தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாயமோதிரம் (22) - இருகூர் இளவரசன்

மாயமோதிரம் (22) - இருகூர் இளவரசன்

மாயமோதிரம் (22) - இருகூர் இளவரசன்


PUBLISHED ON : ஜன 27, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 27, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: முகுந்தனின் மாயமோதிரத்தை பிடுங்க நினைத்தனர் சுவாமிஜியும், ராஜமாணிக்கமும். இனி-

கேரளாவிலிருந்து குட்டப்பன் நம்பூதிரி வந்திருந்தார். உடலில் மேல் சட்டை இல்லாமல், சந்தனம் பூசிய நெஞ்சோடும், நெற்றியோடும் வேட்டி மட்டுமே கட்டியிருந்தார். தலைக்குப் பின் குடுமிபோல் முடியைச் சுருட்டிக் கட்டியிருந்தார். சிவந்த நிறம், தடிமனான உடல், அவருக்குப் பக்கத்தில் சுவாமிஜியும், லாரி ராஜமாணிக்கமும் இருந்தனர்.

''பெயர் முகுந்தன்; வயது பத்து அல்லது பனிரெண்டுதான் இருக்கும். அவன் கையில் ஒரு அதிசய மோதிரம் இருக்குது! அது சக்தி வாய்ந்த மோதிரம் என்றே நினைக்கிறேன். ஏதோ மந்திரம் போல் உச்சரிக்கிறான்; பிறகு அவன் நினைப்பது நடக்கிறது,'' போன்ற விளக்கங்களை ராஜ மாணிக்கமும், சுவாமிஜியும் நம்பூதிரியிடம் சொன்னார். அவர்கள் சொல்வதை நம்பூதிரியால் நம்பமுடியவில்லை.

''இது போன்ற அசாத்தியமான செயல்களைச் செய்ய குட்டிச்சாத்தானின் உதவியால் முடியும். நான் குட்டிச்சாத்தானைக் கொண்டுதான் செய்து வருகிறேன்! அதுவும், நான் பயன்படுத்துவது நாய், பூனை,ஆடு,மாடு போன்றவற்றைதான். குட்டிச் சாத்தனை நாய் மீது ஏவி விட்டு, இக்காரியத்தைச் செய்து வா! என்று ஆணையிட்டால், அது செய்து விடும். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், அதையும் தாண்டிய சக்தியாக இருக்குமோ என்னவோ?'' நம்பூதிரி சந்தேகமாகக் கேட்டார்.

''அப்படியானால் உங்களைப் போல் யாரேனும் அந்தச் சிறுவன் மோதிரத்தில் ஏதேனும் சக்தியை ஏவி விட்டிருக்கக் கூடுமோ,'' என்கிற கேள்வியை சுவாமிஜி கேட்டார்.

''இருக்கலாம்!'' என்றார் நம்பூதிரி.

''ஆனால், அந்தச் சிறுவன் நற்காரியங்களுக்காவும், உயிர்களைக் காப்பாற்றவுமான நன்மைகளுக்காக மட்டுமே அதைப் பயன்படுத்துகிறான்,'' என்றான் ராஜமாணிக்கம்.

''எதுவானாலும் சரி, நம்பூதிரி அவர்களுக்கு நான் பல லட்சரூபாய் சன்மானம் அளிக்கிறேன். அந்த மோதிரம் என் கைக்கு வந்தாக வேண்டும். அதைக் கொண்டு பல வேலைகளைச் செய்ய நான் காத்துக் கொண்டிருக்கிறேன்,'' என்றார் சுவாமிஜி.

ராஜ மாணிக்கம் அந்த மோதிரம் தனக்கு வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு கஷ்டங்களையும் அனுபவித்து முகுந்தனைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறான். ஆனால், அந்த மோதிரத்தை சுவாமிஜி தனக்கு வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கிறார் என்பதை தற்போது அறிந்து கொண்டான். இந்த விஷயத்தில் ராஜமாணிக்கம் சற்று வருத்தத்திற்கு உள்ளானான்.

குட்டிச்சாத்தனை ஏவி விட்டால் எப்படியும் அது சென்று சொன்னதைச் செய்துவிடும். சுவாமிஜியிடம் லட்சக் கணக்கில் பணத்தை வாங்கிச் செல்லலாம் என தீர்மானித்தார் நம்பூதிரி.

''அந்தப் பையனிடமிருக்கும் மோதிரத்தைக் கொண்டு வந்து உன்னிடம் சேர்ந்தால் எனக்கு எத்தனை லட்சங்கள் பணமாகத் தருவாய்?'' நம்பூதிரி கேட்டார்.

''இருபத்தி ஐந்து லட்சம் தருகிறேன்.''

''போதாது... குறைந்தது ஐம்பது லட்சங்களாவது தரவேண்டும்!''

சுவாமிஜி யோசித்தார்.

அந்த மோதிரம் மட்டும் தனக்குக் கிடைத்து விட்டால் பல கோடி ரூபாய்களைச் சம்பாதிக்கலாம். அதனால், நம்பூதிரி கேட்கும் ஐம்பது லட்சம் பணத்தைக் கொடுத்து விடலாம் என, நினைத்தார் சுவாமிஜி.

''சரி... தாங்கள் கேட்பதைக் தருகிறேன்!''

''இப்போதே கொடுத்து விடுங்கள்!''

''மன்னிக்கவும். காரியம் முடிந்ததும் கையோடு பணம்!''

''சரி! பெரும் பூஜையொன்றை நான் செய்ய வேண்டும், உங்கள் ஆசிரமத்தில் பட்டுப் போன மரம் ஏதாவது இருக்கிறதா?''

''ஒரு மரம் தழைக்காமலும், காய்க்காமலும் இருக்கிறது. அது எதற்கு?''

''அந்த மரத்தின் அடியில் பூஜையைத் தொடங்க வேண்டும். பூஜைக்கு மனிதனின் மண்டை ஓடும், கை எலும்புகளும் தேவை. நெருப்பைப் பற்ற வைத்து அதைத் சுற்றிலும் இருபத்தி ஒரு மண்பானைகளை வைக்க வேண்டும். அதனுள் நெல்மணிகளை நிரப்பி அகல்விளக்குகள் வைக்க வேண்டும். ஒரு காலி பானையும், அதனுள் நூல் சுற்றிய தேங்காயையும் வைத்துப் பூஜை செய்ய, உடனே ஏற்பாடு செய்யுங்கள். இன்று இரவு நடு சாமத்தில் பூஜை தொடங்கணும்,'' என்றார் நம்பூதிரி.

சுவாமிஜி நம்பூதிரி சொன்னவைகளையும் அங்கிருந்த ஒரு சிஷ்யனிடம் சொல்லி, ஏற்பாடு செய்யச் சொன்னார்.

முகுந்தனை அழைத்துக்கொண்டு வள்ளி யம்மாளும், தந்தை கந்தசாமியும் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றனர். முகுந்தனுக்கு ஏதோ ஒரு சக்கி வந்திருப்பதாக பலரும் கூறுவதை கந்தசாமியும், வள்ளியம்மாளும் கேட்டுப் பெருமைப்பட்டு கொண்டாலும், தங்களுக்கு இருக்கும் ஒரே மகன் முகுந்தனுக்கு எந்த திருஷ்டியும் பட்டுவிடக்கூடாது என்றும் எந்தவித ஆபத்தும் வந்து விடக்கூடாது, என்றும் நினைத்தனர்.

அன்று பார்த்தசாரதி கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதே நேரம் எங்கிருந்தோ வந்திருந்த யானை ஒன்றும் கோவிலுக்குள் இருந்தது. யானைப் பாகன் யானையின் அருகில் நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்கச் சொல்லிக் கொண்டிருந்தான். சில பக்தர்கள் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு காசு கொடுத்தனர். சிலர் வாழைப் பழம் கொடுத்தனர். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக் கொடுத்துக் கொண்டிருக்கையில் உடைந்த தேங்காயினுள் உருண்டையான கூழாங்கல் ஒன்றை வைத்து மூடியபடி யானைக்குக் கொடுத்து விட்டான் ஒருவன்.

தேங்காய் என்று நம்பி அதைக் கடித்த யானைக்கு, அதனுள் இருக்கும் கல் யானையின் பல்லைப் பதம் பார்த்து விட்டது. அதுவரையிலும் அமைதியாக நின்றிருந்த யானை திடீரென்று கூட்டத்தினரை விரட்டத் தொடங்கியது. அமைதியாக நின்றிருந்த பக்தர்கள் கூட்டம் யானையின் ஆவேசம் கண்டு அங்கு இங்குமாய் ஓடி பதுங்கினர்.

முகுந்தனும், கந்தசாமியும், வள்ளியம்மாளும் அதே போல ஒரு கல்தூண் அருகில் பதுங்கி நின்றனர். இரண்டு வயதுச் சிறுமி அழுதபடி யானையின் அருகில் மிரண்டு போய்க் கத்திக் கொண்டிருந்தாள். சிறுமியும் தாயும், தந்தையும் பதறித் துடித்தனர்.

''கடவுளே... என் குழந்தையைக் காப்பாற்று காப்பாற்று...'' என்று கத்தினர். குழந்தையை எப்படியாவது எடுக்கலாம் என நினைத்த குழந்தையின் தந்தை மெதுவாகக் குழந்தையின் அருகில் செல்ல, யானை துதிக்கையை உயர்த்திக் கொண்டு துரத்தியது.

குழந்தையை யானை வட்டமடிக்கத் துவங்கியது. யானைப் பாகன் யானையருகே சென்றான் யானை விரட்டியது.

''யானைக்கு தவறுதலா யாராச்சும் ஏதாச்சும் கொடுத்தீங்களா... தயவு செய்து சொல்லிடுங்க.. என்னிக்கும் இந்த யானை இதுமாதிரி நடந்துக் கிட்டதே இல்லை,'' என்று யானைப் பாகன் ஆங்காங்கு மறைந்து நிற்கும் கூட்டத்தினரைப் பார்த்துக் கேட்டான்.

யாரும் பதில் சொல்லவில்லை.

குழந்தையின் தாய் அழுது மயக்கமாகிக் கீழே விழுந்தாள். அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளியச் செய்தனர்.

நிலைமையைப் புரிந்து கொண்ட முகுந்தன் எப்படியும் குழந்தையைக் காப்பாற்றி தாயிடம் ஒப்படைக்க நினைத்தான்.

தன் விழிகளை மூடிக் கொண்டான். ''மாய மோதிரமே... இந்தக் குழந்தையைக் காப்பாற்றி தாயிடம் ஒப்படைக்க, நீதான் எனக்கு வழி காட்ட வேண்டும்,'' என்று சொன்னான்.

அதன்பிறகு யானை இருக்கும் இடம் நோக்கி முகுந்தன் மெதுவாக நடந்தான்.

''முகுந்தா போகாதே... போகாதே...'' என்று வள்ளியம்மாளும், கந்தசாமியும் மாறி மாறிக் கத்தினர்.

முகுந்தன் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. யானை முகுந்தனை அருகில் வர விடாமல் முந்திக் கொண்டு வந்தது. வாய் பிளந்து பெரிதாகப் பிளிறியது. அப்போது யானையின் வாய் திறக்க பல்லுக்கு இடையில் ஒரு கல் சிக்கிக் கொண்டிருப்பதை முகுந்தன் பார்த்து விட்டான்.

அந்தக் கல்லை யானையின் வாயிலிருந்து எப்படி எடுப்பது? அதை எடுத்தால்தான் யானையின் கோபம் தணியும். குழந்தையைக் காப்பாற்றினால் மட்டும் போதாது. யானையின் பரிதாப நிலையையும், சீர் செய்ய வேண்டும் என அக்கணமே நினைத்தான்.

யானை முன் கும்பிட்டு நின்றான் முகுந்தன்.

''மாயமோதிரமே... யானையின் பற்களில் சிக்கியிருக்கும் அந்தக் கல்லை அகற்றும் வரையில், யானை வாய் திறந்து தன்னை மறந்து நிற்கச் செய்வாயாக!'' என்றான்.

யானையின் கண்களுக்கு முகுந்தன் கடவுளைப் போல் தோற்றமளித்தான். யானை துதிக்கையைக் தூக்கி வாய்பிளந்து நிற்க, யானைப் பாகன் கையில் வைத்திருந்து குச்சியைப் பிடித்து இழுத்து சட்டென யானையில் வாய்க்குள் சிக்கிக் கிடந்த கல்லை ஒரு குத்துக் குத்தினான். கல் வெளியே வந்தது. உடனே யானையின் அருகில் இருந்த குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து தாயிடம் கொடுத்தான்.

''ஆண்டவா...!'' என்று அந்தத் தாய் வணங்கி குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டாள்.

யானை பழையபடி வாயை மூடிக் கொண்டு துதிக்கையை ஆட்டியது. இப்போது யானைக்கு எந்த இடைஞ்சலும் இல்லாததால் யானை சமாதானம் ஆகியது. பிறகு அந்த யானை பழையபடி ஆசி கொடுக்கும், இடத்திற்கு சென்று நின்று விட்டது.

யானைப் பாகனில் இருந்து, அங்கே கூடி இருந்த மக்கள் அனைவரும் முகுந்தனைப் பாராட்டினர். ''இத்தனை தைரியம் இந்தச் சின்ன வயதில் முகுந்தனுக்கு எப்படி வந்தது? பிள்ளையென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்,'' என்று பாராட்டினர்.

முகுந்தனின் தந்தை கந்தசாமியும், வள்ளியம்மாளும் முகுந்தனை அணைத்துக் கொண்டனர்.

''யானையிடம் இவ்வளவு தைரியத்தோடு சென்றாயே! அது உன்னை ஏதாவது செய்திருந்தால் எங்களுக்குப் பிள்ளை இல்லாமல் போயிருக்குமே,'' என்று கந்தசாமி கண் கலங்கினார்.

''யானையின் வாயில் ஒரு கல் சிக்கிக் கொண்டிருந்தது. அதை நான் கவனித்தேன். அது யானைக்கு பெரும் இடைஞ்சலாய் இருந்ததால் தன் நிலை தடுமாறி விட்டது. குழந்தையைக் கொல்ல வேண்டும் என்றோ, இங்கு கூடி இருப்பவர்களைக் கொல்ல வேண்டும் என்றோ, யானை நினைக்க வில்லை. அப்படி நினைத்திருந்தால் குழந்தையைச் சுற்றிச் சுற்றி நடந்து வந்துக் கொண்டிருக்காது. இதை உணர்ந்துதான் யானையின் வாய்க்குள் இருந்த கல்லை அகற்றினேன். அதன் பிறகு யானை சமாதனமாகி விட்டது என்று,'' அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் புரியும்படிச் சொன்னான் முகுந்தன்.

கூட்டத்தில் கூடியிருந்த ஒரு வாலிபன் முகுந்தன் முன் வந்து நின்றான். ''தேங்காய் மூடிக்குள் கல்லை வைத்து, இன்னொரு தேங்காய் மூடியால் மூடி யானைக்குத் தெரியாமல் கொடுத்தது நான்தான். அப்படிக் கொடுத்தால் அதை துப்பிவிடுமா? தின்று விடுமா என்பதை, சோதிப்பதற்காக இந்தத் தவறைச் செய்தேன்,'' என்றான் அந்த வாலிபன்.

''மிருகங்கள் பாவம், அதை ஏமாற்றுவது அதைவிடப் பாவம், இனிமேல் இவ்வாறு செய்யாதே!

''யானைக்கு கூரிய கண்களும், பழிவாங்கும் எண்ணமும் உண்டு. அதனால் யானையின் கண்களுக்குப் படாமல் சென்றுவிடு,'' என்று முகுந்தனின் தந்தை கந்தசாமி சொன்னார்.

எப்படியோ முகுந்தனால் குழந்தை காப்பாற்றபட்டதோடு யானை மூலமாக நடக்க விருந்த பெரிய விபரீதமும் காப்பாற்றப் பட்டுவிட்டது. முகுந்தன் பெருமாளைக் கும்பிட்டுக் கொண்டு அங்கிருந்து வீடுநோக்கிப் புறப்பட்டான்.

கந்தசாமி முகுந்தனிடம் திரும்பவும் கேட்டார்.

''முகுந்தா, எனக்குப் பிள்ளையாக நீ பிறந்ததை நினைத்து நான் ரொம்பவும் பெருமைப்படுகிறேன். எப்போதும் பயந்த படியும், சோர்ந்தும், அழுதும் இருப்பாய். ஆனால், சில நாட்களாக உன்னிடம் மாற்றம் தெரிகிறது. ரொம்பவும் தைரியசாலியாக ஆகிவிட்டாய். இது எப்படி?'' என கேட்டார்.

''அப்பா... கடவுள் நம்மிடம் இருக்கிறார். கடவுளை வேண்டிக்கொண்டு நாம் நற்காரியங்கள் செய்வோமானால், அந்தக் காரியங்களை கடவுளே செய்து தருகிறார். நம்மிடம் எதுவும் இல்லைப்பா,'' என ஒரு ஞானியைப் போல் பதிலளித்தான் முகுந்தன்.

''பிற்காலத்தில் சிறப்பாக வாழ்வாய் நீ... பேரும் புகழும் எடுத்து வாழ்வாய்,'' என வள்ளியம்மாளும் சொன்னாள்.

தன்னைத் திட்டியும், சரியாக சாப்பாடு கொடுக்காமல், படிக்கவும் விடாமல் சபித்துக் கொண்டிருந்த சித்தி தற்போது, தன்னை வாழ்த்தவும், பெற்ற பிள்ளையைப் போல் பாசம் காட்டி வளர்ப்பதும் முகுந்தனுக்குப் பெருமையாகவும், அதே நேரம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

அன்று இரவு... சுவாமியின் ஆசிரமத்து வளாகத்திற்குள் காணப்பட்ட ஒரு பட்டுப்போன மரத்தின் கீழ் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு அதன் மீது அமர்ந்திருந்தார் நம்பூதிரி குட்டப்பனார். அருகில் ராஜ மாணிக்கமும், சுவாமிஜியும் நின்றிருந்தார். ஓம குண்டத்தில் நெருப்பு எரிந்து புகையைக் கக்கிக் கொண்டிருந்தது. பூஜை சாமான்கள் மண்டையோடுகள் உட்பட அனைத்தும் நம்பூதிரியின் எதிரில் இருந்தது.

''ஏய் குட்டிச்சாத்தானே... என் முன் வந்து நின்றுவிடு,'' எனக் கத்தினார் நம்பூதிரி.

-தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us