PUBLISHED ON : ஜன 20, 2012

இதுவரை: மோதிரத்தை தேடி கண்டு பிடித்த முகுந்தன், ஒரு லாரியை தூக்கி சாதனை படைத்தான் இனி-
முகுந்தன் லாரியைத் தூக்கி கொண்டு நின்றதை அத்தனை பேரும் வாய்பிளந்து, பார்த்துக் கொண்டிருந்தனர். இங்கு நடந்து கொண்டிருப்பது கனவா அல்லது நனவா? லாரிக்கு அடியில் சிக்கியிருந்த மாருதிக் காரை, மிகவும் லாவகமாக வெளியே இழுத்து அதனுள் சிக்கித் தவித்துக் கொண்டும், உயிருக்குப் போராடிக் கொண்டும் இருந்த நபரை, மக்கள் வெளியே இழுத்து எடுத்தனர்.
தூக்கிய லாரியை மெதுவாக தரையில் முட்டும் படி வைத்துவிட்டு, சைக்கிள்காரன் சிங்காரத்திடம் வந்தான் முகுந்தன். முகுந்தனை பயத்தோடு பார்த்து நின்றான் சிங்காரம்.
''அண்ணே போகலாமா? நேரம் ஆயிடிச்சு?'' என்றான் முகுந்தன்.
''ஏம்பா... இம்புட்டு நேரம் இங்க என்ன நடந்துச்சு?''
''இது சாதாரண விஷயம் தானே மேற்கொண்டு நின்னா... கூட்டம் கூடிடும் போகலாம்,'' எனக் கூறி முகுந்தனே சைக்கிளை எடுத்தான். சைக்கிள் கூட்டத்தினரை விலக்கிச் சென்றது. பின்னால் உட்கார்ந்த சிங்காரத்திற்கு இன்னும் முகுந்தனின் சாகசத்தைக் கண்ட பிரம்மை அகலவில்லை.
''ஏம்பா... சாதாரணமா சின்ன பொம்மை லாரியைத் தூக்கற மாதிரிக் தூக்கிட்டே, இதெப்படி?''
''உங்களால முடியாதா?''
''என்ன விளையாடறியா? லாரியைத் தூக்கறது அவ்வளவு சாதாரண விஷயமா... இல்லப்பா... நீ சாதாரண ஆளே இல்லே! உண்மையைச் சொல்லு... சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேணுமான்னு ஒளவையாரை கேட்ட முருகா நீ?''
''அண்ணா... சும்மா வாங்க,'' என்று ஒரே வார்த்தையில் அவன் வாயை அடக்கினான்.
வெகு சீக்கிரத்தில் முகுந்தனின் வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்தினான்.
வள்ளியம்மாள் வாசல்படியிலேயே காத்து நின்றிருந்தாள்.
''வந்துட்டியா கண்ணு... மோதிரம் கெடைச்சுதா?''
''கெடைச்சது சித்தி''
''இவ்வளவு நேரம் எங்கப்பா போனே?''
''அதுவந்து...'' என்று சிங்காரம் விஷயத்தைச் சொல்ல இழுத்தான்.
''அண்ணே... நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம். பேசாமப் போங்கண்ணே,'' என்றான்.
முகுந்தன் சக்தி வாய்ந்தவன் என்பதால் மேற்கொண்டு ஏதாவது பேசினால் தன்னை ஏதேனும் செய்து விடுவானோ... என்று நினைத்து தன் சைக்கிளில் ஏறிச் சென்றான் சிங்காரம்.
அந்தக் காம்பவுண்டில் வழக்கத்திற்கு மாறாகப் பல கார்கள் வரிசையாய் நின்று இருந்தன.
''எதுக்கு சித்தி இவ்வளவு கார் வந்து நிக்குது?''
''அது... நீ அடிச்சியேப்பா... அந்தப் பையன் பேரு என்னவோ சொல்லுவாங்களே...''
''சுசீந்திரன்!''
''அவன்தான். காது கேக்க மாட்டேங்குதாம்... அதோட இப்ப காய்ச்சலும் வந்திருக்கு! டாக்டர் கிட்ட அழைச்சிட்டுப் போயி திரும்ப அழைச்சிட்டு வந்திருக்காங்க! விஷயம் தெரிஞ்ச சொந்தக்காரங்க பையனைப் பார்க்க வந்திருக்காங்க... அவங்க கண்ணுல பட்டுடாதே! உன் மேல் ரொம்ப கோபமா இருக்காங்க,'' என்றாள் வள்ளியம்மாள்.
சுசீந்திரன் மீது முகுந்தனுக்கு கோபம் இருந்தது. ஆனாலும் அவனுக்கு காதும் கேட்காமல் காய்ச்சலும் வந்து விட்டது என்பதைக் கேள்விப்பட்டதும் மனது என்னவோ போல இருந்தது. தன்னால் எற்பட்ட துன்பத்தை தானே சரிசெய்து விட வேண்டும் என்று எண்ணினான். ஆனால், எப்படி சரி செய்வது? யோசித்தான்.
வீட்டை விட்டு எங்கும் போகக் கூடாது. உங்கப்பா மளிகைக் கடைக்கு அரிசியும், பருப்பும் வாங்கப் போயிருக்காரு, அவர் வர்ற வரைக்கும் கேட்டைத் திறந்து மூடுற வேலையை நான்தான் கவனிச்சாகணும் எனக்கூறி வள்ளியம்மாள் கேட்டுப் பக்கம் போட்டிருந்த ஸ்டூலில் அமர்ந்தாள்.
அன்று இரவு சாப்பிட்டு விட்டு வழக்கம் போல் படுத்துக் கொண்டான். தூக்கம் வரவில்லை. விடிவதற்குள், அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் சுசீந்திரனைக் காப்பாற்றியாக வேண்டும். ஆனால், தன்னை கண்டால் அவர்கள் சும்மா விடுவார்களா? என்றாலும் காப்பாற்றியாக வேண்டும் என, நினைத்து நள்ளிரவில் எழுந்தான்.
உட்கார்ந்து கொண்டு கண்களை மூடி இறைவனை நினைத்து, ''மாயமோதிரமே சுசீந்திரனை குணப்படுத்தும் மருந்தை எனக்குக் காட்டு!'' என்றான்.
அவனையும் அறியாமல் எழுந்து நின்றான்.
வள்ளியம்மாள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளைக் கடந்து வெளியே வந்தான். இரவில் யாருடைய நடமாட்டும் இல்லாமல் தெரு வெளிச்சம் இழந்து கிடந்தது. அந்தத் தெருவில் நடந்தான். எங்கு நடக்கிறான் என்றே அவன் மனதிற்குப் புலப்படவில்லை. நடந்தான்... நடந்தான்... நடந்து கொண்டே இருந்தான்.
வீடுகளும், தெருக்களும் இல்லாத இடம் அது. செடிகளும், மரங்களும் நிறைந்து காணப்பட்டன. அந்த இடத்தில் வளர்ந்து நின்ற செடி அருகே நின்றான். செடியில் உள்ள இலைகளைப் பறித்தான். இப்போது அவன் மனதுக்குத் தைத்தது.
இந்த இலைதான். சுசீந்திரனுக்கான மருந்து... இலைகளைப் பறித்துக் கொண்டு, ''மாய மோதிரமே வெகு விரைவில் என்னை வீடு கொண்டு போய்ச் சேர்ந்துவிடு,'' என்றான்.
அவ்வளவுதான், நடைபோயி ஓட்டம் தொடங்கியது. மின்னல், வேகத்தில் வீட்டுக் காம்பவுண்டை வந்து அடைந்தான்.
அப்பா கந்தசாமி தூக்கத்தில் இருந்தார்.
சுசீந்திரனின் வீடு முகுந்தனுக்குத் தெரியும். அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் நான்காவது மாடியில் அவன் வீடு. படிக்கட்டுகளில் ஏறி நான்காவது மாடிக்கு சென்றான்.
வீட்டின் கதவு உள்பக்கமாகத் தாளிட்டிருந்தது. மெதுவாகத் தள்ளிப் பார்த்தான். கதவு திறக்கவில்லை... மீண்டும் ஜெபித்தான். மாயமோதிரக் கையால் கதவை அழுத்தமாகத் தள்ளினான். கதவு திறந்தது.
உள்ளே நுழைந்தான்.
பெரிய ஹால்... கருநீல வெளிச்சத்தில் வசதியான வீட்டின் வனப்பு மின்னியது. சகலமும் அந்த வீட்டிற்குள் உண்டு. சொர்க்கலோகத்தை பார்ப்பது போல் அவனுக்குத் தெரிந்தது. சுசீந்திரன் படுத்திருக்கும் அறையைக் கண்டுப்பிடித்தான்.
சுசீந்திரன் தூக்கத்தில் இருந்தான். இந்த இலையைப் பிழிந்து காதிலும், வாயிலும் கொடுக்க வேண்டும் என நினைத்தான்.
அவனுக்குப் பக்கத்தில் வந்து நின்று அந்த இலையை நசுக்கினான். அதில் வடிந்த சாரைக் காதில் விட்டான்.
சட்டென விழித்துக் கொண்ட சுசீந்திரன், முகுந்தன் தன் எதிரில் நிற்பது நிழலைப் போல இருளில் தெரியவே, ''பேய்... பேய்...! ''என்று கத்தினான்.
வீடு முழுவதும் சட்டென விளக்குகள் எறிந்தன.
சுசீந்திரனின் தந்தை, தாய், மற்றும் சகோதரி உட்பட பலரும் அந்த அறைக்குள் வந்தனர். முகுந்தனைக் கண்டதும், சுசீந்திரனின் தந்தை அவனை பிடித்துக் கொண்டார்.
''அடப்பாவி என் பையனைக் கொல்லவா வந்தே... என்னடா கையில வெச்சிருக்கே?'' எனக் கேட்டார்.
''அங்கிள்... இது மூலிகை மருந்து... இந்த மருந்தால சுசீந்திரன் குணமாயிடுவான்,'' என்றான்.
''பிச்சைக்காரப் பயலே... ஊர்ல இருக்கிற பெரிய பெரிய ஸ்பெஷலிஸ்டுகளை எல்லாம் வர வழைச்சிப் பாத்தாச்சு! அவங்களால காது கேக்க வைக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க, இந்தப் பச்சை இலையா என் பையனைக் காப்பாத்தும்... வீட்டுக்குள்ள இந்த நேரத்துல எப்படி வந்தே? திருட்டுப் பயலே...'' என்று வாய்க்கு வந்தப்படி எல்லாம் திட்டி, முகுந்தனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
''சார்... என்னை அடிக்கறதுக்கும் முன்னால உங்க பையன்கிட்ட நான் பேசறேன் சார், அவனுக்குக் காது கேக்குதா இல்லையான்னு பார்க்கலாம் சார், அதுக்கப்புறம் என்னை என்ன வேணும்னாலும் செய்யுங்க சார்.''
சுசீந்திரனின் மனைவி குறுக்கிட்டாள்.
''தம்பி... எப்படியோ என் பையன் பேசி குணம் ஆனாப்போதும்... கடவுள் எந்த ரூபத்துல வந்து பேச வைச்சாலும் சரி, உன்னால முடிஞ்சாப் பேச வை,'' என்றாள்.
''நீ சும்மா இரு... இவன் சாதாரண வாட்ச்மேன் பையன்!''
''அந்த சாதாரண வாட்ச்மேன் பையன் அடிச்சதாலதானே நம்ம பையனுக்குக் காது கேக்காமப்போச்சு... பேசாம இருங்களேன்,'' என்று தன் கணவனை அடக்கினாள்.
சுசீந்திரனைப் பார்த்து நின்றான் முகுந்தன்.
''சுசீந்திரா... நான் சொல்றபடிச் சொல்லு பாக்கலாம்... ஜெய் ஆஞ்சநேயா...'' என்று சப்தமாகக் கூறினான்.
அதைக் கேட்ட சுசீந்திரனின் காதுகளில் சப்தம் கேட்டது.
''ஆண்டவா என்ன காப்பாத்து....'' என்றான்.
மீண்டும் மீண்டும் முகுந்தன் சொல்லிக்கொண்டே இருக்க, சுசீந்திரனும் ஒரு மந்திரத்தைப் போல் சொல்லிக் கொண்டே இருந்தான்.
சுசீந்திரனின் தந்தைக்கும், தாய்க்கும், சகோதரிக்கும் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.
''சுசீந்திரா... காது கேக்குதா?'' தந்தை கேட்டார்.
''கேக்குது டாடி!'' என்றான்.
காது கேக்காத அந்த நேரத்திலிருந்து இந்த நேரம் வரையிலும் யார் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கவனிக்க முடியாமலும், கேட்பவர்களுக்கு பதில் சொல்ல முடியாமலும் தவித்துக் கொண்டிருந்த சுசீந்திரன், மகிழ்ச்சியில் திளைத்தான். அவன் உடல் உஷ்ணம், தணிந்து காய்ச்சலும் நீங்கியிருந்தது.
''கடவுள், உன்னைக் காப்பாற்றி விட்டார்... என்னால ஏற்பட்ட பாதிப்பை நானே முயற்சித்துப் போக்கிட்டேன். இனிமே கஷ்டப்படுத்தாதே! என் அப்பாவை கிரிக்கெட் பேட்டால நீ அடிச்சதாலதான் கோபத்துல நானும் உன்னை அறைந்து விட்டேன். நான் உன்னை அப்படி அறைஞ்சதும் தப்புதான், என்னை மன்னிச்சிடு!'' என்றான் முகுந்தன்.
ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவன் தானே என்று மிகவும் ஏளனமாகப் பேசிய சுசீந்திரனின் தந்தை முகுந்தனின் கையைப் பற்றினார்.
''இந்த நிமிஷம் உன்னை தெய்வமா நான் நினைக்கிறேன். எங்கிருந்தோ பச்சை இலை மருந்தைக் கொண்டு வந்து, என் மகனை குணப்படுத்தியிருக்கியே! நான் உன்னை ஏளனமாகப் பேசினதுக்கு என்னையும் மன்னிச்சிடு தம்பி,'' என்றார் சுசீந்திரன் தந்தை.
''ஐயா... நீங்க பெரியவங்க! நீங்க எங்கப்பாவுக்குக் கொடுக்கற சம்பளப் பணத்துலதான் நாங்க சாப்பிடறோம், எங்களை நீங்க மதிக்கணுங்கற அவசியம் இல்ல; ஆனா அவமானப்படுத்தாம இருந்தா அதுவே போதும்,'' என்றான்.
''இனிமே அப்படிச் செய்ய மாட்டேன் தம்பி... உனக்கு இந்தப் பச்சிலை மருந்து எப்படிச் கெடைச்சது?''
''ஐயா... எல்லாமே கடவுள் குடுக்கறதுதாங்க. சோறும் சரி, மருந்தும் சரி, நீரும் சரி, நெருப்பும் சரி, எல்லாமே கடவுள் குடுக்கறதுதாங்க, எனக்கும் சாமிதான் குடுத்துச்சு, இதுக்கும்மேல என்கிட்ட எதையும் கேக்காதீங்க, நான் வீட்டுக்குப் போறேன், இந்த மருந்தை எடுத்துவர பச்சைமலைக்குப் போய் வந்தேன், நான் போயி ரொம்ப நேரம் ஆச்சு! என் சித்தி தூங்கிட்டு இருக்காங்க... கண்விழித்துப் பார்த்தா என்னக் காணலைன்னு தேடுவாங்க... நான் வர்றேன்,'' முகுந்தன் அங்கிருந்து வீட்டிற்குச் சென்றான்.
கதவு உள்ளே தாளிட்டு இருந்தோம், அந்தக் கதவைத் திறந்துக் கொண்டு வீட்டிற்குள் முகுந்தன் எப்படி வந்தான்? அவன் பச்சமலைக்குச் சென்று மருந்து கொண்டு வந்ததாகச் சொன்னான். பச்சமலை எங்கே இருக்கிறது? சுசீந்திரனின் தந்தைக்கு இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை என்றாலும் சுசீந்திரனைக் குணமாக்கியத்தில் முகுந்தன் மீது அன்பும் பாசமும் அந்த குடும்பத்தில் உள்ளோர் அனைவருக்கும் ஏற்பட்டுவிட்டது.
-21 தொடரும்.
