PUBLISHED ON : ஜூன் 21, 2013

தமிழ் நாட்டுக்குப் பெருமை தேடித் தந்தவர் ராமானுஜம். உலகமே வியக்கும்படி மிகச் சிக்கலான கணக்குகளையெல்லாம் சுலபமாக முடித்துக் கொடுத்தவர் ராமானுஜம். மனித கம்ப்யூட்டர் என்று புகழப்படும் சகுந்தலா தேவி. எத்தனை ஸ்தானங்களில் எந்த விதமான கணக்கைக் கொடுத்தாலும், வினாடியில் சரியான விடை தருவார்.
இவர்களுக்கு இத்தகைய ஆற்றல் எப்படி வருகிறது? ஆராய்ச்சியாளர்களால் இதற்கு சரியான பதில் தர முடியவில்லை. நாம் வரப் பிரசாதம் என்று கூறி விடுகிறோம். இம்மாதிரி அபூர்வ சக்தி படைத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக, எல்லா நாட்டிலும் தோன்றி இருக்கின்றனர்.
ஜார்ஜ் பீட்டர் என்று ஒரு பையன். பன்னிரெண்டு வயதுதான். அந்த அறையின் நடுவே நின்று கொண்டிருந்தான். அவனைச் சுற்றி நிறையப் பேர். எல்லாரும் டிக்கெட் வாங்கிக் கொண்டு அங்கு வந்திருந்தனர். எதற்காக? ஜார்ஜை கேள்விகளால் மடக்க தான்.
எத்தனை பெரிய கணக்கானாலும் காகிதம், பென்சில் இல்லாமல் மனதிலேயே கணக்குப் போட்டு, உடனே விடை கூறும் ஆற்றல் படைத்தவன் ஜார்ஜ் என்று நம்பி, அவனைக் காண வந்திருக்கின்றனர் பலர். வேறு சிலர் அவன் ஒரு மோசடி பேர்வழி. அந்த பையனை கேலி செய்து வேடிக்கை பார்க்க வேண்டுமென்று வந்திருந்தனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவன் கேட்டான்.
''சந்திரனுக்குப் போக எத்தனை காளை மாட்டு வால்கள் தேவை?''
''போதுமான நீளமுள்ளதானால் ஒன்றே போதும்!'' என்று டக்கென்று பதில் கூறினான் ஜார்ஜ்.
அவன் சாமர்த்தியத்தைக் கண்டு, எல்லாரும் சிரித்து மகிழ்ந்தனர். பிறகு சீரியஸான கேள்விகள் கேட்கப்பட்டன.
''ஒரு வண்டிச் சக்கரத்தின் சுற்றளவு 5 அடி 10 அங்குலம். அந்த வண்டி 800,000,000 மைல்கள் போகிறது. சக்கரம் எத்தனை தடவை சுழன்றிருக்கும்?''
இது ஒரு பிரச்னைக்குரிய கணக்கு. ஒரு மைலுக்கு 5280 அடிகள். இத்தனை பெரிய கணக்கை மூளைக்குள் போடுவது சுலப மல்ல. ஆனால், ஜார்ஜ் சிந்தித்தது ஒரு நிமிடத்துக்கும் குறைவு. டக்கென்று சரியான விடையை 724,114,285,704 தடவைகள் சுழன்றிருக்கும் என்று கூறினான்.
ஜார்ஜ் ஏமாற்றுப் பேர் வழியல்ல... இதை விடக் கடினமான கணிதங்களையும் கூட பேப்பர், பென்சிலைப் பயன்படுத்தாமல் சொல்லக் கூடியவன். இவன் வாழ்ந்தது 1818-ல். அப்போது பாக்கெட் கால்குலேட்டர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. எந்த கணிதமேதையும், ஜார்ஜுக்கு கணக்குச் சொல்லித்தரவுமில்லை. ஆறு வயதில் பள்ளிக் கூடத்தில் 100 வரை எண்ணுவதற்குக் கற்றுக் கொண்டவன் ஜார்ஜ், அவ்வளவே. எழுதப் படிக்கக் கூட தெரியாது அவனுக்கு. ஆனால், எண்கள் மட்டும் ஏனோ அவனை வசீகரித்தன. எண்களை எழுதுவதற்குப் பதில் கூழாங்கற்களை வரிசைப்படுத்தி அடுக்குவான். கூழாங்கற்களை எண்ணியே பெரிய கணக்குகளுக்கெல்லாம் விடை கூறினான் ஜார்ஜ். நாளாக ஆக, கூழாங்கற்கள் இல்லாமலேயே மனதிலேயே கணக்குகளைப் போட்டு விடை கூறலானான்.
அக்கம்பக்கத்தார் ஜார்ஜின் கணிதத் திறமையை விரும்பி அவனிடம் பல புதிர் கணக்குகளைப் போட்டு விடை கண்டு மகிழ்ந்தனர். சின்ன பையன் தானே? அவனும் தன் மகத்தான திறமையை விளையாட்டாகவே செயல்படுத்தி வந்தான். அருகிலுள்ள கருமான் பட்டறைக்குப் போவான். அங்கு கூடி இருப்போர் கன்னாபின்னா என்று கணக்குகளைக் கொடுப்பர். ஜார்ஜ் சரியாகப் பதில் கூறுவான். ஒவ்வொரு சரியான விடைக்கும், ஒரு பென்னி பரிசாக கிடைக்கும் அவனுக்கு.
ஜார்ஜின் புகழ் ஊர், ஊராகப் பரவியது. அவனைக் காண, கணக்குக் கொடுத்து மகிழ விரும்பினர். அப்பாவும், பிள்ளையும் ஊர் ஊராகப் போய் காட்சிகள் நடத்தலாயினர். ஜார்ஜின் திறமை அதிசயமாக, மர்மமாக இருந்தது. கல்லூரிகளின் கணிதப் பேராசிரியர்கள் அவனைப் பரீட்சித்தனர். சிக்கலான கணக்குகளுக்கு படிப்பறிவு இல்லாத ஜார்ஜினால் எப்படி சரியான விடை சொல்ல முடிகிறது என்பது அவர்களுக்கு விளங்காத புதிராகத்தான் இருந்தது. ஜார்ஜுக்குமே, இதன் காரணம் தெரிய வில்லை. விளக்க முடியவில்லை; கணக்குகளுக்கான விடைகள் மின்னலைப் போல அவன் சிந்தையில் பளிச்சிட்டுக் காட்டின.
ஜார்ஜ் பீட்டர் வளர்ந்து பெரியவனான பிறகும், அவனிடமிருந்த அந்த ஆற்றல் மறையவில்லை. எழுதப் படிக்க கற்றுக் கொண்டு இன்ஜினியரானான். ஆனால், அப்போதும் கணக்குகளுக்கான விடை தனக்கு எப்படித் தெரிகிறது என்பதை அவனால் கூற முடியவில்லை. ஆனால், எல்லாரையும் போல எழுதியுள்ள எண்களைக்கொண்டு, தான் கணக்குகளை போடுவதில்லை என்றும், எண்களைக் கூழாங்கற்கள் வழியாகவே எண்ணி, சின்னப் பையனாக இருந்த போது செய்தது போலவே -குரூப் குரூப்பாக கணக்கிடுவதாக கூறினான். இன்று வரை ஜார்ஜ் பீட்டர் சிக்கலான கணிதங்களுக்கு எப்படி மின்னல் வேகத்தில் விடை கூறினான் என்பதற்கான காரணத்தைக் கூற முடியவில்லை.
- தொடரும்.
