PUBLISHED ON : ஜன 02, 2015

விஜய நகரத்தை கிருஷ்ண தேவராயர் ஆண்டு வந்த காலத்தில், தொடர்ந்தாற்போல ஒரு பக்காத் திருடன் கலக்கி வந்தான்.
அங்கு கொள்ளை, இங்கு திருட்டு, என்று நகரம் முழுவதும் அல்லோலகல்லோலப் பட்டு வந்தது. பொதுமக்கள், பெருமளவில் பீதியடைந்து புகார் செய்த வண்ணம் இருந்தனர். அந்தத் திருடன், பலவிதத் தந்திரங்களைக் கையாண்டு திருடிச்சென்று கொண்டிருந்தான்.
காவலர்கள், எவ்வளவு முயன்றும் அந்தப் பொல்லாத திருடனைப் பிடிக்க முடியாமல் திண்டாடினர். காவல் துறைக்குப், பெரிய தலைவலியை உண்டு பண்ணிய திருடனைப் பிடிக்க முடியவில்லை என்பது பெரிய மானக்கேடாக இருந்தது.
வேறு வழியின்றி மன்னர் கிருஷ்ண தேவராயர், அப்பாஜியிடம் இதுபற்றித் தீவிரமாக ஆலோசனை செய்தார்.
''சரி, அந்தப் பொல்லாத திருடனைப் பிடித்து விடலாம்; கவலைப்பட வேண்டாம்!'' என்று நம்பிக்கையுடன் கூறினார்.
இவ்விதம் அப்பாஜி மிகவும் நம்பிக்கையுடன் கூறவும், கிருஷ்ண தேவராயர் கொஞ்சம் மன அமைதி பெற்றார்.
அப்பாஜி, அரண்மனை கஜானாவிற்குச் சென்று நிறைய வெள்ளிக் காசுகளை வாங்கி வைத்துக் கொண்டார்.
தன்னை ஒரு முரட்டுப் போக்கிரிபோல ஒப்பனை செய்து கொண்டார். இரண்டு நாட்களாகச் சத்திரங்கள், மடங்கள் என்று சுற்றிக் கொண்டிருந்தார்.
மூன்றாம் நாள் இரவு வேளையில், அப்பாஜி ஒரு மடத்தில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொண்டு, தன்னிடமுள்ள வெள்ளிக் காசுகளை எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு முரட்டு ஆள், முகத்தில் வெட்டுபட்டவன் அங்கு வந்து அப்பாஜியையே உற்றுப்பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தான்.
ஒருவேளை, இவன் தான் அந்தப் பொல்லாத திருடனாக இருப்பானோ என்று எண்ணிய அப்பாஜி, அவனைப் பார்த்தும் பார்க்காதவர் போன்று வெள்ளிக் காசுகளை எண்ணுவதில் முனைப்பாக இருந்தார். அவன் பார்க்க வேண்டுமென்று மீண்டும் எண்ணினார்.
பின்னர் அவன், அப்பாஜியை நெருங்கி வந்து நின்றான்.
அப்பாஜி அவனைப் பார்த்து, ''இந்த ஊரில் திருடர்களின் பயம் நிறைய உண்டு போலும்!'' என்று கூறவும், ''ஆமாம், ஆமாம்!'' என்று தலையை ஆட்டிய வண்ணம் சிறிது தள்ளி அமர்ந்தான்.
அவனிடம் அப்பாஜி மெதுவாக பேச்சுக் கொடுத்தார். அவனுடைய பேச்சின் தோரணை, அவனுடைய தோற்றம் எல்லாமே அப்பாஜியைச் சந்தேகம் கொள்ள வைத்தன. சிறிது நேரம் பொறுத்து மீண்டும் அவனிடம் பேச ஆரம்பித்தார். பேசிக் கொண்டிருக்கும் போதே வெள்ளிக் காசுகளை எண்ணுவதில் முனைப்பாக இருந்தார்.
''நீங்கள் வெளியூர்க்காரரா? இங்கு எங்கே இருக்கிறீர்கள்?'' என்று அந்த முரடன் கேட்டான்.
''எனக்கு உள்ளூர் ஏது, வெளியூர் ஏது? உள்ளே இருந்தால் உள்ளூர், வெளியே இருந்தால் வெளியூர்,'' என்று கூறி அவனுக்குத் தாமும் அவனைப் போல ஒரு திருடன்தான் என்பதைப் புரிய வைக்க வேண்டும் என்று எண்ணிப் பேசினார்.
உடனே அவன், ''பலே, பலே, நீயும் நம்ம ஆளுதானா? நீ வெள்ளிக் காசுகளை எண்ணுகிறபோதே சந்தேகப்பட்டேன்,'' என்றான்.
பின்னர் அவன் சுற்றும், முற்றும் பார்த்து விட்டுப் பேச ஆரம்பித்தான்.
''உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் என்னிடம் தயங்காமல் சொல்லுங்கள்,'' என்றான்.
''நீ என்னுடன் வருவதாக இருந்தால், இதைப் போல மூட்டை மூட்டையாகத் தங்கக் காசுகளைக் கொண்டு வந்து விடலாம்,'' என்று கூறி அவனுக்கு ஆசையை உண்டு பண்ணினார் அப்பாஜி.
''தங்கக் காசுகளா...? மூட்டை மூட்டையாகவா...?'' என்று கூறி வாய் பிளந்தான் அந்தத் திருடன்.
''ஆச்சரியப்படாதே, இந்த வெள்ளிக்காசுகளையும் அங்கிருந்துதான் கொண்டு வந்தேன்... பார்த்தாயா, அத்தனையும் புத்தம் புதியவை...!'' என்றார் அப்பாஜி.
''சரி, நான் என்ன செய்ய வேண்டும் என்று இப்போதே சொல்லுங்கள். நீங்கள் சொன்னால் இன்று இரவே, முடித்து விடுவேன்,'' என்றான் திருடன்.
''இரவு எதற்கு? இப்போதே போவோம்,'' என்றார் அப்பாஜி.
''எங்கே போக வேண்டும்? பகல் வேளையில் சென்றால் மாட்டிக் கொள்வோம்,'' என்றான் அந்தத் திருடன்.
''கவலைப்படாதே. இன்று மன்னர் பொது மக்களுக்காக அன்னதானம் செய்கிறார்; இதை நான் விசாரித்துவிட்டேன். ஆக, நாம் இரண்டு பேரும் அங்கே சென்று வயிறாரச் சாப்பிடுகிறோம். பின்னர் மக்களோடு மக்களாக நின்று சுற்றிப் பார்க்கிறோம். இரவு வேளையில் நம்முடைய கை வரிசையைக் காட்டி விடலாம்!'' என்றார் அப்பாஜி.
'இவன் நம்மை விடவும் கில்லாடியாக இருப்பான் போலத் தெரிகிறதே' என்று எண்ணியவனாக, ''நீங்கள் உண்மையில் பெரிய ஆள்தான் போங்கள்! இதுவரை, நான் தான் பெரிய திருடன் என்று எண்ணி வந்தேன். உங்களுடைய சாமர்த்தியத்தைப் பார்த்தால், நான் உங்கள் கால் தூசு பெறமாட்டேன் போல் தெரிகிறதே!'' என்றான் மகிழ்ச்சியுடன்.
''இன்று இரவு பார், ஒரு மூட்டை பொன் நாணயங்களை எடுத்துத் தந்து விடுகிறேன். நேற்று இரவு தனியாளாகச் சென்று மாட்டிக் கொண்டேன்!'' என்று குறைபட்டுக் கொண்டார்.
பின்னர் இருவரும் அரண்மனையை நோக்கிச் சென்றனர். அரண்மனை அன்னதானச் சத்திரத்தை அடைந்தனர். வரிசையாக அமர்ந்திருந்தவர்களுடன் இவர்கள் இருவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். பந்தியில் பரிமாறுகிறவனிடம் தன் பக்கத்தில் அமர்ந்து சாப்பிடுகிறவனுக்கு மேலும், மேலும் உணவுப் பொருளை வைக்கக் கூறவும், அவனும் கொண்டு வந்து கொட்டினான். நன்றாகச் சாப்பிட்டால் எழுந்து ஓட முடியாதே என்பது அப்பாஜியின் எண்ணம்.
''சரி, நீ சாப்பிடு, நான் எழுந்து கைகழுவி வருகிறேன்,'' என்று கூறி அங்கு நின்ற ஒரு காவலாளியிடம் தாம் யார் என்பதைக் கூறி, உணவு உண்டு கொண்டிருந்த திருடனையும் காட்டிக் கொடுத்துவிட்டுச் சென்று விட்டார்.
அந்தப் பக்காத்திருடன் நடக்க முடியாத அளவில் சாப்பிட்டு முடித்துக் கை கழுவி விட்டு வரவும், காவலர்கள் அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றனர்.
தனிப்பட்ட ஒருவராகத் துணிந்து சென்று, அந்தப் பக்காத் திருடனை அரண்மனைக்கே அழைத்து வந்த அப்பாஜியை, மன்னர் கிருஷ்ண தேவராயர் பெரிதும் பாராட்டிப் பரிசுகளை அளித்து மகிழ்ந்தார்.
***
