PUBLISHED ON : ஆக 15, 2014

சோழ வள நாட்டில் மாறப்பன் என்பவன் இருந்தான். அவன் கட்டிளங்காளை. சோம்பேறியாக வாழத் தெரியாதவன். நெஞ்சுறுதியும், நேர்மைத் திறனும், உடலிலே வலுவும் கொண்ட உழைப்பாளி. உழைப்பாளி மட்டுமல்ல... உடல் உறுதியை வெளிப்படுத்தும் வீர விளையாட்டுகளிலும் நாட்டம் கொண்டவன் மாறப்பன். சிலம்பம் சுழற்றுவதிலே சிங்கம். தோள்தட்டி, மார்தட்டி, தொடை தட்டி மல்யுத்தத்துக்குக் களத்திலே இறங்கினால், எதிரியின் முதுகுக்கு மண்காட்டி விட்டு வருவான்.
அன்று களத்து மேட்டிலே தன்னையொத்த வாலிபர்களோடு விளையாட்டாக மல்யுத்தம் செய்து கொண்டிருந்தான் மாறப்பன். அவரவரும் தம் திறமையைக் காட்டக் கட்டிப்புரண்டு கொண்டிருந்தனர் களத்து மண்ணிலே. எதிரியின் முதுகுக்கு மண் காட்டுவதில் முனைப்பா யிருந்தனர். தன் சகாக்கள் அத்தனை பேரையும் மண்ணை கவ்வவைத்து, வெற்றி வீரனாகத் தலைநிமிர்ந்து நின்றான் மாறப்பன்.
இவர்களது வீரவிளையாட்டு களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்திலிருந்து ஒரு குரல் பேசிற்று.
''இதென்ன மல்யுத்தம்? ராயர் ராஜ்ஜியத்திலே பாக்கணும் இந்தச் சண்டையை! எப்படித் தெரியுமா இருக்கும்...?'' என்றார் ஒருவர்.
குரல் வந்த திசையில் அனைவரின் பார்வையும் திரும்பியது. மாறப்பனும் அந்தக் குரலுக்குரிய ஆளை ஆர்வத்தோடு பார்த்தான்.
கைப்பிடி அளவுக்குப் பெரிய மீசையும், தலை தாங்காத அளவுக்குப் பெரிய முண்டாசுவும், கங்கணம் பூண்ட கைகள், ஒரு கையில் வலுவானதோர் தடி. உடையும், தோற்றமும் அவன் தமிழ் நாட்டவன் அல்லன் என்பதைக் கூறின. அவன் கொற்கையில் முத்துப் பிடித்துப் போக வந்திருந்த வியாபாரி.
''ராயர் ராஜ்ஜியமா? அது எங்கே இருக்கு?'' என்று கேட்டான் மாறப்பன்.
''விஜய நகரத்து மன்னர் கிருஷ்ண தேவராயரைத் தெரியாதா? அவர் ராஜ்ஜியம்தான் ராயர் ராஜ்ஜியம். அவர் பெரிய மல்லராயிற்றே,'' என்றான் அந்த புஸ்தி மீசைக்காரன்.
பிறகு கூட்டத்தினரின் ஆர்வமான கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறினான். தமிழகத்துக்கு வடக்கேயுள்ள ஆந்திர நாட்டையும், அதன் தலை நகரான விஜய நகரத்தையும், அதை ஆண்டுவரும் புகழ் பெற்ற கிருஷ்ணதேவராய மன்னரின் பெருமை பற்றியும் கூறினான்.
ராயரையும் அவர் ராஜ்ஜியத்தின் பெருமைகளையும் கேட்க, கேட்க மாறப்பனுக்கு அங்கு போக வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. கிணற்றுத் தவளையாக இல்லாமல், பல நாடுகளையும், நாகரிகங்களையும், மனிதர்களையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்ச நாளாகவே, அவன் உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்தது.
இப்போது இந்த ஆந்திர வியாபாரி, கிருஷ்ணதேவராயரின் மற்போரைப் பற்றிப் புகழவே, அவன் எண்ணம் தீவிரமடைந்தது.
'ராயர் ராஜ்ஜியத்துக்குப் போய், கிருஷ்ண தேவராய மன்னரின் மற்போரைக் காண வேண்டும். அவரைச் சந்திக்க வேண்டும்' என்று முடிவு செய்து கொண்டு வீட்டிற்கு சென்றான்.
வீட்டுக்கு சென்ற மாறப்பன், அவன் தாயிடம் இதைப் பற்றி கூறினான்.
இதைக் கேட்டதும் அவள் தவித்துப் போனாள். ஏனெனில், மாறப்பனின் தாய்க்கு அவன் ஒரே பிள்ளை. கணவனை இழந்த அவள், தன் அன்புமகனே தன் உலகம் என்று வாழ்ந்து வந்தவள்.
''அது வடக்கே வெகுதொலைவில் இருப்பதாக அல்லவா சொல்வார்கள்...'' என்றாள் கலவரத்துடன்.
''ஆமாம் அம்மா. அதன் மன்னர் கிருஷ்ணதேவராயர் புகழ்பெற்ற மல்லராம். மல்லர்களை வரவேற்பவராம். அவர் நாடும் ரொம்பச் செழிப்பானதாம். அவர் படையில் எனக்கு நல்ல பதவி கிடைக்கும் என்று நினைக்கிறேன். ராயரின் அன்பைப் பெறுவேனானால், எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது,'' என்றான் மாறப்பன் கனவுகளோடு.
''மகனே, மாறப்பா! இந்தத் தள்ளாத வயசு காலத்திலே என்னைத் தனியாக விட்டுப் போறேங்கிறியே... உன்னைப் பிரிந்து நான் எப்படியப்பா இங்கே வாழுவேன்!'' என்றாள் தாயார் கண்களில் நீர் பெருக.
''கவலைப்படாதேம்மா. உன்னைப் பிரிந்து வாழ என்னாலும் முடியாதும்மா. கொஞ்ச நாள்தான். பொறுத்துக் கொள்ளுங்கள். ராயர் ராஜ்ஜியத்திலே எனக்கு வரவேற்பு இருந்தால், உன்னை வந்து கூட்டிப் போறேன். இல்லை என்றால் உங்களிடமே திரும்பி வந்து விடுகிறேன். நீ கண் கலங்கினால், என்னால் சந்தோஷமாப் போக முடியாது. என்னை ஆசி கூறி அனுப்பு,'' என்று தாயாரை வணங்கினான் மாறப்பன்.
அவனைத் தடுத்து நிறுத்த முடியாது. அப்படி செய்யவும் கூடாது என்பதை உணர்ந்தவள், கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ''நீ வளமாக வாழ வேண்டும் என்று எனக்கும் ஆசைதான். தொலைதூரம் போகிறாயே என்றுதான் கவலையாக இருக்கிறது. தனியாகப் போகிறாய், ஜாக்கிரதையாகப் போய் வா. கடவுள் உனக்குத் துணை இருப்பார். உன் வரவை எதிர் பார்த்து, நாட்களை எண்ணிக் கொண்டிருப்பேன். வெற்றி யோடு திரும்பு,'' என்று மகனை அரவணைத்து ஆசீர்வதித்து அனுப்பினாள் அன்னை.
உடல் வலிமைமிக்க மாறப்பனுக்கு, நெடுந் தொலைவுப் பயணம் மலைப்பாக இல்லை. சிலம்பத்தில் வல்லவனான அவனுக்குத் துணையாக சிலம்பக்கழி இருந்தது. பயமே அறியாத அவன், பலநாள் பயணப்பட்டு தமிழகத்தைக் கடந்து, ஆந்திர நாட்டுக்கு வந்தவுடன், விஜய நகரம் போகும் வழியை விசாரித்துக் கொண்டு வேகநடை போட்டான்.
'விரைவில் விஜயநகரை அடையவேண்டும், மன்னர் ராயரைக் காண வேண்டும்' என்ற ஆவல் அவனை விரட்டிக் கொண்டிருந்தது. விஜய நகரின் எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தான். அப்போது வந்த ராஜபாட்டையில் இரண்டு பேர் குதிரையில் வந்து கொண்டிருந்தனர். ஒரு குதிரை முரண்டு பிடித்து சண்டித்தனம் செய்தது முன்னேறாமல்.
''சனியனே! ஏன் இப்படிச் சண்டித்தனம் செய்கிறாய்? என்ன கேடு உனக்கு? நேரமாகி விட்டது. பந்தைய மைதானத்துக்குச் சீக்கிரம் போக வேண்டும். கழுதைக்குப் பிறந்தவனே! சீக்கிரம் போய்த்தொலை!'' என்று அதன் கடிவாளத்தை இழுத்தும், உலுக்கியும் அதன் விலாவில் கால்களால் உதைத்தும் குதிரை யோடு போராடினான் குதிரை மீதிருந்தவன்.
அவன் தவிப்பையும், கோபத்தையும் நெடுஞ்சாலையில் ஓரத்தில் நின்றபடி, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாறப்பன், 'குதிரையை இப்படி இம்சித்தால் அது எப்படி ஓடும்?' என்று எண்ணினான்.
எரிச்சல் அடைந்த குதிரை, கோபத்தோடு கனைத்தது; உடலைக்குலுக்கி, தன் மீதிருப்பவனை விசிறி அடித்துக்கீழே தள்ளியது. குதிரையிலிருந்து வீசி எறியப் பட்டவனைக் கண்டு மாறப்பனுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை.
'குதிரையை அன்போடு நடத்தத் தெரியாத இவனுக்குச் சரியான பாடம்தான் இது!' என்று சிரித்த மாறனின் சிரிப்பு சட்டென்று நின்றது.
காரணம், குதிரையினால் தூக்கி எறியப் பட்டவன் மாறப்பனின் மீது தொப்பென்று வந்து விழுந்தான். அவன் மாறப்பனைப் போலவே பலசாலி. வலுவான உடல். நிலை தடுமாறிப் போய் கீழே விழுந்தான் மாறப்பன்.
இதற்குள் மற்றொரு குதிரையில் வந்தவன், மாறப்பனை அமுக்கிக்கொண்டு, அவன் மீது கிடப்பவனைப் பார்த்து, ''திம்மராயா! உன் விளையாட்டெல்லாம் போதும் எழுந்து வா... நேரமாகிறது!'' என்றான்.
திடீரென்று தன்மீது மோதி விழுந்து தன்னை அழுத்திய அந்த மனிதனின் பளுவினால் மூச்சுத்திணறிப் போன மாறப்பன், தன் நிலைக்கு வரச் சிறிது நேரமாயிற்று. நிகழ்ச்சியை எண்ணிய போதுதான் சிரிப்பு வந்தது.
மாறப்பன் மீதிருந்து எழுந்து, விலகிப் போய் நின்றவன் மாறப்பன் சிரிப்பதைக் கண்டு சினந்தான்.
''என்ன தம்பி சிரிப்பு? ஒரு குத்து விட்டேன்னா உன் சிரிப்பு அழுகையாக மாறிடும்,'' என்றான் வீராப்புடன்.
தன் உடல் உடையில் தொற்றிக் கொண்டிருந்த தூசிகளைத் தட்டிக்கொண்டே, ''எங்கே குத்து பாக்கலாம். அழறது நானா? நீயா? ங்கறது அப்போ தெரியும்,'' என்றான் மாறப்பன்.
குதிரைமீது அமர்ந்திருந்த தோழன் திருமலை, கீழே விழுந்து விவகாரம் பேசு பவனிடம், ''திம்மா! அந்தப் பொடியனை அடிச்சுப் போட்டுட்டுக் கிளம்பு. பந்தயத்துக்கு நேரமாவுதில்லே?'' என்று துரிதப்படுத்தினான்.
திருமலையின் பேச்சைக் கேட்ட திம்மராயன், இரும்பைப் போன்ற தன் முஷ்டியை மாறனின் முகவாயை நோக்கி வீசினான். ஆனால், அவன் குறி வைத்த இடத்தில் மாறனின் முகவாய் இல்லை! ஏன்?
-1 தொடரும்.
