தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/எனக்கும் தா!

எனக்கும் தா!

எனக்கும் தா!


PUBLISHED ON : ஜன 09, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 09, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு கிராமத்தில் வினோத் என்கிற விறகுவெட்டி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு குறைந்த வருவாயினும் அவனாலான உதவிகளை எப்போதும் பிறருக்குச் செய்யத் தவறுவது இல்லை. நம்மால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்ய வேண்டும் என அவன் மற்றவர்களுக்கும் அடிக்கடி புத்திமதி கூறுவான்.

ஒருநாள்-

விறகு வெட்டி முடித்ததும், விறகுகளை சுமந்து கொண்டு வீடு திரும்பினான். அப்போது வழியில் ஒரு புறா அம்பு பட்டு கீழே விழுந்து, துடித்துக் கொண்டிருந்தது. உடனே, விறகுக் கட்டை ஓரமாக வைத்துவிட்டு, புறாவைக் கையில் எடுத்து அம்பைப் பிடுங்கினான். அருகில் இருந்த மூலிகையைப் பறித்து, அம்பு பாய்ந்த இடத்தில் கட்டுப் போட்டான். பிறகு, விறகுக் கட்டையும், புறாவையும் தூக்கிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

வீட்டிற்கு வந்ததும், புறாவிற்கு உணவு கொடுத்து விட்டு உணவருந்தினான். புறாவை ஒரு மூலையில் வைத்தான்.

இரவானது. வினோத்திற்கு தூக்கம் வந்தது. வீட்டிற்குள் படுக்கப் போனான். அப்போது தான் கொண்டு வந்த புறா, அழகான தேவதையாக உருமாறியதைப் பார்த்துத் திகைத்தான். வினோத்தைப் பார்த்ததும் அவனுடன் பேச ஆரம்பித்தது தேவதை.

''நான் வானவெளியில் வசிக்கும் தேவதை. உலகத்தைச் சுற்றிப் பார்க்க ஆசைப் பட்டேன். வனாந்திரம் வழியாக வந்தேன். அங்கே ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அழகான காட்டில் நான் ஆடிப் பாடித் திரிந்தேன். அதனால், முனிவரின் தவம் கலைந்தது. அவர் என்னை, 'நீ ஒரு வருடம் பகலில் புறாவாகவும், இரவில் தேவதையாகவும் இரு' என சாபமிட்டார். பகலில் புறாவான நான், ஒரு மரக் கிளையில் அமர்ந்து இருந்தேன். அப்போது எங்கிருந்தோ வந்த வேடன் ஒருவன் என் மீது அம்பு எய்து விட்டான். நீ காப்பாற்றியதால், நான் உயிர் பிழைத்தேன். நீ என்னை காப்பாற்றியதால் எது வேண்டுமானாலும் கேள் தருகிறேன்,'' என்றது தேவதை.

''எனக்கு எதுவுமே வேண்டாம்... இப்போது நான் இருக்கும் மனநிறைவுடன் எப்போதும் இருந்தால் போதும்!'' என்றான் வினோத்.

''நீ பேராசைப்படாமல் இருப்பதால் உன்னை நான் பாராட்டுகிறேன். இந்த பொன் முடிப்பை வாங்கிக் கொள். இதை வைத்து நீ பிழைத்துக் கொள்!'' என்றது தேவதை.

பொன் முடிப்பை வினோத் வாங்கினான். அந்தச் செல்வத்தை வைத்து வியாபாரம் செய்தான். வியாபாரம் நன்றாக நடந்தது. அதில் கிடைத்த லாபத்தை வைத்து ஏழை எளியவர்களுக்கு உதவினான். அதில் மன நிம்மதி அடைந்தான்.

செல்வம் சேர்ந்ததும் ஏழை எளியவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளை வினோத் செய்வதைப் பார்த்து, தேவதை பூரிப்பு அடைந்தது.

'வினோத் உன்னால் திடீர் பணக்காரனாக எப்படி முடிந்தது? என வினோத்தின் நண்பன் திலீப் அவனிடம் கேட்டான். அவன் நடந்ததைச் சொன்னான். வினோத்தைப் போல் தானும் பணக்காரனாக வேண்டும் என திலீப் நினைத்தான்.

இரவு வினோத் வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து, அவன் வீட்டிற்குள் நுழைந்து தேவதையைப் பார்த்தான்.

''தேவதையே! எனக்கும் பொன் முடிப்புக் கொடுத்து வினோத்தைப் போல் பணக்காரனாக்க வேண்டும். அவனை விட நான் பணக்காரனாக வேண்டும். நீ என்ன கேட்டாலும் நான் தரத் தயாராய் இருக்கிறேன்!'' என்றான் திலீப்

''உன்னைப் போல் சுயநலவாதிகளுக்கு நான் உதவுவதே இல்லை. நீ என்ன கேட்டாலும் தருவேன் என்கிறாயே... என்னை லஞ்சம் வாங்கத் தூண்டுகிறாயா? உன்னிடம் இருக்கும் செல்வமும் இல்லாமல் போகட்டும்! வறுமையில் நீ வாட வேண்டும். அப்போது தான் மற்றவர்களின் வேதனையை நீ உணர்வாய்!'' என்று சாபம் இட்டது.

வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு இறுதியில் வறுமையில் வாடினான் திலீப். கஷ்டம் என்றால் என்ன என்பதை உணர்ந்தான். வினோத்தைச் சந்தித்து நடந்ததைக் கூறினான். அவனைத் தேற்றி தேவதையிடம் அழைத்து வந்தான்.

''தேவதையே! திலீப் என் நண்பன். அவன் பொறாமையால் தவறு செய்து விட்டான். அவனை மன்னித்து, பழைய நிலைக்கு உயர்த்த வேண்டும். பாவம்! இவன் படும் கஷ்டத்தைப் பார்க்க வேதனையாக இருக்கிறது!'' என்றான்.

''பார்த்தாயா உன் நண்பனை? நீ அவனை விடப் பணக்காரனாக வேண்டும் என என்னிடம் கேட்டாய். அவனோ, உனக்காக எப்படி இரக்கப்படுகிறான். இரக்க குணம் உள்ளவர்கள் மீதுதான் நான் இரக்கப்படுவேன். வினோத் சிபாரிசு செய்வதால் பழைய நிலைக்கு நீ திரும்பி வர உனக்கு அருள்புரிகிறேன். ஆனால், உன் வஞ்சக எண்ணத்தை மாற்றிக் கொள். வினோத்தைப் போல் எப்போதும் தன்னால் முடிந்த உதவியைப் பிறருக்கு நீ செய். அப்போதுதான் உன் மனம் அமைதி அடையும் என்றது!'' தேவதை.

திலீபனும் தேவதை கூறியபடி நடந்து கொண்டான். பிறகு அவனும் நல்ல நிலைமைக்கு வந்தான்.

நண்பன் திலீப் நல்ல நிலைமைக்கு வந்ததை அறிந்து வினோத் திருப்தி அடைந்தான். தேவதைக்கு நன்றி கூறினான்.

தேவதையும் வினோத்தை வாழ்த்தி, தன் சாபக்கெடு முடிந்ததும், அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us