PUBLISHED ON : ஜூன் 14, 2019

ஓசியானா கண்டம், நியூசிலாந்து, மஸ்சே பல்கலைகழக பேராசிரியர், வெல்மா ஸ்டோன் ஹவுஸ் தலைமையிலான குழு, நினைவுத் திறனுக்கும், மீன் உணவுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதற்காக, 175 பேரின் நினைவுத் திறன், அறிவுக் கூர்மை போன்றவற்றை மதிப்பீடு செய்தனர்.
இவர்களுக்கு, வஞ்சிரம், இறால் உள்ளிட்ட கடல் மீன் உணவுகளை தொடர்ந்து, ஆறு மாதங்கள் கொடுத்தனர்.
பின், அவர்களின் நினைவுத் திறன், அறிவுக் கூர்மையை பரிசோதித்தனர். நினைவுத் திறன், 15 சதவீதம் அதிகரித்திருந்தது. மீனில் உள்ள, 'ஒமேகா - 3' என்ற கொழுப்பு அமிலம், நினைவுத் திறனை அதிகரிக்க உதவுவதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அமிலம், மனித உடலில் இயல்பாக சுரக்காது; மீன்களை சாப்பிடுவதன் மூலமே சுரக்கும். இது, மூளை செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம்.
'மூளை, சுறுசுறுப்பாக இயங்க உதவுவதுடன் மனநலத்தையும் பாதுகாக்கிறது மீன் உணவு...' என, பேராசிரியர் ஸ்டோன் ஹவுஸ் தெரிவித்துள்ளார்.
