தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மல்லன் மாறப்பன் (21)

மல்லன் மாறப்பன் (21)

மல்லன் மாறப்பன் (21)


PUBLISHED ON : ஜன 09, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 09, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: கொள்ளையனை கண்டுபிடிக்க சென்ற மாறப்பனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. கொள்ளையன் பார்ப்பதற்கு நண்பன் திம்மராயனைப் போலவே இருந்தான். இனி-

அன்றிரவும் மாறப்பன் தூக்கத்தை இழந்தான். கண்களை மூடினால் அதே காட்சி. முகமூடி அணிந்தபடி, இருளிலே பதுங்கிப் பதுங்கிச் செல்லும் திம்மராயனின் உருவமே, விழித்திரைக்குள் நர்த்தனமாடி உறுத்திக் கொண்டிருந்தது. மனமோ அரற்றியது; அழுதது.

'திம்மா... நண்பனே, திம்மராயா...! நீ... நீதான் ருத்ரய்யாவா... பகலிலே அரசாங்க ஊழியன் திம்மராயன்... இரவிலே முகமூடி அணிந்து வழிப் பறியும், கொள்ளையும் நடத்தும் ருத்ரய்யாவும் நீதானா? என்ன கொடுமை இது? ஏன் இப்படி இரட்டை வாழ்வு வாழ்கிறாய்? எதற்காக?' மாய்ந்து போனான் மாறப்பன்.

படுக்கையில் புரண்டு, புரண்டு தவித்தான். தூங்க முடியாத அவனுக்கு நீங்காத இரவு நீண்டு கொண்டே போயிற்று.

விடியாதா என்று கண்கள் எரியக் காத்திருந் தான் மாறப்பன். அவன் அவஸ்தையை அறியாத ஆதவன் சாவகாசமாகக் கீழ்வானத்தி லிருந்து எட்டிப் பார்த்தான். இருள் விலகி ஓடத் துவங்கியது. கொள்ளைக்காரன் ருத்ரய்யா, தங்கச் சங்கிலியை மட்டும் திருப்பினானே தவிர, அவனுடைய குதிரையைத் திரும்பக் கொண்டு வந்து தரவில்லை. வியாபாரிகளின் போக்கு வண்டிகளின் மாடுகளை விரட்டி விட்டது போலவே, மாறப்பனின் குதிரையை யும் விரட்டி விட்டிருந்தான் கொள்ளையன். அது, எங்கு போயிற்றோ... யார் பிடித்துக் கொண்டு போனார்களோ?

சத்திரத்து உரிமையாளரிடம், காலையில் எழுந்தவுடனே தனக்கு ஒரு குதிரை தேவை என்றும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி கேட்டான்.

''இரவிலே பயணப்பட வேண்டும். ஆகவே, நல்ல குதிரையாக ஏற்பாடு செய்,'' என்று கூறினான்.

சத்திரத்துக்காரரும், ''இன்று மாலைக்குள் நல்ல குதிரை தயாராக இருக்கும்!'' என்று வாக்களித்தார்.

அன்று பகல் முழுவதும் மாறப்பனுக்கு வேறு எதிலும் கவனம் செல்லவில்லை. முதல் நாள் இரவை போலவே, பகல் முழுவதும் திம்மராயனின் நினைவே அவன் உள்ளத்தைத் திருகிக் கொண்டிருந்தது.

மıலையில் மாறப்பனிடம், ''ஐயா, நீங்கள் விரும்பியபடியே உயர்ந்த ரகக் குதிரை தயாராக இருக்கிறது. நீங்கள் இங்கு தங்கி இருக்கும் வரையில் உங்கள் விருப்பம் போல் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்,'' என்று கூறிவிட்டுப் போனார் சத்திரத்துக்காரர்.

மாறப்பனோ அறையை விட்டு வெளியேறவே இல்லை. கூண்டுப் புலியாக, அறைக் குள்ளேயே அலை பாயும் உள்ளத்துடன், வளைய வந்து கொண்டிருந்தான்.

இரவு வளர வளர அவன் தவிப்பும், அதிக மாகியது. சத்திரத்து அறையில் விளக்கேற்றா மல் இருளாக்கிக் கொண்டு சாளரத்தின் அருகே நின்றபடி, ராஜபாட்டையையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். . இன்றும் திம்மராயன் நடு ஜாமத்தில் வெளியே போகிறானா என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளவே அப்படித் தவங்கிடந்தான் மாறப்பன்.

'என் ஊகம் நிஜமாக இருக்கக் கூடாது... நேற்று நான் பார்த்தது திம்மராயனாக இருக்கக் கூடாது ஆண்டவா!' என்று கலங்கிய அவன் நெஞ்சம் புலம்பிக் கொண்டிருந்தது.

அவன் வேண்டுதல் வீணாயிற்று. முதல் நாள் இரவைப் போலவே, நடு ஜாமத்தில் ஓர் உருவம். தலைப்பாகைத் துணியினால் வாயை மறைத்தபடி குதிரை மீது அமர்ந்து, இருளி லிருந்து வெளிப்பட்டு ராஜபாட்டையில் செல்லலாயிற்று.

'அது... அது, திம்மராயனேதான், அந்த உடல்வாகு... சந்தேகமே இல்லை... நான் நினைத்தது சரியே!' தாளமிடும் உள்ளத்தோடு தவித்தான்; பரபரத்தான் மாறப்பன்.

திம்மராயனைப் பின் தொடர்ந்து செல்வ தென்ற முடிவோடு சத்திரத்தின் வாயிலில் தயாராக நிறுத்தப்பட்டிருந்த குதிரையை நோக்கி ஓடினான். அரவம் கேட்டுக் கனைத்து உடலைச் சிலிர்த்துக் கொண்டது குதிரை. சேணமிடப்பட்டுக் கிளம்புவதற்கு ஆயத்தமாக இருந்த குதிரையைத் தட்டிக் கொடுத்து, அதன் மீது ஏறி அமர்ந்தான்.

'திம்மராயனின் இந்த மர்மத்தை அறிந்தே யாக வேண்டும்!' என்று உறுதியோடு குதிரை யின் விலாவில் உதைத்து கிளப்பினான்.

நிலவொளியிலே நீண்டு நெளிந்து சென்ற பாட்டையிலே முன்னே செல்லும் குதிரை வீரனைக் குறி வைத்தபடியே இடைவெளி விட்டு, அந்த உருவம் தன் பார்வையிலிருந்து தப்பி விடாதபடி ஒரே சீராகத் தன் குதிரையை நடத்தியவாறே பின் தொடர்ந்து கொண்டிருந் தான் மாறப்பன்.

''அதோ போகிறான் திம்மராயன்... திம்மா நீயா இப்படி?'' திடீரென்று முன்னால் போய்க் கொண்டிருந்த குதிரை, நேர்பாதையிலிருந்து நழுவி, குறுக்குப் பாதையில், மரங்களும், புதர்களும் சூழ்ந்த பகுதியில் இறங்கலாயிற்று. ஒளிந்து கொண்டிருந்த இருளும், ஓடி வந்து சூழ்ந்து கொண்டது. வெறுத்துப் போனான் மாறப்பன்.

'சே! என்ன முட்டாள் நான்... இன்னும் நெருக்கமாகப் பின் தொடர்ந்திருக்க வேண்டும். ஒருவேளை, நான் பின் தொடருவதை உணர்ந்துதான் நிலவை மேகம் மறைக்கும் வேளையை எதிர்பார்த்துக் கானகத் தினுள் புகுந்து தலைமறைவாகி விட்டானோ? அப்படி இருக்காது' என்று சமாதானம் கூறிக் கொண்டாலும், மாறப்பனின் நெஞ்சம் அலைபாய்ந்தது.

குதிரையைத் தட்டி விட்டு, பரபரப்போடு வேகம் எடுத்து, அந்த மங்கிய நிலவொளியில் கானகத்தின் ஒற்றையடிப் பாதையில் புகுந்து அங்குமிங்கும் தேடினான்.

அமைதியான அந்த இரவு வேளையில், அவனுடைய குதிரையின் குளம்படி ஓசை கேட்டதே தவிர, வேறு ஒலி எதுவும் இன்றி நிசப்தமாக இருந்தது. இருளில் தேடி அலுத்துப் போன மாறப்பன், நம்பிக்கை இழந்து, வெறுத்துப் போய் திரும்ப நினைத்த வேளையில்-

குதிரையின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்து அதை நிறுத்தி உற்றுக் கேட்டான்.

'அதென்ன ஓசை! காளை மாடுகளின் கழுத்துச் சலங்கை யொலி போலிருக்கிறதே! அப்படி யானால், போக்கு வண்டிகள். இவ்வண்டிகளை வளைத்துக் கொள்ளையடிக்க வருவான் ருத்ரய்யா. திம்மராயன்தான் ருத்ரய்யாவானால், இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது...' ஓசை வந்த திசை நோக்கி, ஓசையின்றித் தன் குதிரையைச் செலுத்தினான் மாறப்பன்.

அவன் ஊகம் சரிதான். சந்தையிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தன வில் வண்டிகள். நிலவை மேகங் கள் மூடின. வண்டிக்காரர்களிடையேயான பரபரப்பு ருத்ரய்யா பற்றிய பயத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். காளைகளை முடுக்கி விரட்டிக் கொண்டிருந்தனர். மாறப்பனால் வண்டி யோசையைக் கேட்க முடிந்ததே தவிர, வண்டி களைக் காண முடியவில்லை. கானகத்தின் இருள் அப்படி.

அவன் எதிர்பார்த்தபடியே வண்டிகள் வழிமறிக்கப்பட்டன.

''நிறுத்து வண்டியை...'' என்ற குரலைத் துல்லியமாகக் கேட்டான் மாறப்பன்.

''மடியிலுள்ள பணத்தை எடுங்கள்,'' தொடர்ந்தது அந்தக் குரல்.

அதே குரல்கள் தான்... அன்று தன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்ட அதே ருத்ரய்யாவின் குரல்தான்.

'ருத்ரய்யாதான் திம்மராயனா...?' மங்கிய நிலவொளியில் தன் கண்களை இடுக்கி, குரல் வந்த திசையை நிதானப்படுத்தி உற்றுப் பார்த்த போது, வனப்பகுதியிலிருந்து தபதபவென்று குதிரை வீரர்கள் வெளிப்பட்டனர். சேனாதிபதி சிங்கராயரின் வீரர்கள். ''கொள்ளைக்காரனை சுற்றி வளைத்து விட்டோம்.... தப்பி விடப் போகிறான். எச்சரிக்கையாக இருங்கள்,'' என்று வீரர்களுக்கு குரல் கொடுத்தார் சிங்கராயர்.

ஒரு கணம் செயலிழந்து ஸ்தம்பித்துப் போனான் மாறப்பன்.

''அப்படியானால் இந்தப் போக்கு வண்டி கள் போலியா? சேனாதிபதி சிங்கராயரின் ஏற்பாடா இது?'' மாறப்பனின் மனம் நண்பனுக் காகத் தவித்தது; என்ன செய்வது என்று புரியாமல் துடித்தது.

வழிப்பறிக் கொள்ளைக்காரன் ருத்ரய்யாவை வளைத்துப் பிடித்து விட்டோம் என்று நினைத்தார் சேனாதிபதி சிங்கராயர். ஆனால், அதே வேளையில் அந்த வழிப்பறிக் கொள்ளையன், அவரது முற்றுகையிலிருந்து நழுவி, மாறப்பன் இருந்த பக்கமாக இருளில் தன் குதிரையைத் தட்டி விட்டு விரைந்தான்.

நிகழ்ச்சிகளைக் கண்டு பிரமித்துப் போயிருந்த மாறப்பன், சட்டென்று தன் வியப்பை உதறிவிட்டுச் செயல்படலானான். தன்னைத் தாண்டி ஓடுவது ருத்ரய்யாவாக வேஷமிட்டு, ஊரைக் கொள்ளையடிப்பது, தன் நண்பன் திம்மராயன்தான் என்ற முடிவுக்கு வந்திருந்தான் மாறப்பன். ஆகவே, நண்பன் என்ற பாசத்தைப் பிடுங்கி எறிந்து விட்டு, நாட்டு மக்களின் நலனுக்காகச் செயல் படலானான்.

''நில்... ஓடாதே!'' என்று இருள் சூழ்ந்த மரங்களுக்கிடையே இருந்தபடி ஓங்கிக் குரல் கொடுத்தான் மாறப்பன். அதே சமயம், தன் குதிரையை ஓடும் கொள்ளையனை நோக்கி விரட்டினான்.

- தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us