PUBLISHED ON : செப் 09, 2023

உலகப்புகழ் பெற்ற கணிதமேதை கார்ல் காஸ்.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியை சேர்ந்தவர். அவரது பள்ளி வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி, எப்போதும் வியப்பூட்டக்கூடியது.
ஒருமுறை கணித ஆசிரியர், 1+2+3 என்ற வரிசைப்படி, 100 வரை கூட்டல் கணக்கு புதிரை விடுவிக்க சொன்னார். பின், 'இதற்கு, 10 நிமிடத்துக்குள் விடை கண்டுபிடிப்பவர் கையைத் துாக்கலாம்...' என்றார்.
என்ன ஆச்சரியம். வெறும், 30 நொடிகளில் கையைத் துாக்கி விட்டார் கார்ல் காஸ்.
ஒன்றும் புரியாமல், 'சொன்னதை நீ புரிந்து கொள்ளவில்லையா... ஏன் இப்போதே கையைத் துாக்கிவிட்டாய்...' என்று கேட்டார் ஆசிரியர்.
'விடை கண்டுபிடித்து விட்டேன் ஐயா...'
'என்ன... 30 நொடிகளிலா...'
'ஆம் ஐயா... கணக்கு புதிருக்கு, 5050 என்பதே சரியான விடை...' என, அதை கண்டறிந்த முறையை நிதானமாக விளக்கினார்.
'கூட்டலுக்கு எடுத்துக் கொண்ட முதல் எண் 1. அதை கடைசி எண்ணான, 100 உடன் கூட்டினால், 101 என்ற விடை கிடைக்கும். அடுத்த எண் 2. அதை கடைசி எண்ணுக்கு முந்தைய எண்ணான, 99 உடன் கூட்டினால், 101 வரும். இந்த வரிசைப்படி எண்களை கூட்டினால் மீண்டும், 101 என்பதே விடையாக கிடைக்கும்.
இப்படி வரிசையாக கணக்கிட்டால், 101 என்ற எண், 50 முறை வரும். முறையாக விடை கண்டுபிடிக்க, '101' என்ற எண்ணை, '5' என்ற எண்ணால் பெருக்கி உடன், 0 என்ற எண்ணை சேர்த்தேன். சரியான விடை வந்து விட்டது...' என்றார், காஸ்.
மலைத்து போய்விட்டார் ஆசிரியர்.
- மோகன ரூபன்
