தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பொக்கிஷம்! (38)

பொக்கிஷம்! (38)

பொக்கிஷம்! (38)


PUBLISHED ON : ஜன 01, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: தளபதி, குணாளனை சிறையிலிட்ட சிறுவர்கள் மன்னரையும், அமைச்சரையும் விடுவித்தனர். பிறகு மேலை நாட்டினருடன் போரிட சென்ற சிறுவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார் மன்னர். இனி-

சின்னதம்பியும், வாண்டுவும் கங்கை கட்டடம் வந்தடைந்தனர். அதற்குள் மற்ற நண்பர்களும் தங்கள் படகுகளில் அங்கு வந்து சேர்ந்தனர். 'வெற்றி முழக்கம் செய்திடுவோம்; விஜயபுரியை காத்திடுவோம்!' என்று ஆனந்த பாட்டு பாடியபடி ஒரு எழுச்சியுடன் அனைவரும் கங்கை கடலில் கலக்கும் இடம் சென்றனர்.

அதற்குள் விவரம் விஜயபுரி முழுவதும் பரவவே, அனைவரும் கங்கை கரையை சுற்றிலும் நின்று, சிறுவர்களுக்கு தங்கள் கைகளை ஆட்டி உற்சாகமூட்டியபடி இருந்தனர். அதே சமயம், மிக வேகமாக பவுர்ணமி நிலவு தோன்று முன் பாய்மரக்கலனில் வந்து கொண்டிருந்தனர் சிங்கனும் மற்றவர்களும். வீர சிறுவர்கள் அவர்களை கூட்டமாக சென்று அழைத்து வரவும் சிங்கன் மகிழ்வுற்றான்.

''சிறுவர் சமூகம் விழித்துக் கொண்டு விட்டது. இனி நமக்கு கவலை இல்லை!'' என்றான் சிங்கன்.

விஜயரெங்கனும், கேசரியும் மனம் மகிழ்ந்து ஆமோதித்து, சின்னதம்பியையும், வாண்டுவையும் தழுவி உச்சி முகர்ந்தனர்.

''சிறுவர்களே வர இருக்கும் மேலை நாட்டின் படை சாதாரணமானது அல்ல. வெறும் வில்லும், கத்தியும், கேடயமும், வாளும் வைத்து போர் செய்யும் கூட்டமும் அல்ல. மாறாக, துப்பாக்கி என்ற சக்தி வாய்ந்த ஆயுதம் கொண்டு நம்மை அழிக்க வருகின்றனர். அதனால் நாங்கள் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகளையும், ரவைகளையும் எங்கள் சாமர்த்தியத்தால் எடுத்து வந்துள்ளோம்.

''நான் உங்கள் அனைவருக்கும் அதை எப்படி கையாள்வது என்று கற்றுக்கொடுப்பேன். நீங்கள் அதன்படி கற்று எதிரிகளை துவம்சம் செய்துவிடுங்கள். நாங்கள் நேரிடையாக போர் செய்ய முடியாது. காரணம், நாங்கள் அவர்களால் தேடப்படும் குற்றவாளிகள். எனவே, நாங்கள் இந்த கங்கை கரையில் இருக்கும் மரங்களில் ஏறி தப்பித்து நடப்பதை கவனித்தபடி இருப்போம். எச்சரிக்கையாக செயல்படுங்கள்,'' என்று கூறி விஜயரெங்கன் படகுக்கு இருவர் என்ற ரீதியில் துப்பாக்கி சுடும் பயிற்சியை கொடுத்தான்.

புத்திசாலி சிறுவர்கள் உடனே அதை கற்றுக் கொண்டுவிட்டனர். பின் சிறுவர்கள் அனைவருக்கும் ஆயுதங்களை கொடுத்தான். சின்னதம்பி நடந்த அத்தனை நிகழ்வுகளையும் விவரித்தான். சிங்கனும், விஜயரெங்கனும், கேசரியும் மெய் சிலிர்த்தனர்.

சிங்கன் உணர்ச்சி பிழம்பாகி பேசினான்.

''என் அருமை சிறுவர்களே! இந்த நாட்டின் அரும் பொக்கிஷங்களே... நான் கேள்விப்பட்ட விஷயங்கள் மிகவும் மன மகிழ்வை தருவதாக இருந்தது. நீங்கள் விழித்துக்கொண்ட காரணத்தால், நாங்கள் இனி சற்று கண் அயரலாம் என்ற தைரியம் வந்து விட்டது. உங்கள் பங்களிப்பே இந்த நாட்டை வளமிக்கதாகவும், வலிமை மிக்கதாகவும் ஆக்கவல்லது என்ற ரகசியம் யாருமே கண்டு கொள்ளாத அலட்சியப்படுத்திய ரகசியமாகத்தான் இருந்தது. இப்போது நேரில் கண்ட மற்றும் காதால் கேட்ட நிகழ்வுகளில் இருந்து உங்கள் சக்தி இந்த அலைகடலினும் பெரிது, பெரிது, பெரிது என்பதை ஒப்புக் கொள்கிறேன்!''

இதைக்கூறும் போதே சிறுவர்கள் கை கொட்டி தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தினார்.

''சிறுவர்களே உங்களிடம் துப்பாக்கி இருப்பது மேலை நாட்டானுக்கு தெரியக் கூடாது எச்சரிக்கை. நல்ல உத்தி வகுத்து நில்லுங்கள். தேவை என்றால் நானே தலைமை தாங்க வருவேன். இப்போது நாழிகை ஆகிக் கொண்டிருக்கிறது. சூரியன் அஸ்தமனம் தொடங்கி விட்டது. பவுர்ணமி வந்துவிடும். எனவே, நாங்கள் சென்று கங்கை கரையில் இருக்கும் பெரும் மரத்தில் ஏறி மறைந்து கொள்கிறோம் என்றான் சிங்கன். பிறகு விஜயரெங்கன், கேசரி மற்றும் சிங்கன் ஆங்காங்கிருந்த பெரும் மரங்களில் ஆளுக்கு ஒரு மரமாக சிறுவர்களை கண்காணிக்கும் விதமாக ஏறிக்கொண்டனர்.

சிறுவர்கள் அனைவரும் சின்னதம்பிக்கு தலைமை தாங்கும் பொறுப்பை கொடுத்தனர். அவனுக்கு உதவியாக வாண்டுவும், செங்கதிர் செல்வனும் மற்றும் வருணும் நியமிக்கப் பட்டனர்.

சின்னதம்பி பேசினான்.

''என் அருமை சிறுவர்களே... என் ஒரே கட்டளை நம் நாட்டை பற்றியதாக இருக்கும். அப்போது நீங்கள் யாவரும் தாமதிக்காது உடனே செயல்பட வேண்டும். அவ்வளவே. அனைவரும் துப்பாக்கியை நம் மீன் பிடி வலைக்கு கீழ் மறைத்து வையுங்கள். தூண்டில் போட்டு மீன் பிடிப்பது போல் பாசாங்கு செய்யுங்கள். மற்றவைகளை நான் கவனித்துக்கொள்கிறேன்,'' என்று அவன் பேசி முடிக்கும் போதே நூற்றுக்கணக்கான பாய்மரக்கலன்களும், பெரும் கப்பல்களும் வருவதை கண்டான்.

''நண்பர்களே! வந்தது ஆபத்து. எச்சரிக்கை!'' என்றான் சின்னதம்பி.

''சரி தலைவா!'' என்று சிறுவர்கள் குரலிட இப்போது சின்னதம்பி, ''ஓ...ஓ... ஐலசா... ஓ...ஓ...ஓ ஐலசா...'' என்று பாடினான்.

மற்ற சிறுவர்களும் ஒரே குரலில் பாட ஆரம்பித்தனர்.

''டேய் என்னடா பாட்டு இது. வழியை விடுங்கள். கப்பல் வருவது கண்ணுக்கு தெரியவில்லை!'' மேலை நாட்டு வீரன் கத்தினான்.

''வீரரே! நாங்கள் விஜயபுரியின் சிறுவர்கள். இன்று பவுர்ணமி. நாங்கள் இதை ஒவ்வொரு மாதமும் மீன்பிடி திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்வோம். அதனால், நாங்கள் இப்போது மீன் பிடித்துக்கொண்டிருக்கிறோம். உங்களுக்கு என்ன வேணும்? யாரைப் பார்க்கணும்? தயவு செய்து எங்கள் கொண்டாட்டத்துக்கு இடையூறு இல்லாமல் தாங்கள் சென்றால் அது நல்லதாக இருக்கும்!'' என்றான் சின்னதம்பி பவ்யமாக.

''நீ மீனைத்தான் பிடித்துக்கொள். இல்லை திமிங்கிலத்தைத்தான் பிடித்துக்கொள். எங்களுக்கு தேவை வழி. உடனே உங்கள் படகுகளை வேறு இடம் செலுத்தி வழி விடுங்கள்.'' சின்னதம்பி யோசனைப்படி வழி விட்ட சிறுவர்கள் ஒரு கப்பலின் இருபுறமும் தங்கள் படகுகளை செலுத்தி மீன் பிடி பாவனையை செய்து கொண்டிருந்தனர்.

பெரும் கொடியுடன் வந்தது பாய்மரக் கப்பல். அதில் கம்பீரத்துடன் ஒரு மேலை நாட்டு தளபதி தன் படை வீரர்கள் புடைசூழ வந்தார். அவர் கட்டளைக்காக மற்ற கப்பல் வீரர்கள் காத்திருக்க அவர் சிறுவர்களை அலட்சியத்துடன் பார்த்து சிரித்தார்.

''தம்பிகளே! எங்கள் கப்பல்களை சுற்றி சுற்றி வருகிறீர்களே என்ன செய்கிறீர்கள் இங்கு!'' என்று ஏளனத்தோடு கேட்டார்.

''அய்யா! இன்று பவுர்ணமி. எங்களுக்கு மீன்பிடித்திருவிழா. அதனால் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறோம்!''

''நல்லது. ஆனால், நாங்கள் இங்கு மனித வேட்டையாட வந்திருக்கிறோம். முதலில் மூன்று மனிதர்கள். பிறகுதான் மற்றவர்கள். அவர்களையும் நீயே பாரேன்!'' என்ற தளபதி தன் தொலைதூரம் பார்க்கும் கருவியை கொடுத்து அருகில் இருக்கும் மரங்களை பார்க்க சொன்னான்.

சின்னதம்பிக்கு ரத்தம் சூடாகியது. தன் அப்பாவையும், கேசரியையும், விஜயரெங்கனையும்தான் இந்த தளபதி வேட்டையாடப் போகிறான் என்று ஊர்ஜிதம் செய்து கொண்டான்.

''என்ன தம்பி. பார்த்தாய் அல்லவா? உங்களுக்கு அரை நாழி தருகிறேன். அதற்குள் சென்று விடுங்கள். பின் எங்கள் பணியால் நீங்களும் பாதிக்கப்படலாம்!''

''அய்யா நாங்கள் மீன் பிடி தொழிலை முடிக்கும்முன் நாட்டுப்பண் பாடி துதிப்போம். அதை செய்துவிட்டு போய்விடுகிறோம்!'' என்றதும், தளபதி அவன் முதுகில் தட்டி ஆமோதித்தான்.

''சின்னதம்பி ஒரு முறை அனைவரையும் பார்த்தான். தன் மேல் துண்டை வேகமாக அனைவரும் காணும்படி சுழற்றினான். பின் பெரும் குரலில், ஜெய் விஜயபுரி! ஜெய் ஜெய் விஜயபுரி' என்று முழக்கமிட்டு வேகமாக பின்னோக்கி சென்று தளபதியை சுடவும் அனைத்து சிறுவர்களும், 'ஜெய் விஜயபுரி! ஜெய் ஜெய் விஜயபுரி' என்று முழக்கமிட்டு அவரவர் அருகில் இருந்த கப்பல் வீரர்களை குறி வைத்து சுட்டனர். இப்போது ஒரே நிசப்தம். அனைவரும் இந்த எதிர்பாரா நிகழ்வில் திடீரென சுடப்பட்டதால் அவர்கள் கப்பல்களில் சாய்ந்து விழுந்தனர்.

உடனே சிங்கன் வேகமாக இறங்கி தளபதியின் கப்பலில் ஏறினான். விழுந்து கிடந்த தளபதியின் கைகளை கட்டி பின் படகு மூலம் கரை சேர்த்தான். அதே போல், மற்ற வீரர்களும் கரை சேர்க்கப்பட்டு பின், வைத்தியத்துக்காக அரண்மனைக்கு பொதுமக்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வளவு நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதை சற்றும் எதிர்பார்க்காத மன்னர், அமைச்சர் புடை சூழ உடனே கங்கை கரை வந்தடைந்தார்.

விஜயரெங்கன், மன்னர் பாதங்களில் விழுந்து மன்னிப்பு வேண்டினான். சிங்கனும், கேசரியும் பாராட்டப்பட்டனர். பின் சிறுவர்களை அந்த நாட்டு வீரர்கள் தங்கள் தோள்களில் சுமந்து வர நாடே சிறுவர்களை மலர்கள் தூவி வாழ்க கோஷம் எழுப்பி பாராட்டியது. மேலை நாட்டு தளபதி உடல் நலமுற்றதும் விஜயபுரியின் தளபதிக்கு எதிரிலேயே பாதாள சிறையில் சிறை வைக்கப்பட்டான்.

''மன்னா...!'' சின்னதம்பி மெல்ல பணிவுடன் அழைத்தான்.

''என்ன வீரனே கூறு!'' என்றார் மன்னர்.

''பொக்கிஷ ரகசியம் நாங்கள் அறிந்ததும் மறைந்த மயன் தாங்கள் அழைத்தால், மீண்டும் ஒருமுறை வருவதாக வாக்களித்தார். அதனால் தாங்கள் அவரை காண வேண்டும்!'' என்றான் சின்னதம்பி.

''சரி!'' என்ற மன்னர் ''சிறுவர்களாகிய நீங்களே தலைமைதாங்கி எங்களை வழி நடத்தி செல்லுங்கள்!'' என்றார்.

இப்போது சின்னதம்பியின் தலைமையில் சிறுவர்கள் முன் செல்ல, மன்னரும் அமைச்சர் பெருமக்களும், வீரர்களும் பின் சென்றனர்.

- தொடரும்...

பூரணி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us