PUBLISHED ON : ஆக 15, 2014

நீண்டுயர்ந்த பெருமரங்கள் சூழ்ந்திருந்த காடு அது. விலங்கினங்கள் மிகுந்த பாதுகாப்போடு வாழ்ந்து வரும் சூழ்நிலை அக்காட்டில் நிலவிக் கொண்டிருந்தது. மிருகங்களை வேட்டையாடி ஜீவனம் நடத்தி வரும் வேடர்கள் பலரும் அந்தக் காட்டில் மிருகங்களைத் தேடி அங்கிங்கெனாதபடி அலைந்து திரிந்து கொண்டிருந்தனர்.
அவ்வேடர் கூட்டத்தில் ஒருவனாக அலைந்து கொண்டிருந்தான் கவுசிகன் என்னும் பெயர் கொண்ட வேடன் ஒருவன். மிருகங்களை வேட்டையாடுவதோடு மட்டும் நின்று விடுவான். வேட்டையில் தனக்குத் தேவைப்பட்ட மிருகம் கிடைத்து விட்டால் போதும், அத்துடன் திருப்தி அடைந்து வீட்டுக்குச் சென்றுவிடுவான்.
நாட்கள் சில சென்றன. வழக்கம்போல் வேட்டைக்குச் சென்ற கவுசிகனுக்கு அன்றைய தினம் வேட்டையில் எதுவும் கிட்டவில்லை. 'வெறுங்கையோடு வீடு திரும்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடும்போல் தோன்றுகிறதே...' என்று மனக் கவலை கொண்டான் கவுசிகன்.
ஏமாற்றம் அடைந்தவனாய், ஒரு மரத்தின் மீது ஏறி உட்கார்ந்தான். கண் பார்வையால் காட்டைச் சுற்றி நோட்டமிட்டான். பச்சைப் பசேல் என்று விளங்கிய மரங்களைத் தவிர அவன் கண்களுக்கு எதுவும் தென்பட வில்லை!
சிறிது நேரம், அவ்வாறே அமர்ந்து தனது பார்வையைச் சுழல விட்டான்.
அப்போது...!
சற்று தொலைவில் மூன்று பேர் தலையில் மூட்டையைச் சுமந்த வண்ணம், அந்த வழியாக வந்த கொண்டிருப்பது அவனது கண்ணில் பட்டது. உடனே மரத்தை விட்டுக் கீழே இறங்கி, சற்றுத் தள்ளியிருந்த ஒரு புதரில் ஒளிந்துக் கொண்டான்.
'டேய்! கவுசிகா! இன்று நீ வெறுங்கையோடுதான் திரும்பப் போகிறாய்! வந்து கொண்டிருக்கும் நபர்களின் தலையில் உள்ள மூட்டைகளைக் கைப்பற்றிக்கொள்' என்று அவன் மனம் உறுத்தியது.
கவுசிகன் யோசிக்க ஆரம்பித்தான். 'வேட்டைத் தொழிலோடு, இந்தப் புதிய தொழிலையும் அதாவது வழிப்பறிக் கொள்ளையையும் மேற்கொண்டால் என்ன?' என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது.
அவ்வளவுதான்...!
புதரை விட்டு வெளியே வந்து மரத்தின் பின்புறம் ஒளிந்துக் கொண்டான். வழிப் போக்கர்களின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.
மூட்டையைச் சுமந்துவந்த வழிப் போக்கர்கள் அந்த மரத்தை நெருங்கினர்!
''நல்ல வேளை! ஆபத்தான இடத்தைத் தாண்டிவிட்டோம். இனிப் பயம் ஏதுமில்லை!'' என்று வழிப் போக்கர்களில் ஒருவன் கூறினான்.
அப்போது, ''எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்?'' என்று ஒரு சத்தம் கேட்க, வழிப் போக்கர்கள் சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தனர்!
வேட்டைக்காரக் கவுசிகன் கொலை வெறியோடு அவர்கள் முன்னே நின்று கொண்டிருந்தான்!
அவனது கையில் வில்லும், அம்பும் மற்றும் கொலைக் கருவிகளும் இருந்தன. அவனது கருவிகளும் அவனது பார்வையும் வழிப்போக்கர்களை பயத்துக்கும், பீதிக்கும் ஆளாக்கின. அவர்களிடம் இருந்த மன உறுதி குலையத் தொடங்கியது. என்ன செய்வது என்ன வழி தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர்.
ஆயுதபாணியான கவுசிகனை நிராயுத பாணிகளான வழிப்போக்கர்கள் எதிர் கொண்டு வெற்றி பெற முடியுமா என்ன?
கவுசிகன், வழிப் போக்கர்களை மிரட்டி பயமுறுத்தி, அவர்களிடம் இருந்த மூட்டைகளை மிக எளிதில் கைப்பற்றிக் கொண்டான்.
பிறகு என்ன?
மூட்டைகளுடன் வந்த வழிப்போக்கர்கள் வெறுங்கையோடு சென்று கொண்டிருந்தனர். கவுசிகனோ, வெறுங்கையோடு போக வேண்டியவன். கை நிறைய பொருள்களைச் சுமந்து சென்று கொண்டிருந்தான்.
இந்தச் சம்பவத்திலிருந்து, கவுசிகனுக்கு வேட்டையாடுவதில் மனம் செல்லவில்லை. மனிதர்களை மிரட்டி கொள்ளை அடிக்க ஆரம்பித்தான். அதற்காகக் கொலைகளையும் செய்யத் தொடங்கினான்.
இப்படியாக, கவுசிகனுடைய வாழ்க்கை காட்டில் தொடங்கி, வேட்டையாடுவதில் தொடர்ந்தது. பின்னர் வழிப்பறியும், கொள்ளை, கொலைகளும் அவனுக்குப் புதிய வாழ்க்கையாக மாறிவிட்டன.
மனிதப் பண்புகளுக்கு அப்பாற்பட்ட முறையில் கவுசிகன் இப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டு வந்த வேளையில்...!
ஒருநாள் நாரதர் காட்டில் அவனைச் சந்தித்தார்.
நாரதர் கவுசிகனைப் பார்த்து, ''மானிடப் பிறவியே! நீ ஆரம்பத்தில் மிருகங்களைக் கொன்று தீர்த்தாய்! இப்போது மனிதர்களின் பொருள்களைக் கொள்ளையடிப்பதோடு, அவர்களது உயிர்களையும் பறிக்கிற கொலைத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறாய்! இப்படியே பாவ மூட்டைகளை அதிகரித்துக் கொண்டே போகிறாயே? ஏன் இவ்வாறு செய்கிறாய்? நீ செய்வதெல்லாம் தவறு என்று உன் மனதுக்குப்பட வில்லையோ?'' என்று கேட்டார்.
''என் மனைவி மக்களைக் காப்பாற்ற வேண்டாமா? அதற்காகத்தான் இப்படிச் செய்கிறேன்,'' என்று கவுசிகன் கூறினான்.
''அப்படியா? இறைவன் உன்னை இரு கரங்களுடன் படைத்துள்ளானே! அவற்றைக் கொண்டு நேர் வழியில் உழைக்க முடியாதா உன்னால்? வலுவான உன் கரங்களைக் கொண்டு மரம், மட்டை வெட்டி, அவற்றை விற்றுப் பிழைப்பு நடத்த முடியாதா உன்னால்? அதை விட்டு விட்டு உன் கரங்களால் மனிதர்களின் தலையை வெட்டியா, உன் தலையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?'' இவ்வாறு கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார் நாரதர்.
ஆனால், கவுசிகனோ, ''என் குடும்பத்தைக் காப்பாற்றவே நான் இவ்வாறு செய்கிறேன்,'' என்று தனது பழைய பதிலையே திரும்பத் திரும்பச் சொன்னான்.
நாரதரும் கவுசிகனை விடுவதாக இல்லை. மீண்டும் நாரதர் அவனைப் பார்த்து, ''அப்படியா! நீ சொல்வது சரியென்றே வைத்துக் கொள்வோம். ஆனால், ஒன்று நீ செய்கிற இந்த பாவத்தில் உன் குடும்பத்தினரும் பங்கு பெறுகிறார்களா? என்று அவர்களிடம் கேட்டுப்பார்,'' என்று கூறினார்.
நாரதரிடம் விடைபெற்றுச் சென்றான் கவுசிகன்!
தன் கணவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது பற்றி கவுசிகனின் மனைவி கேட்டதுமில்லை; அவன் சொன்னதுமில்லை.
ஆனால், நாரதரிடம் விடை பெற்றுச் சென்ற கவுசிகன் தன் மனைவியிடம் ஆசையோடு, ''நான் செய்யும் தொழிலில் உனக்குப் பங்கு உண்டல்லவா?'' என்று கேட்டான்.
''என்ன தொழில் என்று தெரிந்தால் அல்லவா, நான் உங்கள் கேள்விகளுக்குப் பதில் கூற முடியும்?'' என்று எதிர் கேள்வி கேட்டாள் கவுசிகனின் மனைவி.
தான் செய்து கொண்டிருக்கும் தொழிலைப் பற்றி மிகவும் வெளிப்படையாக ஒளிவு மறைவின்றித் தன் மனைவியிடம் எடுத்துக் கூறினான் கவுசிகன்.
அவன் கூறி முடிப்பதற்குள், அவள் எரிமலை போல வெடித்தாள். கணவனை எரித்துவிடுவது போலச் சீறினாள்!
''எனக்கென்ன தலை எழுத்தா? உன் பாவம் உன்னோடு தான். உன்னுடைய லாபத்திலும் எனக்குப் பங்கு வேண்டாம்; உன்னுடைய பாவத்திலும் எனக்குப் பங்கு வேண்டாம்! நீ பாவம் செய் அல்லது எது வேண்டுமானாலும் செய். அது பற்றி எனக்கு கவலை இல்லை. நீ என்னைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய். அதனால், என்னைக் காப்பாற்ற வேண்டியது உன்னுடைய பொறுப்பு! பாவ மூட்டைகளைப் பங்கு போடும் எண்ணம் எனக்கு வேண்டாம். அந்தச் சுமையை நீயே தாங்கிக்கொள்; அதன் விளைவுகளையும் நீயே ஏற்றுக்கொள்,'' என்று ஆவேசமாகக் கூறினாள்.
தன் மனைவியின் ஆவேசக் குரலில் பொதிந்திருந்த கருத்துரைகள் கவுசிகனின் உள் மனதைத் தட்டி எழுப்பியது.
அவனவன் சுமைகளை அவனவன் தான் சுமக்க வேண்டுமே தவிர, மற்ற எவரும் சுமக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்தான் கவுசிகன்.
அந்த ஒரு நொடியில், ஏதோ ஒரு புள்ளியில் மனமாற்றம் அடைகிறான். அந்த நொடியில் அவனது வாழ்க்கை மாற்றத்துக்கு உள்ளாகிவிடுகிறது. கவுசிகன் வால்மீகி முனிவராகிறார். பின்னர் அவரால் ராமாயணம் படைக்கப்பட்டது.
***
