தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தவம் செய்கிறது!

தவம் செய்கிறது!

தவம் செய்கிறது!


PUBLISHED ON : ஜன 02, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 02, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிளிக் கூண்டுக்கு அருகில் இருவர் அமர்ந்து அழுது கொண்டிருப்பதைக் கண்டார்.

'இவர்கள் எதற்காக அழுகின்றனர்?' என்பது அமைச்சர் பீர்பலுக்குப் புரியவில்லை. அவர்களை நெருங்கிச் சென்றார்.

''ஏனப்பா அழுகிறீர்கள்? உங்களுக்கு என்ன ஆயிற்று?'' என்று கேட்டார் பீர்பல்.

''எங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை அமைச்சரே! இந்தக் கிளிதான் இறந்து விட்டது,'' என்றனர் வேலையாட்கள் இருவரும்.

''மனிதர்கள் இறந்து விட்டாலே, அழாத இந்தக் காலத்தில் இந்தக் கிளி இறந்து விட்டதற்காக அழுகிறீர்களே! நீங்கள் அழுது, அழுது கிளியை உயிர் பிழைக்கச் செய்து விடுவீர்களா?'' என்று கேட்டார் பீர்பல்.

''கிளியை உயிர் பிழைக்க வைக்க முடியாது அமைச்சரே! ஆனால், எங்கள் உயிர் போய்விடுமே! அதை எண்ணித்தான் அழுகிறோம். நீங்கள் தான் எங்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும்,'' என்று கெஞ்சினர் வேலை யாட்கள்.

''என்ன சொல்கிறீர்கள்? உங்கள் உயிருக்கு ஆபத்தா? எனக்கு ஒன்றும் புரியவில்லையே! கொஞ்சம் புரியும்படி கூறுங்களேன்,'' என்றார்.

''அமைச்சரே! இந்தக் கிளியைப் பராமரிக்கும் பொறுப்பை மன்னர் எங்களிடம் ஒப்படைத்தார். நாங்களும் நல்ல முறையில் பராமரித்து வந்தோம். மன்னர் இந்தப் பணிக்கு எங்களை நியமிக்கும்போது கிளி இறந்து விடுமேயானால், அந்தச் செய்தியை முதலில் சொல்பவனைக் கொன்றுவிட உத்தர விடுவேன்,'' என்று கூறினார். நிபந்தனைக்கு உட்பட்டே கிளியைப் பராமரித்து வந்தோம்.

''இன்று காலையில் கிளி இறந்து விட்டது. இந்தச் செய்தியை எங்களில் யார் போய் மன்னரிடம் சொன்னாலும் சாவு நிச்சயம். எனவே, எங்களில் ஒருவர் சாவதை விட இருவருமே தற்கொலை செய்து கொள்ளலாமே என்று எண்ணி அழுது புலம்பிக் கொண்டிருக்கிறோம்,'' என்றனர் வேலையாட்கள்.

பீர்பலுக்கு விஷயம் நன்கு விளங்கி விட்டது. உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் வேலையாட்களின் வேண்டுகோளின் படி, அவர்களைக் காப்பாற்றுவதாக உத்தரவாதம் அளித்தார் பீர்பல்.

வேலையாட்களின் மனதில் நம்பிக்கை துளிர்விட்டது. அழுது வடிந்த முகத்தில் ஆனந்தம் தென்பட்டது.

''அது சரி...! கிளி இறந்த செய்தியினை எவன் முதலில் சொல்கிறானோ, அவனுக்குத் தானே மரண தண்டனை என்று மாமன்னர் சொல்லி இருக்கிறார்?'' என்று வேலையாட்களைப் பார்த்து மீண்டும் கேட்டார் பீர்பல்.

''ஆமாம்!'' என்று தலையசைத்தனர் இருவரும்.

''கவலையை விடுங்கள். கிளியின் சாவுச் செய்தியை நானே மன்னரிடம் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் வீட்டுக்குப் போய் அமைதியாகத் தூங்குங்கள்,'' என்று வேலையாட்களை அனுப்பி வைத்தார் அமைச்சர் பீர்பல்.

தங்கள் தலை தப்பிவிட்டது என்று நிம்மதியடைந்த வேலையாட்கள். நமக்காக உதவி செய்யப் போய், ஒரு நல்ல அமைச்சர் மரணமடையப் போகிறாரே என்று நினைத்து, மனவேதனையடைந்தனர்.

கிளியின் இறப்பு பற்றி மன்னரிடம் என்ன சொல்லலாம், எப்படிச் சொல்லலாம் என்பது பற்றி பல வழிகளிலும் யோசனை செய்து கொண்டிருந்தார் அமைச்சர் பீர்பல். இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தவராய் மன்னரைக் காணப் புறப்பட்டார்.

''மன்னா! நான் ஒரு துக்கமான செய்தியைத் தாங்கி வந்திருக்கிறேன். நீங்கள் ஆசையோடு வளர்த்து வருகிறீர்களே கிளி ஒன்று, அது சாப்பிட மாட்டேன் என்கிறது. தண்ணீரைக் குடிப்பது, பாடுவது, ஆடுவதும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் கண்களை மூடிக் கொண்டு அசைவற்றுக் கிடக்கிறது. ஒருவேளை பேச்சு, ஆடல், பாடல் ஆகியவற்றை நிறுத்தி விட்டு, தவம் செய்யும் யோகியாகி விட்டதோ என்று நினைக்கிறேன்,'' என்று சொன்னார் அமைச்சர் பீர்பல்.

''ஐயோ! கிளிக்கு உடல்நிலை சரியில்லையோ? அது நம்மை இனி மகிழ்விக்காதோ? கிளியின் உடல் நிலையைச் சீராக்குவதற்கு ஏதாவது செய்தாக வேண்டுமே...'' என்று கூறிக் கொண்டே, அமைச்சர் பீர்பலை அழைத்துக் கொண்டு கிளியைப் பார்க்கச் சென்றார் மன்னர்.

கூண்டுக்குள் இருந்த கிளியைப் பார்த்ததும், கிளியின் நிலைமையை உணர்ந்து கொண்டார் மன்னர். அவரது முகத்தில் கோபம் கொப்பளிக்கத் தொடங்கியது.

''என்ன பீர்பல்? ஒரு அபத்தமான விளக்கத்தையல்லவா என்னிடம் சொன்னாய்? செத்துக்கிடக்கும் கிளியை, தவம் செய்யும் யோகியோடு ஒப்பிட்டாயே... நீ அறிவில் மழுங்கிப் போயிருக்கிறாய் என்று கருதுகிறேன்,'' என்று அமைச்சர் பீர்பலைக் கடுமையாகச் சாடினார் மன்னர்.

''மன்னிக்க வேண்டும் மன்னா! கிளி செத்துவிட்டது என்ற வார்த்தையை நீங்கள் தான் உபயோகிக்க முடியும்! மற்றவர்களால் முடியாதே!'' என்று கூறினார் பீர்பல்.

''ஏன்?'' புருவத்தை நெறித்தபடியே, கேட்டார் மன்னர்.

''கிளி இறந்து விட்டது என்ற செய்தியை உங்களிடம் எவன் முதலில் சொல்கிறானோ, அவன் தலை கொய்யப்படும் என்று கட்டளை பிறப்பித்துள்ளீர்களே, அதை மறந்து விட்டீர்களா?'' என்றார் பீர்பல்.

''பீர்பல், உன் வார்த்தை ஜாலமே தனி தான். அதனால், என் வேலையாட்களைக் காப்பாற்றினாய்; அதே சமயம், கிளி செத்து விட்ட செய்தியை என் வாயிலிருந்தே சொல்ல வைத்தாய்... உன்னுடைய மதிநுட்பத்தை நான் பாராட்டுகிறேன்,'' என்று கூறி சிரித்தார் மன்னர்.

-முற்றும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us