தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மந்திரப்போர்வை! (2)

மந்திரப்போர்வை! (2)

மந்திரப்போர்வை! (2)


PUBLISHED ON : ஜூலை 13, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 13, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படபடப்புடன் இருந்த இளையவள், ''நீங்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். ஏதோ துன்பம் வரப் போவது போல என் உள்ளம் துடிக்கிறது,'' என்றாள்.

''ஆமாம்! நீ எதற்கு எடுத்தாலும் அச்சப்படுவாய்... எத்தனை இளவரசர்கள் வந்தனர். யாராலாவது உண்மையைக் கண்டுபிடிக்க முடிந்ததா? இவன் பழச்சாற்றைக் குடிக்காமல் இருந்தாலும் தூங்கி இருப்பான். எப்படி குறட்டை விட்டுத் தூங்குகிறான் பார்... நாம் புறப்படலாம்,'' என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் மூத்தவள். மற்றவர்களும் சரி என்றனர்.

உடனே, அவள் தன் காலால் தரையில் மெல்லத் தட்டினாள். என்ன வியப்பு! தரை அப்படியே விலகியது. அங்கே சுரங்கப்பாதை ஒன்று தோன்றியது.

முதலில் மூத்தவள் அதில் இறங்கினாள். அடுத்து, ஒருவர் பின் ஒருவராக இறங்கினர். கடைசியாக இளையவள் திரும்பிப் பார்த்தபடி அச்சத்துடன் இறங்கினாள்.

நடந்ததை எல்லாம் பார்த்த சுரேந்தர் எழுந்தான்... கிழவி தந்த மந்திரப் போர்வையை போர்த்திக் கொண்டான். இளையவளைத் தொடர்ந்து சுரங்கப் பாதைக்குள் இறங்கினான்.

அவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராகச் சென்று கொண்டிருந்தனர். நிலத்தில் புரண்ட இளையவளின் மேலாடை சுரேந்தர் காலில் சிக்கியது. அதனால் தடுமாறி விழப் போனாள்.

''யார் என் மேலாடையை மிதித்தது?'' என்று அலறியபடியே திரும்பிப் பார்த்தாள். யாரும் அவள் கண்களுக்குத் தெரியவில்லை.

அவளுக்கு முன்னால் சென்றவள், ''ஏதேனும் பொருளில் <உன் மேலாடை சிக்கி இருக்கும். இனி இப்படி அலறி, எங்களுக்கு எரிச்சலை மூட்டாதே... பேசாமல் வா,'' என்று அதட்டினாள்.

ஒரு தோட்டத்திற்குள் அவர்கள் நுழைந்தனர். அங்கிருந்த செடிகள் அனைத்தும் வெள்ளியாலானது.

தான் வந்ததன் அடையாளமாகச் செடி ஒன்றின் கிளையை உடைத்தான் அவன். அதைத் தன் போர்வைக்குள் வைத்துக் கொண்டான்.

''என் பின்னால் வரும் யாரோ கிளையை உடைக்கின்றனர். ஓசை உங்களுக்குக் கேட்கவில்லையா?'' என்று மீண்டும் அலறினாள் இளையவள்.

''நாம் வருவதை வரவேற்றுச் செடிகள் காற்றில் அசைகின்றன. அந்த ஓசைதான் கேட்டது,'' என்றாள் இன்னொருத்தி.

எல்லாரும் இன்னொரு தோட்டத்தை அடைந்தனர். அங்கிருந்த செடிகள் அனைத்தும் தங்கத்தாலானது. அங்கும் ஒரு கிளையை உடைத்தான் அவன்.

''ஐயோ! இங்கும் யாரோ கிளையை உடைக்கின்றனர்,'' என்று அலறினாள் இளையவள்.

''நாங்களும் உன்னுடன் தானே வருகிறோம். எங்களுக்குக் கேட்காத ஓசை உனக்கு மட்டும் கேட்கிறதா?'' என்று எல்லாரும் அவளைக் கேலி செய்தனர்.

நடந்த அவர்கள் மூன்றாவதாக ஒரு தோட்டத்தை அடைந்தனர். அங்கிருந்த செடிகள் அனைத்தும் பவழத்தாலானது. அங்கும் ஒரு கிளையை உடைத்தான் அவன்.

''ஐயோ! ஒவ்வொரு இடத்திலும் நம்மை யாரோ பின்தொடர்ந்து வருகின்றனர். இங்கும் கிளையை உடைக்கின்றனர். நான் சொல்வதை நம்ப மாட்டேன் என்கிறீர்களே,'' என்றாள்.

''உன் தொல்லை தாங்க முடியவில்லை... வீணாக அச்சப்படுவதே உனக்கு வேலையாகி விட்டது. இதுவரை நமக்கு ஏதேனும் ஆபத்து வந்துள்ளதா? வாயை மூடிக்கொண்டு எங்களுடன் வா,'' என்று அதட்டினாள் மூத்தவள்.

தோட்டத்தைக் கடந்த அவர்கள் பெரிய ஏரி ஒன்றை அடைந்தனர். அதன் கரையில் கலை வேலைப்பாடுகள் நிறைந்த பன்னிரெண்டு படகுகள் இருந்தன.

ஒவ்வொரு படகிலும் அழகான இளவரசன் ஒருவன் இருந்தான். இளவரசிகளின் வருகைக்காக அவர்கள் காத்திருந்தது போல இருந்தது.

அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இளவரசியின் கையைப் பிடித்துப் படகில் ஏற்றினர். மந்திரப் போர்வையை போர்த்தியிருந்த சுரேந்தர் இளையவளின் படகில் அமர்ந்தான்.

இளவரசர்கள் துடுப்பு போடத் தொடங்கினர். படகு மெல்ல செல்லத் தொடங்கியது.

இளையவள் படகை ஓட்டிய இளவரசன், ''என்ன இன்று படகின் எடை அதிகமாக உள்ளது. துடுப்பு போடக் கடினமாக உள்ளதே,'' என்றான்.

''நான் சொல்வதைக் கேட்க மாட்டேன் என்கிறீர்களே... நம்மை யாரோ தொடர்ந்து வருகின்றனர். நம் படகில் அமர்ந்து இருக்கிறார்கள். அதனால் படகை வேகமாகச் செலுத்த முடியவில்லை,'' என்று அலறினாள்.

''இன்று வழக்கத்திற்கு மாறாக காற்று வேகமாக வீசுகிறது. அதனால்தான் படகு செல்ல தடுமாறுகிறது,'' என்றாள் மூத்தவள்.

பன்னிரெண்டு படகுகளும் மறுகரையை அடைந்தன. அங்கே அழகான அரண்மனை ஒன்று இருந்தது. எங்கும் வண்ண வண்ண விளக்குகள் ஒளி வீசின. இனிய இசை அங்கிருந்து தவழ்ந்து வந்தது.

'இன்னும் என்னென்ன அதிசயங்கள் நிகழ்கின்றன பார்ப்போம்' என்று நினைத்தான் சுரேந்தர்.

படகிலிருந்து முதலில் இளவரசர்கள் இறங்கினர். ஒவ்வொரு இளவரசியின் கையையும் மரியாதையுடன் பிடித்துக் கீழே இறக்கினர்.

அதன்பிறகு எல்லாரும் அரண்மனைக்குள் நுழைந்தனர். அங்கே கண்ணைக் கவரும் அரங்கம் ஒன்று இருந்தது. மேடையில் இசைக் கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு இளவரசனும், ஒவ்வொரு இளவரசியுடன் கை கோர்த்தபடி நாட்டியமாடத் தொடங்கினர். இரவு முழுவதும் அவர்கள் மகிழ்ச்சியாக ஆடிக் கொண்டே இருந்தனர்.

''பொழுது விடியப்போகிறது. நாம் புறப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது,'' என்றாள் மூத்தவள்.

எல்லாரும் நாட்டியத்தை நிறுத்தினர்.

அரண்மனையை விட்டு வெளியே வந்த இளவரசிகள் அவரவர் படகுகளில் அமர்ந்தனர். இளவரசர்கள் துடுப்பு போட இக்கரையை அடைந்தனர். அவர்களை அறியாமல் சுரேந்தரும், அவர்களுடன் வந்தான்.

இளவரசர்கள் கையசைத்து வழியனுப்ப, இளவரசிகள் புறப்பட்டனர். மூன்று தோட்டங்களையும் கடந்த அவர்கள் சுரங்கப் பாதைக்குள் நுழைந்தனர்.

அவர்களுக்கு முன் சுரங்கப்பாதை வழியாக அறைக்குள் வந்தான் சுரேந்தர். கட்டிலில் படுத்த அவன் தூங்குவது போல நடித்தான்.

இளவரசிகள் அனைவரும் அந்த அறைக்குள் வந்தனர். மூத்தவள் தன் கால்களால் தரையை மெல்லத் தட்டினாள். சுரங்கப்பாதை மூடிக் கொண்டது.

சுரேந்தர் அருகே வந்த அவள், ''இவன் எப்படித் தூங்குகிறான்? பாருங்கள்... இன்று இவன் சாகப் போகிறான்,'' என்று சொல்லிச் சிரித்தாள்.

நாட்டியம் ஆடியதால் களைப்பு அடைந்திருந்த அவர்கள் காலணிகளைக் கழற்றவில்லை. அப்படியே கட்டிலில் படுத்துத் தூங்கத் தொடங்கினர்.

பொழுது சிறிது நேரத்தில் விடிந்தது. அரசன் அங்கு வந்தான்.

''இளவரசிகளின் காலணிகள் எப்படித் தேய்கின்றன? என்ற உண்மையைக் கண்டுபிடித்தாயா?'' என்று சுரேந்தரிடம் கேட்டான்.

''அரசே! கண்டுபிடித்து விட்டேன் என்ற அவன், நடந்ததை எல்லாம் சொன்னான். தான் எடுத்து வந்திருந்த வெள்ளிக்கிளை, தங்கக்கிளை, பவழக்கிளை மூன்றையும் காட்டினான்.

எதிர்பாராதது நடந்ததைப் பார்த்த இளவரசிகள் திகைத்தனர்...

மற்றவர்களுக்குத் தெரியாத வரையில்தான் மந்திரம் வேலை செய்யும். அதன்பிறகு எந்த மந்திரமும் வேலை செய்யாது. சுரங்கப்பாதை திறக்காது. இளவரசர்களுடன் நாட்டியமாட முடியாது என்பது அவர்களுக்குப் புரிந்தது.

''வீரனே! இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியாத உண்மையை நீ கண்டுபிடித்து விட்டாய். என் பாராட்டுக்கள்... இவர்களில் நீ யாரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாய்?'' என்று கேட்டான் அரசன்.

''அரசே! எனக்கு வயதாகி விட்டது. மூத்த இளவரசிதான் எனக்குப் பொருத்தமாக இருப்பாள். நான் அவளையே திருமணம் செய்து கொள்கிறேன்,'' என்றான் அவன்.

''உன் விருப்பம் போல நடக்கும்,'' என்றான் அரசன்.

இளவரசிகள் அனைவரும் மந்திர ஆற்றலிலிருந்து விடுபட்டுவிட்டனர். மூத்தவளுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி நாடெங்கும் பரவியது. மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.

ஒரு நல்ல நாளில் சுரேந்தனுக்கும், மூத்த இளவரசிக்கும் திருமணம் நடந்தது. அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

(முற்றும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us