தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மலையரசன்!

மலையரசன்!

மலையரசன்!


PUBLISHED ON : ஜன 01, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வியட்நாம் நாட்டில் 'டான்கின்' என்று ஒரு பிரதேசம். மலைப்பாங்கான இடம் அது. அங்கு இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுடைய தாயாரும், தந்தையும் அடுத்தடுத்துக் காலமானார்கள். ஆகவே, சகோதரர்கள் இருவரும், பெற்றோரின் உடைமைகளைப் பங்கு போட்டுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று.

தம்பி தன் தாய், தந்தையரை அடக்கம் செய்யப் போயிருந்தான். அண்ணன்காரன் வீட்டிலிருந்த விலையுயர்ந்த பொருள்களையெல்லாம் ஒளித்து வைத்துவிட்டான்.

சவ அடக்கம் முடிந்து, வீடு திரும்பிய தம்பிக்கு வியப்பான வியப்பாக இருந்தது.

''அண்ணா நம் பெற்றோரின் உடைமைகள் எல்லாம் எங்கே? இங்கே ஒன்றையும் காணவில்லையே?'' என்றான்.

''இங்கு என்ன இருக்கிறதோ அவை தான் நம் பெற்றோர் விட்டுச் சென்றவை. வெறும் காலி வீடு. எனக்கு மனைவியும், குழந்தைகளும் இருப்பதினால் இந்தக் காலி வீட்டை நான் எடுத்துக் கொள்கிறேன்,'' என்று கூறி, அந்த வீட்டையும் தனதாக்கிக் கொண்டான்.

அண்ணன் தம்பியை வஞ்சித்துக் குடும்பச் சொத்து முழுவதையும் நெல்வயல், மாடு, கன்றுகள் சகலத்தையும் தனதாக்கிக் கொண்டான். தம்பிக்கு மலையடிவாரத்தில் சோளம் பயிரிட ஒரு துண்டு நிலத்தையும், ஒரு கிழட்டு நாயையும், ஒரு பூனையையும் கொடுத்தான்.

தம்பி எதுவும் பேசவில்லை. அண்ணனின் பாதங்களைத் தொட்டு வணங்கி விட்டுக் குனிந்த தலையோடு வெளியேறினான். நாயும், பூனையும் தொடர, மலையடிவாரத்து வறண்ட நிலத்தை நோக்கிச் சென்றான். சோளம் பயிரிட அங்கு போனதும், இந்தத் தரிசு நிலத்தை எப்படி உழுது பயிர் செய்வது என்ற கவலை ஏற்பட்டது. அவனிடமோ எருதுகள் இல்லை; குதிரையில்லை. கிழட்டு நாயும், பூனையும் களையிழந்து வாடிய அவன் முகத்தைப் பார்த்தபடி நின்றிருந்தன.

தம்பி தலையைச் சொரிந்து கொண்டு ஒரு முடிவுக்கு வந்தான். நுகத்தடியில் நாயையும், பூனையையும் பூட்டினான். வேறு வழி? ஓட்டினான்?

நாய் குரைத்தது; பூனை முனகிற்று. உழவு முனையோ கரடுமுரடான காய்ந்த பூமியில் கிரீச்சிட்டது. இந்த விநோதமான காட்சியை நெடுதுயர்ந்த மலை பார்த்துக் கொண்டிருந்தது. அந்த அப்பாவித் தம்பியின் பொறுமை மலையரசனின் மனத்தை இளக்கியது. தன் உடலை சிலிர்த்துக் கொண்டது மலை. தன் புருவத்தை உயர்த்தியது. தன் பெரிய வாயைத் திறந்தது. பிரம்மாண்டமான தன் வாயால் 'அடாடா!' என்று சப்புக் கொட்டியது.

மலை தன் வாயைத் திறந்து சப்புக் கொட்டினால் எப்படி இருக்கும்? கற்பனை செய்து பாருங்கள்! மலைமீதுள்ள பாறைகள் உருண்டு புரண்டன. அந்த கிடுகிடு சத்தத்தினால் கதிகலங்கிப் போனான் தம்பி. மலை அரசனின் குகை போன்ற வாய் திறந்திருப்பதையும், அதன் உள்ளிருந்து ஒளி வீசுவதையும் கண்டு முதலில் பயந்து நடுங்கினாலும், பிறகு தெளிவு பெற்று, அந்தக் குகையை நோக்கி ஒளியை நோக்கி ஓடினான். பாறைகளைப் பற்றியவாறு தட்டுத் தடுமாறி ஏறினான் மலைமீது. மலை அரசனின் பாறைக்கழுத்து, முகவாய், உதடு இப்படி அடுத்தடுத்து ஏறி, மேல் வாய்க்குள் புகுந்தான். அங்கே...

பொன்னும், வெள்ளியும், வைர, வைடூரியங்களும் குவியலாக குவிந்து கிடந்தன. அவற்றின் ஒளிதான் அப்படிக் கண்களை கூச வைத்தன. இடையிலுள்ள கந்தல் ஆடையை அவிழ்த்தான். அதை மடித்துப் போட்டான். மேலாடையையும் பரப்பினான். அவை இரண்டும் தாங்கும் அளவுக்கு செல்வங்களை அள்ளி மூட்டை கட்டியவாறு மலை அரசனின் வாய்க் குகையிலிருந்து வெளியேறினான். அவன் வெளியே வந்ததும் மலை அரசன் 'படார்' என்று தன் பெரிய குகை வாயை மூடிக் கொண்டான்.

தனக்கு வந்த அதிர்ஷ்டத்தை அவனால் நம்பவே முடியவில்லை. புதையலோடு கிராமம் திரும்பியவன், மலையடி வாரத்தில் தன் நிலத்தில் எளிமையான ஒரு வீடு கட்டிக் கொண்டான். உழவு மாடுகளையும், நெல் வயல்களையும் வாங்கினான். நெல் பயிரிட்டான், உழைத்தான். தன் நாய், பூனையோடு நிம்மதியாக வாழலானான்.

தம்பிக்கு வந்த அதிர்ஷ்டம் பற்றி அண்ணனுக்கு தெரியாமல் இருக்குமா? பேராசையும், பெறாமையும் கொழுந்துவிட்டு எரியலாயிற்று அவன் மனதில்.

ஒருநாள் தம்பியை அழைத்து உபசாரம் செய்து, எப்படி அவனுக்கு இவ்வளவு செல்வம் வந்தது என்று கேட்டான். அண்ணனிடம் மதிப்பும், மரியாதையும் கொண்ட தம்பி எதையும் மறைக்காமல் எல்லாவற்றையும் கூறினான்.

அடுத்த நாளே, பேராசைக்கார அண்ணன் தன் மனைவி, கொழு கொழு நாய், பூனையோடு மலையை நோக்கிக் கிளம்பி விட்டான். கூடவே காளைகள் பூட்டிய இரண்டு பெரிய வண்டிகளையும் கொண்டு சென்றான் மலையரசனின் புதையல்களை அள்ளிக் கொண்டு வர.

மலையடிவாரத்துக்கு வந்ததும் சோளக் கொல்லையில் தன் நாயையும், பூனையும் உழவில் பூட்டி விரட்டினான் அண்ணன். தின்று கொழுந்த நாயும், பூனையும் அவன் சவுக்கடி தாளாமல் கதறின. இந்தக் காட்சியைக் கண்ட மலையரசன் வயிறு குலுங்க சிரிக்கலானான். மலை மீதிருந்த மரங்களும், பாறைகளும் சரிந்து உருண்டன. மலையரசனின் புருவமும், மூக்கும் சுருங்க பெரிய வாய் 'ஆ' வென்று திறந்தது. வாய்க்குள் இருக்கும் புதையலின் ஒளி பளிச்சிட்டது. அண்ணன்காரன் உழவை அப்படியே விட்டு விட்டு, மனைவியை இழுத்தபடி ஓடினான். மலையரசனின் திறந்த வாயை நோக்கி. கையோடு கொண்டு வந்திருந்த சாக்குப் பைகளில் புதையல் குவியல்களை அள்ளி, அள்ளி நிரப்பிக் கொண்டான். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து என்று சாக்குப் பைகளை நிரப்பியபடி மலை அரசனின் வாய்க்கு உள்ளே, உள்ளே ஏ... ஏ... ஏ... போய் விட்டான்.

மலையரசனின் நகைப்பு, வெறுப்பாக, கோபமாக மாறியது. அந்த மனிதனின் பேராசையைக் கண்டு இடி முழுக்கம் போல தன் பிரம்மாண்டமான வாயை மூடிக் கொண்டான் மலையரசன். பேராசைக்கார அண்ணனும், அவன் மனைவியும் மலை அரசனின் வயிற்றுக்குள் சமாதியாயினர்.

மறுநாள் காலை அண்ணனைத் தேடி மலையடிவாரத்துக்கு வந்தான் தம்பி. அங்கே கொழு கொழு நாயும், பூனையும் காலியான இரு வண்டிகளும் மட்டுமே நின்றிருந்தன. வேறு எதுவுமே இல்லை. இப்போதும் தம்பி ஒரு வார்த்தையும் பேசவில்லை. நிமிர்ந்து நெடுதுயர்ந்து நிற்கும் மலையைப் பார்த்தான். மவுனமாக மலையரசன் அந்த நல்ல இதயம் படைத்த தம்பியைப் பார்த்து கண் சிமிட்டினார்.

பேராசை பெருநஷ்டம் என்பது இதுதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us