தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நடிப்பு!

நடிப்பு!

நடிப்பு!


PUBLISHED ON : ஜன 27, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 27, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரம்பி என்ற நாட்டை ஆண்ட ராஜசிம்மன் ஆட்சியில், நகரக்காவல் அதிகாரியாக சதுர்வேதி என்பவன் இருந்தான். தன்னை யாராவது புகழ்ந்து விட்டால் போதும், அம்மன்னனின் உச்சி குளிர்ந்து விடும். அதனால் சதுர்வேதி சமயம் கிடைத்த போதெல்லாம், மன்னனைப் புகழ்ந்து அவனது நெருங்கிய நண்பனாக ஆகிவிட்டான்.

பணத்தாசை பிடித்தவன் சதுர்வேதி. அதனால் நகரத்து வியாபாரிகளிடமும், பணக்காரர்களிடமும் தான் அரசனின் நெருங்கிய நண்பன் எனக் கூறி அவர்களை மிரட்டி, அவ்வப்போது பணம் பறித்து வந்தான். தன் செல்வாக்கைப் பயன்படுத்தி லஞ்சம் வாங்கிக் கொண்டு, குற்றவாளிகளை விடுவிக்க ஏற்பாடு செய்து வந்தான். அரசனுக்கு அவன் நண்பன் என்ற காரணத்தால் அவனை எதிர்த்துப் புகார் செய்ய பயப்பட்டனர்.

ஒருமுறை தசராக் கொண்டாட்ட சமயம், நாடகங்கள் நடத்தப் பலர் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். நாடகங்களில் நடிப்பவர்களில் சில அரசாங்க ஊழியர்களும் சதுர்வேதியும் இருந்தனர். மன்னனைப் போல வேடம் பூண்டு நடித்தான் சதுர்வேதி.

நாடகம் முடிந்ததும், ''உன் நடிப்பு பிரமாதம். எப்படி என்னைப் போல அவ்வளவு தத்ரூபமாக உன்னால் நடிக்க முடிந்தது?'' என்று கேட்டான் மன்னன்.

''அரசே! எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடிக்க வேண்டுமானால் உண்மையான அந்த மனிதர்களுடன் நெருங்கி பழகவேண்டும். நான் தங்களுடன் நெருங்கிப் பழகியதால்தான் அவ்வாறு நடிக்க முடிந்தது,'' என்றான் சதுர்வேதி.

அதுகேட்டு மன்னன் மகிழ்ந்து போய் தான் அணிந்திருந்த முத்துமாலையை கழற்றி அவனுக்குப் பரிசாக அளித்தார்.

இதை மன்னனின் அருகில் இருந்த மந்திரி, பார்த்துக் கொண்டு இருந்தார்.

மறுநாள் இன்னொரு நாடகத்தில் சதுர்வேதி, பக்காத் திருடனாக நடித்தான். மன்னன் அதனையும் கண்டு சதுர்வேதி தத்ரூபமாக ஒரு பக்காத் திருடனைப் போல நடித்தது கண்டு வியந்தான். நாடக முடிவில் மன்னன் சதுர்வேதியை தன்னருகே அழைத்து, ''உன்னால் ஒரு பக்காத் திருடனைப் போல எப்படி நடிக்க முடிந்தது?'' என்று கேட்டார்.

சதுர்வேதி பதில் சொல்ல முடியாது திகைத்தபோது மந்திரி அந்த சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு, '' தங்களிடம் நெருங்கிப் பழகி மன்னனைப் போல இவன் நடித்ததுபோல் ஒரு பக்காத் திருடனிடமும் இவன் நெருங்கிப் பழகி, அப்படியே நடித்திருக்கிறான். அவ்வளவுதான்,'' என்றான்.

அது கேட்டு மன்னனுக்கு சதுர்வேதி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவன் சதுர்வேதியை கூர்ந்து பார்க்கவே, சதுர்வேதி பதில் சொல்லாமல் தலைகுனிந்து நின்றான்.

மன்னன் உடனே, சதுர்வேதி பற்றி மக்களிடம் விசாரித்தார். அவன் பணம் வாங்கிக் கொண்டு பல குற்றவாளிகளை விடுவிடுக்கச் செய்தது அவருக்குத் தெரிந்தது. அவனது சகல அக்கிரமங்களும் வெளிப்பட்டது. சதுர்வேதியை சிறைப்படுத்தி அவனுக்கு கடுமையான தண்டனையை தந்தார் மன்னன்.

பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டே ஆகவேண்டும்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us