PUBLISHED ON : மே 27, 2023

விடிந்ததும், கம்பீரமாக காட்டுக்குள் நுழைந்தது யானை. முதுமலை அதன் பிறப்பிடம். மூங்கிலை ருசித்தபடி, நண்பர், உறவினர் கூட்டத்துடன் உலா வந்தது.
பசுமை நிறைந்த புல்வெளி...
கொட்டும் அருவி...
பட்டாம் பூச்சியின் வண்ண களியாட்டம்...
பறவையின் கான குரல்... என இயற்கையை ரசித்தது.
துாரத்தில், நட்பு யானை வருவது புள்ளியாக தெரிந்தது. பாகன் பேச்சை கேட்டு பெட்டி பாம்பாக அடங்கியிருந்தது கண்டு ஆச்சரியப்பட்டது.
அதே நேரம், 'ஒருநாள் முழுக்க மனிதனை என் இஷ்டபடி கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்து, விருப்பப்படி ஆட்டுவிக்கணும்; பின், காட்டுக்கே ராஜாவாகிடணும்' என எண்ணியது.
இது வன்மம் நிறைந்த பகல் கனவு என்பது அதற்கு தெரியும். ஆனாலும் எண்ணி எண்ணி சிரித்தது.
அன்று மாலை மயங்கியது.
கூட்டத்தை விட்டு விலகியது அந்த யானை. அடர்ந்திருந்த காடு நோக்கி கவனமாக நடந்தது. அங்கு, வாழை, பலா மரங்கள் தெளிவாக தெரிந்தன. அவற்றை சாப்பிட்டு மகிழ்ந்தது. சுவையில் மயங்கிய போது, திடீரென்று விளக்குகள் எரிந்தன.
திரும்பி பார்த்த போது, தீப்பந்தத்தோடு சிலர் ஓடி வந்தனர். யானை மீது வீசினர். அது, காது பக்கமாக விழுந்ததால் கடும் வலி ஏற்பட்டது.
கும்பலுக்கு பயந்து ஓடியது யானை. அதன் கால்கள் தள்ளாடின; மயக்கத்தில் கண்கள் இருண்டன. வழி தெரியாததால் வறண்ட கிணற்றில் விழுந்தது யானை. எழுந்து நிற்க முடியாமல் தவித்தது; அங்கும், இங்கும் புரண்டு கொண்டிருந்தது.
தகவல் அறிந்து வந்தனர் வனவிலங்கு அதிகாரிகள். அதை கிணற்றில் இருந்து மீட்க முயன்றனர். யானைக்கு நினைவு தப்பியிருந்தது. நீண்ட போராட்டத்துக்கு பின் அது மீட்கப்பட்டது. அதற்கு சிகிச்சை அளித்தனர் கால்நடை மருத்துவர்கள்.
தும்பிக்கையை அசைக்க முடியாமல் கண்ணீரை சொறிந்தபடி, 'காட்டை அழிக்காதீர்; எங்களைப் போன்ற உயிரினங்களை வாழ விடுங்கள்...' என கதறியது யானை.
குழந்தைகளே... வன விலங்குகள் வாழும் காட்டை பாதுகாக்க வேண்டும்!
- சி.ஜி.வி.கிருஷ்ணன்
