தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பயிற்சியால் வந்த பதக்கம்!

பயிற்சியால் வந்த பதக்கம்!

பயிற்சியால் வந்த பதக்கம்!


PUBLISHED ON : டிச 14, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 14, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ளது சைல்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி. இது, 1971ல், செவன் டாலர்ஸ் பள்ளி என்ற பெயரில் இயங்கிய போது, 8ம் வகுப்பு படித்தேன். அப்போது, கல்வி மண்டல அளவில், பள்ளிகளுக்கு இடையே கட்டுரைப் போட்டி நடந்தது.

நன்றாக தமிழ் படிப்பதுடன், வடிவமாக எழுதுவதாலும், போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றேன். கட்டுரைக்கு, 'நுால்நிலையம்' என்ற தலைப்பு கொடுத்தனர். வகுப்பு முடிந்ததும், கட்டுரை எழுதி பயிற்சி பெற வேண்டும். கிட்டத்தட்ட, 40 முறை திரும்பத் திரும்ப எழுதியிருப்பேன்.

அயராமல் பயிற்சி எடுத்ததால் போட்டியில், சிறப்பாக எழுதினேன். முடிவு அறிந்த தலைமை ஆசிரியை மெர்லின் மேரி, 'கட்டுரைப் போட்டியில், நம் பள்ளி முதலிடம் பிடித்துள்ளது; உனக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது...' என்று என்னை பாராட்டினார்.

மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனேன்.

மறுநாள் பிரார்த்தனைக் கூட்டத்தில், தங்கப்பதக்கத்தை என் தாவணியில் பதித்தனர். மிகவும் பெருமையாக உணர்ந்தேன். பின், 'பதக்கத்தை பெற்றோரிடம் காட்டி, திரும்ப எடுத்து வந்து விடு... பள்ளியில் தான் வைக்க வேண்டும்...' என்றனர். என் மகிழ்ச்சி மறைந்து, அழுகையாக மாறியது. அப்பாவிடம் விஷயத்தை கூறினேன்.

மறுநாள் பள்ளிக்கு வந்தவர், 'முயற்சி செய்தவளுக்கு பரிசை கொடுப்பது தான் முறையானது; விளையாட்டு போட்டிகளில், குழுவாக பங்கேற்றிருந்தால், அந்த கேடயத்தை, பள்ளியில் வைப்பது முறை...' என, எடுத்து கூறினார். பள்ளி நிர்வாகம் ஏற்றது.

எனக்கு, 61 வயதாகிறது. வாழ்வில், விதம் விதமான தங்க நகைகள் அணிந்துள்ள போதிலும், 13 வயதில் கிடைத்த, பதக்கத்துக்கு ஈடு எதுவும் இல்லை; அதை பாதுகாத்து வருகிறேன்.

- எம்.எஸ்.வசந்தா, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us