PUBLISHED ON : ஜன 13, 2012

இதுவரை: முகுந்தனை பின் தொடர்ந்து வந்தனர் லாரி ராஜமாணிக்கமும், சாமியாரும். மோதிரத்தை கண்டு பிடித்தான் முகுந்தன். இனி-
முகுந்தனின் கையில் மாயமோதிரம் கிடைத்ததும் பெரும் மகிழ்ச்சி அடைந்தான். அதே நேரம் தன்னை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த லாரி ராஜமாணிக்கனும் அவனுடன் வந்திருக்கும் ஆளையும் கண்டு எரிச்சல் அடைந்தான். மெதுவாக அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான்.
''தம்பி நில்லு!'' என்றான் ராஜமாணிக்கம்.
''எதுக்கு?''
''இவ்வளவு நேரம் இங்க என்ன செய்துட்டு இருந்தே?''
''சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்''
''வேடிக்கை பார்க்க இதென்ன மிருக காட்சியா? இல்ல பீச்சா?'' வேடிக்கையாகக் கேட்டார் சுவாமிஜி.
''என்ன பண்ணினா உங்களுக்கு என்ன?''
''அப்படியில்லை தம்பி... ரொம்ப நேரமாக் குப்பையைக் கிளறி, கிளறி தேடிக்கிட்டு இருந்தியே! அது என்ன?''
''என்னோட அஞ்சு ரூபா காயின் விழுந்திடிச்சி. அதைத்தான் தேடினேன்,'' என்றான்.
''பொய் சொல்லாத தம்பி, நல்ல பையன்னு தான் நாங்க ரெண்டு பேரும் உன்னைத் தேடி வந்தோம்''
''என்னை எதுக்காகத் தேடிவந்தீங்க?''
''உன்னால எங்களுக்கு சில உபகாரங்கள் ஆகணும்!''
''நீங்க யாரோ... நான் யாரோ. என்கிட்ட எதுக்கு உபகாரங்கள் கேக்கறீங்க?''
''அப்படியில்ல தம்பி... நல்லவங்களுக்கும், கஷ்டப்படறவங்களுக்கும், உதவுகிற குணம் உனக்கு இருக்கறதாலதான், உன்கிட்ட உபகாரம் கேக்கிறோம்!''
''என்னன்னு சொல்லுங்க!''
''சொல்றோம். முதல்ல நீ இங்கிருந்து தேடி எடுத்ததை சொல்லு? என்ன எடுத்தே?''
இவர்கள் பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில், சைக்கிள் வியாபாரி அங்கு வந்தான்.
''என்னப்பா முகுந்தா... காணாமல் போன மோதிரம் கிடைச்சிடிச்சா?'' என்று கேட்டான்.
முகுந்தன் பதில் சொல்ல முடியாமல் நெளிந்தான்.
''ஓ... மோதிரத்தைத் தொலைச்சிட்டு அதைத்தான் தேடினியா?'' என்றார் ராஜமாணிக்கம்.
''யாருப்பா இவங்கெல்லாம்?'' சைக்கிள் வியாபாரி சிங்காரம் கேட்டான்.
''எங்களுடைய மோதிரத்தை இவன் வைத்துக் கொண்டு இருக்கிறான்... அதை வாங்கத்தான் வந்தோம்,''
''மோதிரம் உங்களதா? ஏம்பா முகுந்தா கெடைச்சா குடுத்திடேன். அதை மறுபடியும் கையில வெச்சுட்டு அலைஞ்சீன்னா... மறுபடியும் தொலைக்க வேண்டி இருக்கும்,'' என்றான்.
''மோதிரம் கெடைக்கலை!''
''தம்பி பொய் சொல்றான். கெடைச்சதைக் கெடைக்கலைன்னு சொல்றான். உடனே, செக் பண்ணிப் பார்த்தா தெரிஞ்சு போகுது,'' என்று முகுந்தனின் கையைப் பிடித்து இழுத்தனர்.
பிறகு கைவிரலில் பார்த்த போது சின்னதாய் வளையம் போல் இருந்தது.
''ரொம்பச் சின்னதா இருக்கு?'' சிங்காரம் மேலும் இழுத்தான்.
''யோவ் சின்னதா இருந்தா என்ன? பெரியதா இருந்தா என்ன? தங்கம் தங்கம்தானய்யா? ஓழுங்காக் கழட்டிக் குடுக்கச் சொல்லு!
''அண்ணே இவங்க ரெண்டுபேரும் பொய் சொல்றாங்க! இந்த மோதிரத்துக்கும், இவங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை!'' என்றான் முகுந்தன்.
''இப்படியெல்லாம் கேட்டா தரமாட்டான். போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டுப் போறோம் வா,'' என்றனர்.
''இதுக்கு ஏன் போலீஸ் ஸ்டேஷன்?'' என்று இழுத்தான் சிங்காரம்!
''அப்ப இங்கேயே ஒழுங்காக் கழட்டிக் குடுக்கக் சொல்லு!''
''ஏம்பா மோதிரம் அவங்களதுன்னா... கழட்டிக் கொடுத்துடேன்,'' என்றான் சிங்காரம்.
''அண்ணே! எனக்கு இவங்க யாருன்னே தெரியாது. போலீஸ் ஸ்டேஷன் வேண்ணா போகலாம் வாங்க,'' என்றான் முகுந்தன்.
முகுந்தன் இவ்வளவு தைரியமாய் போலீஸ் ஸ்டேஷன் வருவதாக ஒப்புக் கொள்வான் என்று ராஜ மாணிக்கமோ, சுவாமிஜியோ எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை போலீஸ் ஸ்டேஷன் சென்றால், தாங்களும் யார் என்பதைச் சொல்ல வேண்டி இருக்கும், மாட்டிக் கொள்வோம் என்று பயந்தனர்.
''இதப்பாருங்க சார்... இந்தப் பையனை நான் தான் வீட்டுல இருந்து அழைச்சுட்டு வந்தேன். இன்னும் வீடு போய்ச் சேரலை! மேற்கொண்டு ஏதாச்சும் பேசணும்னா பையனோட அப்பா, அம்மா இருக்காங்க வந்து பேசிக்குங்க! அனாவசியமா எங்க, 'டயத்தை வேஸ்ட்' பண்ணா தீங்க, வா தம்பி போகலாம்!'' என்றான் சிங்காரம்.
முகுந்தன் சைக்கிளின் பின் சீட்டில் ஏறிக் கொண்டான்.
''நாங்க வீட்டுக்கு வந்தே பேசறோம்,'' என்றான் ராஜமாணிக்கம்.
சிங்காரம் களைத்துப் போயிருந்தான். சைக்கிளை மிதிக்க ரொம்பவும் கஷ்டப்பட்டான்.
''அண்ணா.... உங்களால முடியலைன்னா சைக்கிளை நான் ஓட்டறேன். நீங்க பின்னால உட்கார்ந்துக்குங்க!''
''என்னப்பா விளையாடறியா... நீ சின்னப்பையன், என்ன சைக்கிள்ல பின்னால உட்கார வெச்சு ஓட்டி வியாக்கும்?''
''சந்தேகம் இருந்தா சைக்கிளைக் குடுத்துப் பாருங்கண்ணே, அந்த ரெண்டு குண்டனுங்களும் நம் சைக்கிளை பின் தொடர்ந்து கார்ல வந்துட்டு இருக்காங்க!''
''அட ஆமாய்யா... தம்பி... கேக்கறனேன்னு தப்ப நெனைக்கக் கூடாது... மோதிரம் அவங்களதுன்னு சொல்றாங்களே! நிஜமா யாரோடது...?''
''அண்ணே... இந்த மோதிரத்துகக்குச் சொந்தக்காரர் ஒரு தாத்தா! அவர் குன்றத்தூர் மலைமேல இருக்காரு! அவர்தான் இதை எனக்குக் குடுத்து, நல்லாப் படிச்சு தைரியசாலியாக இருன்னு சொன்னாரு... இவனுங்க இதை எப்படியாவது என்கிட்ட இருந்து வாங்கிடனும்னு பாக்கறாங்க!''
''சரிங்கண்ணே சைக்கிளைக் குடுங்க, இப்படி சைக்கிளை மிதிச்சா வீடு போக இருட்டிடும்,'' என்று சைக்கிளில் இருந்து கீழே குதித்தான் முகுந்தன்.
''நிஜமாகவே சைக்கிளை ஓட்டப் போறியா?'' என்று சைக்கிளை அவனிடம் கொடுத்தான் சிங்காரம்.
சைக்கிளை வாங்கிக் கொண்ட முகுந்தன், மாயமோதிரத்தை வாயருகே கொண்டு வந்து, ''மாயமோதிரமே! இந்த சைக்கிளை நான் நினைக்கிறபடி ஓட்டவிடு,'' எனக்கூறி ஒரே தாவாகத் தாவினான். சைக்கிள் ஓடியது! அதே வேகத்தில் சிங்காரமும் தாவி பின் சீட்டில் ஏறிக் கொண்டான்.
அவ்வளவுதான்-
முகுந்தனின் கால்கள் பெடலை அதிவேகமாக மிதித்தது. கார், பைக், பஸ்,லாரி, ஜீப், இப்படி எல்லாவற்றையும் கடந்து சைக்கிள் சென்றது. சைக்கிள் சக்கரம் தரையில் பட்டு ஓடுகிறதா? காற்றில் மிதந்து ஓடுகிறதா? என்று புரியாமல், சிங்காரம் பயந்துபோய் கத்தினான்.
''மெல்லப்பா... மெல்ல ஓட்டப்பா... விழுந்தா கால்-கை எதுவும் தேறாது போல இருக்கப்பா... தம்பி... உனக்கு சைக்கிளே ஓட்டத் தெரியாதுன்னுதானே நெனைச்சேன்! இந்த வேகத்துல சைக்கிளை ஓட்டறியே, எங்காவது மோதிச்சுன்னா, கட்டித் தூக்கிட்டுப் போகக்கூட உடம்புல இருக்கறது எதுவும் கெடைக்காதே,'' என்று சிங்காரம் புலம்பிக் கொண்டே இருந்தான்.
ஆனால், முகுந்தன் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
''ராஜமாணிக்கமும், சுவாமிஜியும் காரை வேகமாக ஓட்ட முடியாமல் நிலை தடுமாறினார்.
''பார்த்தீர்களா சுவாமிஜி, பையன் சைக்கிளை எவ்வளவு வேகமாக ஓட்டுறான். இவனைப் பின் தொடர்ந்து எவராலும் பிடிக்க முடியாது! இதெல்லாம் கண்டிப்பாக மோதிரத்தின் சக்தியாகத்தான் இருக்கும். இவனிடமிருந்து மோதிரத்தை நாம் வாய் விட்டுக் கேட்டுப் பெற முடியாது. அதே நேரம் அவனும் நமக்குக் கொடுத்து, உதவமாட்டேன். இதற்கு வேறு ஏதேனும் வழியைத்தான் கையாள வேண்டும், தங்களால் ஒன்றும் செய்ய முடியாதா?'' எனக் கேட்டான் ராஜமாணிக்கம்.
''இனி இவன் பின்னால் சென்றால் உஷாராகி விடுவான். போலீஸ் ஸ்டேஷன் போவதானாலும் வரத் தயார் எனக்கூறும் சிறுவனிடம், அன்பாகப் பேசிக் கிடைத்தால் உண்டு, அப்படி இல்லையென்றால் மாந்த்ரீக வழியை நாட வேண்டியதுதான்''
''மாந்த்ரீக வழியா?''
''ஆமாம், கேரளாவில் எனக்குத் தெரிந்து அப்புக்குட்டன் நம்பூதிரி என்பவர் ஒருவர் இருக்கிறார். அவர் மாந்த்ரீக முறையில் பல காரியங்களை வெற்றிகரமாக நடத்தித் தருவார். அவர் மூலம் இந்தக் சிறுவனை நம் இடத்திற்கே வரவழைத்து அந்த மோதிரத்தைப் பெற்றாக வேண்டும்.''
பாதையில் பெரும்கூட்டம் திரளாக நின்றிருந்தது. வழியில்லாத காரணத்தால் சைக்கிளை நிறுத்தினான் முகுந்தன்.
''என்ன அண்ணே கூட்டம்... என்னன்னு பாருங்க,'' என்றான்.
சிங்காரம் கூட்டத்தினரை விலக்கிப் பார்த்தான். ஒரு பெரிய லாரிக்கு அடியில் ஒரு மாருதிக்கார் சிக்கி, அப்பளமாக நொறுங்கியிருந்து. அதில் வந்தவர்கள் உயிருக்குப் போராடியும் கொண்டிருந்தார். லாரியை முன்னால் நகர்த்தினாலோ பின்னால் நகர்த்தினாலோ மேலும் கார் அப்பளமாக நொறுங்கும், அதே நேரம் காருக்குள் உள்ள அந்த ஜீவனும் நசுங்கிவிடும், லாரியைத்தூக்கினால் மட்டுமே காரை வெளியே இழுத்து எடுக்க முடியும்.
போலீஸ்க்காரர்களும் இன்னும் வரவில்லை. அவர்கள் வந்தால்தான் லாரியைத் தூக்க இயலும், அதுவரையிலும் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவரின் நிலை என்ன ஆகுமோ தெரியவில்லை என்று கூட்டத்தில் இருந்தவர்கள் சிங்காரத்திடம் சொன்னனார்.
''அண்ணே, இந்த லாரியைத் தூக்கிப் பிடிச்சு அடியில இருக்கற காரை எடுக்க உதவிட்டு வந்துடறேன்!''
''என்னாது... லாரியத் தூக்கறதா? அதுவும் நீயா... சரிதான். கேக்கறவன் கேணப் பயலா இருந்தா எருமை ஏரோபிளான் ஓட்டுதுன்னு சொல்லுவே போல இருக்கு!'' என்றான் சிங்காரம்.
சைக்கிளை ஸ்டாண்டு போட்டு லாரியின் முன் வந்து நின்றான் முகுந்தன்.
''தம்பி... அங்க என்னப்பா பண்றே தள்ளி நில்லப்பா'' என்றார் ஒருவர்.
''லாரியைத் தூக்கறேன். காரை இழுத்து வெளியே எடுங்க. மாய மோதிரமே, இந்த லாரியைத் தூக்கும் சக்தியை எனக்குக் கொடு!'' என்றான்.
லாரியின் முன் பாகத்தைப் பிடித்துத் தன் தலைக்குமேல் உயர்த்தியபடி, இருகைகளையும் தூக்கி நின்றான். கூடி நின்றவர்கள் வாய் பிளந்து நின்றனர்.
-20 தொடரும்.
