PUBLISHED ON : அக் 15, 2010

மண உறுதியும், சாஸ்திர அறிவும் நிரம்பப்பெற்ற மகரிஷிதான் மாண்டவ்ய மகரிஷி என்பவர். அவர் ஊருக்கு வெளியே ஒரு வனத்தில் ஆசிரமம் கட்டி வசித்துவந்தார். ஒருநாள் அவர் ஆசிரமத்துக்கு வெளியே ஒரு மரத்தடியில் மவுனத்தில் ஆழ்ந்திருந்தபோது, சில கொள்ளைக்காரர்கள் அந்தப்பக்கமாக வந்தனர். அந்தக் கொள்ளைக்காரர்களை அரண்மனைச் சேவகர்கள் துரத்திக்கொண்டு வந்தனர். அவர்களிடமிருந்து தப்பிக்கவே அந்த கொள்ளைக்காரர்கள் ஒளிந்து கொள்வதற்காக மாண்டவ்ய ரிஷியின் ஆசிரமத்துக்குள் நுழைந்தனர். தாங்கள் கொள்ளை அடித்துக் கொண்டுவந்த சொத்துக்களை, ஆசிரமத்தில் ஒருமூலையில் வைத்துவிட்டு மற்றொருபுறத்தில் ஒளிந்துகொண்டனர்.
அரண்மனைச் சேவகர்கள் திருடர்களைப் பின்தொடர்ந்து மாண்டவ்ய ரிஷியின் ஆசிரமத்துக்கு வந்துவிட்டனர். வாசலிலிருந்த மரத்தடியில் ரிஷி மவுன தியானத்தில் இருப்பதைப் பார்த்தனர்.
''இந்த வழியே திருடர்கள் வந்தனரே, அவர்கள் இப்போது எங்கே இருக்கின்றனர்? உடனே கூறுங்கள்!'' என்று முனிவரை சேவகர்கள் கேட்டபோது அவர் பதிலேதும் கூறாது மவுனமாக இருந்தார்.
படைத்தலைவன் அப்படியும் விடாது திரும்பவும் கேட்டான். முனிவர் எதுவும் கூறாது மவுனம் சாதித்தார்.
அதற்குள் ஆசிரமத்துக்குள் சேவகர்கள் நுழைந்து பார்த்தபோது களவுபோன சொத்துக்கள் அங்கே இருப்பதைக்கண்டு படைத்தலைவனை கூப்பிட்டனர். அங்கே ஒளிந்திருந்த திருடனையும் பார்த்துவிட்டனர். அப்போது படைத்தலைவன் முனிவர் அருகில் வந்தான். ''இப்போது எல்லாம் புரிந்துவிட்டது. இந்த பிராமணர் மவுன வேஷம் போட்டு உட்கார்ந்திருப்பது ஏனென்று புரிந்துவிட்டது. இவர்தான் இந்த திருடர்களின் தலைவன். இவருடைய தூண்டுதலால்தான் இந்த கொள்ளை நடந்திருக்கிறது!'' என்று கூறிவிட்டு படைத்தலைவன் நாட்டு அரசனிடம் போய் அந்த தகவலைக் கூறினான்.
அரசன் விசாரணை ஏதும் செய்யாமலே, ''இந்த மோசக்காரப் பாதகனை உடனே சூலத்தில் ஏற்றுங்கள்!'' என்று கட்டளையிட்டான்.
படைத்தலைவன் மாண்டவ்ய ரிஷியை சூலத்தில் ஏற்றிவிட்டு கைப்பற்றிய பொருட்களை அரண்மனைக்கு கொண்டுவந்து விட்டான்.
ஆனால், சூலத்தில் குத்தியேற்றப்பட்ட தர்மாத்மாவான மாண்டவ்ய ரிஷி நீண்டகாலம் வரை மரணம் அடையாதிருந்தார்.
யோகத்திலிருந்த காலத்தில் குத்தப்பட்டபடியால் அந்த யோக சக்தியால் அப்படியே உயிருடனிருந்தார்.
அப்போது காட்டில் தவ முனிவர்கள் பலர் அங்கே வந்து, அந்த கொலைபாதகச் செயலைக்கண்டு அலறினர்.
''ஓ மாண்டவ்ய ரிஷியே! இந்த கொடூரத்தை தாங்கள் ஏன் அடைந்தீர்கள்?'' என்று கேட்டனர்.
''உலகத்தை காக்கும் அரசனுடைய சேவகர்கள் இந்த தண்டனை கொடுத்துள்ளனர்!'' என்றார்.
வனத்தில் அன்ன ஆகாரம் ஏதுமின்றி சூலத்தில் குத்தப்பட்ட நிலையில் மாண்டவ்ய ரிஷி சாகாதிருப்பதையும், ரிஷிகளின் கூட்டமும், மக்கள் கூட்டமும் அங்கே தினமும் கூடிநின்று வணங்குகின்றனர் என்பதையும் நாட்டுமன்னன் அறிந்தான்; ஆச்சர்யமடைந்தான்.
அரசன் அந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது அவனுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. இவர் நிச்சயம் பெரிய மகரிஷியாக இருக்கவேண்டும். பெரிய தவறு செய்து விட்டோம் என்று உணர்ந்தான்.
மகரிஷியை இறக்கிவிட்டு மகரிஷியின் காலில் விழுந்து நமஸ்கரித்து, ''அறியாமையால் நான் இந்த அபவாதம் செய்துவிட்டேன். என்னை மன்னிக்கவேண்டும்!'' என்று வேண்டினான்.
மாண்டவ்ய ரிஷிக்கு அரசன்மீது எந்த கோபமுமில்லை. அவர் நேராக தருமதேவதையிடம் சென்று, ''நான் இத்தகைய துன்பத்தை அனுபவிக்க வேண்டிய காரணம் என்ன?'' என்று கேட்டார்.
ரிஷியின் தவவலிமையை அறிந்த தருமதேவதை பயந்து பணிவுடன் பதில் கூறியது.
''சுவாமி! நீங்கள் பட்சிகளையும் வண்டுகளையும் இம்சித்தீர்கள். அதனால்தான் இந்த தண்டனை!''
''இந்தக் கொடுமையை நான் எப்போது செய்தேன்?'' என்று கேட்டார் ரிஷி.
''நீர் குழந்தையாக இருந்த காலத்தில் செய்தீர்!'' என்றது தருமதேவதை.
''சிறிய வயதில் அறியாமல் செய்த சிறிய குற்றத்திற்கு இத்தனை பெரிய தண்டனையை நீ எனக்கு விதித்தது பெருங்குற்றம். இதற்காக நீ பூலோகத்தில் மனிதனாகப் பிறப்பாய்!'' என்று தருமதேவதையை மாண்டவ்ய ரிஷி சபித்தார். மாண்டவ்ய ரிஷியின் சாபத்தைப்பெற்ற தருமதேவதை, விசித்திர வீரியனின் மனைவி அம்''பாலிகையினுடைய வேலைக்காரியின் வயிற்றில் விதுரனாக அவதரித்தார் என்பது மகாபாரதக் கதை.
***
