிலிருந்து இறக்கினர். அவர்களிடம் செல்வா பேசினான்.
''நீங்க சொல்றத நான் நம்புறேன். நாங்க மூணு பிள்ளைகளையும், ஒரு டீச்சரையும் பிக்னிக் அழைத்து வந்தோம். வேன்ல உட்கார்ந்து இருந்த அவங்க இறங்கி போயிட்டாங்க...''
'எங்க போயிட்டாங்க...' என இருவரும் ஒரு சேர கூறினர்.
''காட்டுக்குள்ளே தான்... எங்கே இருக்காங்கன்னு தெரியல. அவங்கள கண்டுபிடிச்சு திரும்ப அழைத்து வர உதவி செய்யணும். புரியுதா...''
''நாங்க என்ன செய்ய முடியும்...''
''இந்த காட்டுல உங்களுக்கு வழி தெரியும் இல்லையா... இப்படியே போய் அவங்க எங்கேயாவது இயற்கை காட்சிகளை பார்த்து செல்பி எடுத்துக்கிட்டு இருக்காங்களான்னு தேட வேண்டியது தான்...''
செல்வா சொல்ல, அனுவும், தியாவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஒப்புதலாக தலையசைத்தனர். தியாவின் மனதில் வேறொரு எண்ணம் உருவானது.
இவர்கள் போக்கிலேயே போய், கடத்தலுக்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து, அதை அடியோடு முறியடிக்க வேண்டும் என முடிவு செய்தாள்.
''சார்... இந்த பக்கமாக போகலாம்...''
கல் திட்டு பகுதிக்கு எதிர் திசையில், பாதைக்கு அவர்களை அழைத்தாள் தியா.
அவளை சந்தேகமாக பார்த்த செல்வா, ''ஏன் முதல்ல இந்த பக்கமா போவோம்...'' என்று கல்திட்டு பகுதிக்கு செல்லும் பாதையில் திரும்பினான்.
இதை எதிர்பார்க்காததால் சற்று திகைத்தாலும், சமாளித்தபடி, கல் திட்டு பகுதிக்கு செல்லும் பாதையில் முன்னே நடக்க மூவரும் பின் தொடர்ந்தனர்.
தானும், அனுவும் வருவதைப் பார்த்து மரங்களுக்குள் மறைந்து இருக்கும் வார்டனும், மாணவியரும் வெளியே வந்து மாட்டி கொள்வரோ என்ற அச்சம் தியாவுக்கு தோன்றியது.
கல்திட்டு பகுதியை நெருங்கிய போது, செல்வாவின் மொபைல் ஒலித்தது.
அழைப்பது யார் என்று பார்த்ததும் அவன் முகம் மாறியது.
சகாக்களை பார்த்து, ''சின்னவர் கிட்ட இருந்து போன்...'' என்றபடி பவ்வியமாக, ''சார்...'' என்றான்.
எதிர்முனை கேட்ட கேள்வியால் பதற்றம் அடைந்து பதில் சொன்னான்.
''இங்கே சின்ன பிரச்னை...''
'....'
''அதெல்லாம் ஒன்றும் இல்லை சார்... வேன்ல இருந்தவங்க கீழே இறங்கி போய் இருக்காங்க. காட்டுக்குள்ளே எங்கேயாவது வழி மாறியிருப்பாங்க போல... அவங்கள தேடிக்கிட்டு இருக்கிறோம்...''
'...'
''இல்ல சார்... அப்படியெல்லாம் இருக்காது. எங்கே பார்த்தாலும், மரம், செடி, கொடியோட பாதை ஒரே மாதிரி இருக்குது. அதனால, எங்கேயாவது வழி தெரியாம சுத்திக்கிட்டு இருப்பாங்க...''
'...'
''சரி சார்... சரி சார்... நாங்க வேன் கிட்ட காத்திருக்கிறோம்...''
அலைபேசியில் பேசி முடித்த பின் செல்வா, ''சின்னவர் ஏன் லேட் என்று கேட்டார். நான் விபரம் சொன்னேன். அவங்க தப்பிச்சு போயிருப்பாங்களோன்னு நினைக்கிறாரு... இன்னொரு அஞ்சு பேரை அனுப்புறாராம். வேன் பக்கத்துல அவங்களுக்காக காத்திருக்க சொல்றாரு...'' என்றான்.
திரும்பவும் வேன் இருந்த இடத்துக்கு வந்து காத்திருந்தனர்.
அனுவையும், தியாவையும் வேனுக்குள் அமர வைத்தனர்.
அனுவுக்கு மட்டும் கேட்கும்படி தியா மெல்ல பேசினாள்.
''கல்திட்டில் மறைந்து இருப்பவர்களை எச்சரிக்கணுமே அனு...''
''ஆமாக்கா... ஆனால், எப்படி...''
''ஏதாவது செய்தாகணும்... நாம் இவர்களிடம் சிக்கி இருக்கிறோம். அவர்களும் சிக்கி விட்டால் அவ்வளவு தான்...''
''வேண்டுமானால் தப்பி ஓடி அவர்களை வேறு இடத்திற்கு அழைத்து போய் விடவா...''
''வேண்டாம் அனு... அது ரிஸ்க்... அவர்கள் மூன்று பேர் இருக்கின்றனர். ஒருவன் என்னை பிடித்து, இரண்டு பேர் உன்னை விரட்டி பிடிக்க வாய்ப்பு இருக்கிறது...''
''என்ன செய்வது... சக்தியை பயன்படுத்துவோமா...''
''இப்போ வேண்டாம் அனு... வேறு வழி இல்லை என்றால், பின் பயன்படுத்தலாம்...''
''சரி அக்கா...''
இருவரும் தாழ்ந்த குரலில் பேசி கொண்டிருந்த போதே ஜீப் வரும் சத்தம் கேட்டது.
ஜன்னல் வழியாக பார்த்தனர். திறந்த ஜீப் ஒன்றில் சபாரி உடை அணிந்திருந்த ஐந்து பேர் வந்தனர்.
அவர்கள் ஆயுதம் வைத்திருப்பது போல தெரிந்தது.
அனு, தியா இருவரையும் வேனில் இருந்து இறங்க செய்தனர். அவர்களை அழைத்து, செல்வாவும், வீராவும், சபாரி உடை அணிந்த இருவருடன் ஒற்றையடி பாதை வழியாக தேடலை ஆரம்பித்தனர்.
மீதமுள்ள மூன்று பேரும் வேன் வந்திருந்த மண் பாதை வழியாக ஜீப்பில் சென்று தேடலை துவங்கினர்.
கல்திட்டுக்கு போகும் ஒற்றையடி பாதையில், அழைத்து சென்றான் செல்வா.
''சைடுல அடர்த்தியா மரம் இருக்கிற இடத்துல எல்லாம் கவனமா பாத்துட்டு வாங்க. ஏதாவது மரங்களுக்கு இடையில நின்னுகிட்டு இருக்க போறாங்க...''
செல்வா சொல்ல, அனுவுக்கும், தியாவுக்கும் பயத்தில் இதய துடிப்பு எகிறியது.
பயம் கலந்த பார்வையை தியாவிடம் திருப்பினாள் அனு.
'பொறுமையாக இரு' என்பது போல கண்ணசைத்தாள் தியா.
அனுவுக்கு படபடப்பு அடங்கவில்லை.
அவர்கள் கல்திட்டு என்று அழைக்கப்படும் மேடான பாறை பகுதியை நெருங்கினர்.
அனுவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. தியாவை திரும்பி பார்த்தாள். தியா அதிர்ந்து போயிருந்தாள்.
- தொடரும்...
- ஜே.டி.ஆர்.
