தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மல்லன் மாறப்பன்

மல்லன் மாறப்பன்

மல்லன் மாறப்பன்


PUBLISHED ON : ஜன 02, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 02, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசு அதிகாரியின் நண்பர் என்று அறிந்த சத்திரத்துக்காரர், மாறப்பனிடம் விசேஷ அக்கறை காட்டினார். பயணக் களைப்பும், நண்பனைக் கண்ட களிப்பும், சுகமான தூக்கமும் இமைகளை அழுத்த, அயர்ந்து தூங்கினான் மாறப்பன்.

அப்போது முக்காடிட்டுத் தன்னை மறைத்தபடி ஓர் உருவம் சத்திரத்தினுள் நுழைந்தது. மாறப்பன் உறங்கும் அறையின் ஒளியில், அந்த உருவத்தின் கையில் உள்ள தங்கச் சங்கிலி பளபளத்தது. கிருஷ்ண தேவராயர், மாறப்பனின் கழுத்தில் அணிவித்த பதக்கத் தோடு கூடிய தங்கச் சங்கிலியே அது. அந்த உருவம் சங்கிலியை, மாறப்பனின் கட்டில் அருகே இருந்த ஓர் இருக்கையில் வைத்துவிட்டு, வந்த சுவடு தெரியாமல் இருட்டில் மறைந்தது. கொள்ளையன் கொண்டு போன சங்கிலியல்லவா அது? அதைத் திரும்பக் கொண்டு வந்து வைத்த உருவம் யார், கொள்ளைக்காரன் ருத்ரய்யாவே தானா?

கıலையில் கண் விழித்த மாறப்பனின் பார்வையில் முதலில் பட்டது அந்தத் தங்கச் சங்கிலிதான். திகைத்துப் போனான். பரபரப் போடு அந்தச் சங்கிலியைக் கையிலெடுத்து உருட்டிப் புரட்டிச் சோதித்தான். ''அதே சங்கிலிதான். சந்தேகமில்லை; போலியுமில்லை. இது எப்படித் திரும்பி வந்தது. ருத்ரய்யாவிடமிருந்து யார் மீட்டது அல்லது ருத்ரய்யாவே இதைக் கொண்டு வந்து வைத்தானா...?''

குழப்பமுடன் திம்மராயனைக் காணச் சென்றான் மாறப்பன். நண்பனைக் கண்ட திம்மராயன், ''என்ன மாறப்பா... ஏன் ஏதோ போலிருக்கிறாய்? இரவு அமைதியாகத் தூங்கினாயா?'' என்று விசாரித்தான்.

''திம்மா, பரபரக்கும்படியான நிகழ்ச்சி ஒன்று நடந்திருக்கிறது. மகாராயர், எனக்குப் பரிசளித்த தங்கச் சங்கிலியை வழியில் கொள்ளையனிடம் பறிகொடுத்த விவரத்தை நேற்றுக் கூறினேனல்லவா? இன்று காலை நான் கண் விழித்த போது அது என் படுக்கை அருகில் வைக்கப்பட்டிருந்தது. இது அதிசய மில்லையா, வியப்படையாமல் எப்படி இருக்க முடியும்?'' என்றான் மாறப்பன்.

ஆனால், திம்மராயனிடம் எவ்விதப் பரபரப்பும் ஏற்படவில்லை.

''பேஷ், பேஷ்! இழந்த பொருள் கிடைத்து விட்டதில்லையா! இதற்குப் போய் பரபரப்படைவானேன். நீ ராயரின் அன்புக்குப் பாத்திரமானவனாதலால், தனக்குத் தொல்லை ஏற்படும் என்று பயந்து சங்கிலியை திருப்பி எடுத்து வந்திருக்கலாம். மேலும், அதில் அரச முத்திரை பொறித்த பதக்கம் உள்ளதே. அதை அவன் விற்கவோ, வேறு ஏதும் செய்யவோ முடியாது. சங்கிலியைத் திருப்பியதற்குக் காரணம், அதுவாகத் தானிருக்கும்,'' என்றான் திம்மராயன்.

''அரசு அதிகாரியான நீ என்னுடன் உறவாடியதைக் கண்டும் அவன் மிரண்டு போயிருக்கலாமல்லவா?'' என்றான் மாறப்பன் சிரிப்புடன்.

''ருத்ரய்யா அப்படிப்பட்ட பயந்தாங் குளியாக இருக்க முடியாது. எப்படியோ போகட்டும்... உன் உடைமை உனக்கு திரும்ப கிடைத்து விட்டது. இதுவரை, தான் கொள்ளையிட்ட பொருளைத் திருப்பித் தந்ததில்லை ருத்ரய்யா. நீ அதிர்ஷ்டக்காரனே தான்!'' என்று பாராட்டினான் திம்மராயன்.

அப்போது வீதியில் கம்பீரமான தோற்றத்தில் ஒருவர் போய்க் கொண்டிருப்பதை பார்த்தான் மாறப்பன். உடனே அவன் முகம் சிவந்தது.

''அதோ போகிறாரே அவர் யார்?'' என்று கேட்டான் திம்மனிடம்.

''சேனாதிபதி சிங்கராயர்... ஏன் கேட்கிறாய்?''

''இந்த அகம்பாவக்காரரை நான் வழியில் சந்தித்தேன். அவரோடு மோத வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது!'' என்று கூறிய மாறப்பன், வரும் வழியில் சத்திரத்தில் சிங்கராயர், தன் குதிரையை லாயத்தில் கொண்டு போய்ச் சேர்த்து கவனிக்கும்படி அதிகாரம் செய்ததையும், தான் அந்த அகம் பாவக்காரருக்கு புத்தி கற்பித்ததையும் விளக்கியவன், ''இங்கு என்ன செய்கிறார் அந்த அகம்பாவி?'' என்று கேட்டான் திம்மனிடம்.

''மாறப்பா, நீ வழியில் பல சாகசங்கள் புரிந்து வந்திருக்கிறாய் போலிருக்கே!'' என்று பலமாகச் சிரித்து, மாறப்பனின் தோளில் தட்டினான் திம்மன்.

''உன் சங்கிலியைப் பறித்துக் கொண்டானே ருத்ரய்யா கொள்ளையன், அவனைப் பிடிப்பதற்காக மன்னர் கிருஷ்ண தேவராயரால் அனுப்பப்பட்டிருக்கிறார் சேனாதிபதி சிங்கராயர். கொஞ்சம் முரடர்; ஆனால், சிறந்த வீரர்!'' என்றான் திம்மன்.

''ஓ! அப்படியானால், அவர் அகம்பாவியாக இருப்பதில் தவறில்லை. நான் அவருக்கு உதவவேண்டும். அந்தக் கொள்ளையனை நான் சந்தித்த சூழ்நிலையை அவரிடம் கூறி, அந்தக் கானகத்தில்தான் அவன் இருக்கிறான் என்பதை அறிவிக்க வேண்டும்,'' என்று கூறியபடி எழுந்தான் மாறப்பன்.

''முட்டாளே! உட்காரு... வீண்வம்பை விலைக்கு வாங்கிக் கொள்ளுவது போலிருக்கிறது உன் செய்கை,'' என்று கூறி மாறப்பனின் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தான் திம்மராயன்.

''ஏன்... கொள்ளைக் காரனைப் பிடிப்பதற்கு உதவுவது, எப்படி வீண் வம்பை விலைக்கு வாங்குவதாகும்?''

''உன் சங்கிலியைக் கொள்ளைக்காரன் ஏன் திருப்பிக் கொடுத்தான் என்று அவர் கேட்டால், நீ என்ன பதில் கூறுவாய்?''

''அது... வந்து...'' குழம்பினான் மாறப்பன்.

''உனக்கு வேண்டப்பட்டவன் அந்தக் கொள்ளையன் என்ற முடிவுக்கு வருவார் சேனாதிபதி சிங்கராயர். அதுவும் தவிர, நீ அவரைத் தாக்கி அவமானமடையச் செய்திருக்கிறாய். அதை அவர் மறந்திருக்க மாட்டார்; மன்னிக்கவும் மாட்டார். ஆகவே, சற்று அமைதியாக இரு,'' என்றான் திம்மராயன்.

நண்பன் திம்மராயனின் பேச்சில் நியாயம் இருப்பதை உணர்ந்த மாறப்பன், தன் அவசரப் புத்திக்காக வெட்கிப் போனான்.

''நான் வரி வசூலுக்குக் கிளம்புகிறேன். நீ ஊர் சுற்றிப் பார்; சாகசங்களிலோ, சண்டையிலோ ஈடுபடாதே!

''சத்திரத்துக்காரரிடம் உன்னை நன்கு கவனித்துக் கொள்ளும்படி கூறி இருக்கிறேன். ஊர் சுற்று, அரசாங்க விருந்தாளியாக அறுசுவை உணவை உண்டு, நிம்மதியாக ஓய்வெடுத்து கொள். இரண்டொரு நாளில் நாம் தலைநகருக்குக் கிளம்பலாம்,'' என்று நண்பனுக்கு விடை கொடுத்தான் திம்மராயன்.

அன்று பகல் முழுவதும் மாறப்பனின் உள்ளத்தில் ஒரே ஒரு கேள்விதான் அடிக்கடி தோன்றித் துளைத்துக் கொண்டிருந்தது.

'சங்கிலியை யார், எதற்காக திருப்பிக் கொண்டு வந்து வைத்தனர்? என்பதே அந்தக் கேள்வி. ருத்ரய்யா அப்படிச் செய்திருக்க மாட்டான் என்பதை சத்திரக்காரர் அவனைப் பற்றிக் கதை கதையாகக் கூறிய செய்திகளும், அவனைப் பிடிக்க முடியாமல் அரசாங்கம் திணறுகிறது என்ற தகவல்களும் உறுதிப்படுத்தின. அப்படியானால்...?'

குழம்பியபடியே பகல் சென்றது.

அதே நினைவில் இரவும் தூக்கம் வரவில்லை மாறப்பனுக்கு. அப்போது, இரவு இரண்டாம் சாமத்தில் வீதியில் குதிரைகள் குளம்பொலி ஓசை கேட்டுப் படுக்கையிலிருந்து எழுந்து போய் சாளரத்தின் வழியே பார்த்தான் மாறப்பன். நிலவொளியில் வீரர்கள் தொடர, சேனாதிபதி சிங்கராயர் போய்க் கொண்டிருந்தார்.

'ருத்ரய்யாவை வேட்டையாடக் கிளம்பி போகிறார் போலிருக்கிறது' என்று எண்ணிக் கொண்டான்.

குதிரைகளின் குளம்பொலி ஓசை மெல்ல மெல்லத் தேய்ந்து ஒடுங்கியும், மாறப்பன் ஜன்னல் அருகிலிருந்து அகலவில்லை. நிலவு ஆட்சி புரியும் நீல வானத்தையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். தூக்கம் வந்தால் தானே படுக்கையை நாடிப் போக. அங்கே...

கட்டுமஸ்தான ஒரு உருவம், போர்வையால் தலை முதல் கால்வரை போர்த்திக் கொண்டு, நிழல்களில் பதுங்கிப் பதுங்கி, சிங்கராயர் போன திசையில் பின் தொடர்ந்து போவதைக் கண்டான் மாறப்பன். பார்வையை இடுக்கிக் கூராக்கிக் கொண்டு உன்னிப்பாக கவனித்தான். அவன் இதயம் படபடத்தது.

'அது... அது... திம்மராயனைப் போலல்லவா இருக்கிறது!' என்று அதிர்ந்தான் மாறப்பன்.

- தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us