தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கேபிள் கதை கேளுங்கள் குட்டீஸ்!

கேபிள் கதை கேளுங்கள் குட்டீஸ்!

கேபிள் கதை கேளுங்கள் குட்டீஸ்!


PUBLISHED ON : ஜன 02, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 02, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்று, நாம் டெலிபோனை எடுத்துக் காதில் வைத்து பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ளவருடன், சர்வ சாதாரணமாகப் பேசுகிறோம்; தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுகிறோம். ஆனால், 150 ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்தியமா?

டெலிபோன் வருவதற்கு முன்னால், டெலிகிராப் எனப்படும் தந்தியே தகவல் தொடர்பு சாதனமாக இருந்தது. இதுவும் கூட, ஆரம்பத்தில் தொலை தூரத்துக்குத் தகவல் அனுப்பப் பயன்படவில்லை.

பல தோல்விகள், ஏமாற்றங்கள், லட்சக்கணக்கான பவுன்களும், சாதனங்களும் நஷ்டம் ஏற்பட்ட பிறகு, பிரிட்டனிலுள்ளவர்களுடன், அமெரிக்காவிலுள்ளவர்கள் தகவல் தொடர்பு கொள்ளுவதற்கான வழி காணப்பட்டது. அதுவரை பிரிட்டனிலிருந்து, அமெரிக்காவுக்குச் செய்தி அனுப்புவதானால், ஆட்கள் மூலம் அந்தச் செய்தி போய்ச் சேர பதினைந்து நாட்கள் ஆகும்.

ஆகவே, பிரிட்டனையும், அமெரிக்காவையும் கேபிள் மூலம் இணைப்பதென்ற யோசனை உருவானது. கேபிளை எப்படி அமைப்பது? அட்லாண்டிக் கடலின் படுகையில் கேபிள்களைப் போட்டு, கிட்டத்தட்ட 2000 மைல்களுக்கு அட்லாண்டிக் கடலின் அடியில் கேபிள் போடுவதென்று தீர்மானமாயிற்று. இது அசுர காரியம்!

இத்திட்டம் 1856ல் தொடங்கப்பட்டு, மூன்று முறை தோல்வியைத் தழுவி கடைசியாக 1858ல் தான் வெற்றி பெற்றது. அதுவும் எப்படி? 2500, மைல்கள் நீளமுள்ள கேபிளை, இருபாகமாக்கி, (இரு 1250 மைல்களாக) ஒரு பகுதியை பிரிட்டனின் போர்க்கப்பலான எச்.எம்.எஸ் அகமெம்னான் என்ற கப்பலிலும், மற்றொரு பகுதியை அமெரிக்கக் கப்பலான பிரிகேட் நயாகராவிலும் ஏற்றப்பட்டன. அட்லாண்டிக் கடலின் நடுமையத்துக்கு இரு கப்பல்களும் பயணப்பட்டன. பிரிட்டன்- அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான அட்லாண்டிக் கடலின் நடுமையத்துக்கு இரு கப்பல்களும் வந்ததும், இவற்றில் உள்ள கேபிள்கள் அங்கு இணைக்கப்பட்டுக் கடலில் போடப்பட்டது.

பிரிட்டிஷ் கப்பலான அகமெம்னான், அயர்லாந்துக் கடற்கரையை நோக்கியும், அமெரிக்கக் கப்பலான நயாகரா நியூபவுண்ட்லாண்ட் நோக்கியும் கடலில் கேபிள்களைப் போட்டுக் கொண்டே பயணப் பட்டன. ஆகஸ்ட் 5ம் தேதி (1858ம் ஆம் ஆண்டு) நயாகரா கப்பல் அமெரிக்க மண்ணான நியூபவுண்ட்லாண்டிலுள்ள டிரினிடி வளைகுடாவிலும், அதே நாளில் பிரிட்டிஷ் கப்பலான அகமெம்னான் அயர்லாந்தின் கெர்ரி மாகாணத்திலுள்ள வாலண்டியா தீவிலும் தங்கள் தங்கள் கேபிள்களின் மறுமுனையைக் கொண்டு வந்து சேர்த்தன.

இரு நாடுகளையும், இணைக்கும் கேபிள் அட்லாண்டிக் கடலில் போட்டாயிற்று. இணைப்புக் கொடுத்து, இரு நாட்டு வி.ஐ.பி., க்களும் வாழ்த்துப் பரிமாற்றம் செய்து கொள்ளுவதற்கு ஏற்பாடாயிற்று. பிரிட்டிஷ் அரசி விக்டோரியா மகாராணியும், அமெரிக்க ஜனாதிபதி புச்சானனும் பதற்றத்தோடு வாழ்த்துப் பரிவர்த்தனை செய்து கொள்ளக் காத்திருந்தனர்.

துரதிர்ஷ்டவசமாக ஒரு இன்ஜினியர் மின் இணைப்பின் மீது கால்பதிக்க, கேபிள் எரிந்து போயிற்று. தொடர்பும் செயலிழந்து போயிற்று. பட்ட பாடெல்லாம் வீணாயிற்று. பலனின்றி எரிந்துபோன கேபிளைச் சீர்செய்து, புதிய தரமான கேபிளை மறுபடியும் போட, எட்டு வருடங்களாயின. 1866ல் தான் கேபிள் இணைப்பு சீரானது. அதன் பிறகு தந்தித் தொடர்பில் எவ்விதக் கோளாறும் ஏற்படவில்லை. இன்று பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்குமிடையே அட்லாண்டிக் கடலின் அடியில் 22க்கும் மேலான கேபிள்கள் போடப்பட்டுள்ளன. சாட்டிலைட் தொடர்பு போன்ற அதி நவீன தொலை தூரச்செய்தித் தொடர்புகளும் வந்துவிட்டன. ஆனாலும், அட்லாண்டிக்கில் முதல் கேபிள் போடப்பட்ட அந்த நாள் அனுபவத்தை யாராலும் மறக்க முடியாது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us