PUBLISHED ON : செப் 09, 2023

அன்று தாத்தாவின் பிறந்த நாள்.
ஆதரவற்றோர் இல்லத்திற்கு, உணவு தரலாம் என்று, முடிவு செய்தோம். குழந்தைகளுக்கு, காலை உணவாக, இட்லியுடன், கேசரி, வடை சேர்த்து கொடுத்தோம்; மகிழ்ந்து உண்டனர்.
'இந்த இல்லம் இல்லையெனில், இந்த குழந்தைகளின் வாழ்க்கை என்னவாக மாறியிருக்கும்' என நினைத்தான் ரகு.
அவன், 9ம் வகுப்பை முடித்திருந்தான். கோடை விடுமுறையில் தாத்தா வீட்டிற்கு வந்தான். சொந்த ஊரில் நில புலன்கள் இருந்தன. பொன் விளையும் பூமி. யார் வேலை கேட்டு வந்தாலும், தகுதிக்கு ஏற்ப, தோட்டத்திலோ, மில்லிலோ வேலை போட்டு தருவார் தாத்தா. பசிக்கு உணவு அளிப்பார். அந்த சுற்று வட்டாரத்தில் அவரை தெரியாதவர் யாரும் இல்லை.
அன்று தாத்தாவுடன் தோட்டத்திற்கு சென்றான் ரகு. ஒரு நடுத்தர வயதானவர், வேலை வேண்டி வந்திருந்தார்.
''இன்றைக்கு, நெல் அளக்குற மாடசாமி வரல; இங்கே வேலை செய்யுறவங்களுக்கு, கூலியா ஆளுக்கு, 10 படி நெல் அளந்து போடு...'' என்றார் தாத்தா.
அரை மணி நேரத்திற்கு பின் சாக்கு மூட்டைகளுடன் வந்தார் அந்த ஆள்.
சாக்கு பையை துாக்கி பார்த்த தாத்தா, ''எவ்வளவு நெல், அளந்து போட்டாய்...'' என்றார்.
''சொன்னது போல், 10 படி நெல் போட்டேன்...''
''படியை எடுத்து வா... மீண்டும் அளந்து காட்டு...''
முழுமையாக அளக்கவில்லை. அதை சுட்டிக்காட்டி முறையாக அளக்க கற்று தந்தார் தாத்தா.
பக்கத்தில் நின்ற ரகு, ''எங்க தமிழாசிரியர், யாருக்கும் தானியத்தின் அளவை குறைக்க கூடாது என்பதை, 'அகம் சுருக்கேல்' என, அவ்வையார் பாடியுள்ளதை குறிப்பிட்டு காட்டியுள்ளார்...'' என்றான்.
குழந்தைகளே... எந்த பணியையும் முறையாக செய்ய பயிற்சியை வளர்த்து கொள்ள வேண்டும்!
- பா.செண்பகவல்லி
