PUBLISHED ON : ஜூன் 14, 2019

ராமு, என் நண்பன். ஒரு நாள், அவனைத் தேடிப் போனேன். ஒரு மரக்கிளையில், 'புல்அப்ஸ்' எடுத்துக் கொண்டிருந்தான். என்னைக் கண்டதும், கீழே குதித்தான்.
அப்போது, அவ்வழியே, 10 வயதுச் சிறுமி சென்றாள். சிரித்த முகம்; சிவந்த மேனி; சின்ன மூக்கு. நடையே அழகாக இருந்தது. நான் வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ராமு அவளை ஏறெடுத்தும் பாராமல், தலை குனிந்து கொண்டிருந்தான்.
அவன் செய்கை, திகைப்பூட்டியது.
''ஏன்டா... நீ பெண்களோடு பேசியதே இல்லையா...'' என்று, கேட்டேன்.
'' முட்டாள்கள்...'' என்றான்.
''ஏன் இப்படி வெறுக்கிறாய்...'' என்று கேட்டேன்.
ராமு, ஒரு கூழாங்கல்லைக் காலால் எத்தி வீசினான். எனக்கு அவன் உள்ளத்தைப் புரிந்து கொள்ள தெரியும். நான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல், திசை திருப்ப முயன்றான்.
அருகே இருந்த சுவர் மீது தாவி உட்கார்ந்து, கால்களை வீசியபடியே, ''கம் சாப்பிட்டிருக்கிறாயா...'' என்றான்.
''கம்மா... அது என்ன, கம்... கோ...''
ராமுவின் வாயிலிருந்து, ஒரு பலுான் உருவாயிற்று.
''பப்பிள் கம்...'' என்றான் குளறியபடியே.
''உன் தமாஷ்களை ரசிக்கிறேன்; நான் கேட்டதற்குப் பதில் சொல்! தக்க பதில் கூறா விடில், பெண்களைக் கண்டு பயப்படுவதை ஒப்புக் கொள்...'' என்றேன்.
என்னை ஒரு மாதிரியாகப் பார்த்த ராமு, ''இல்லையப்பா... பெண்கள் சிரிப்புக்கு அர்த்தமே இல்லை; தோள்பட்டையில் முகவாயை இடித்துக் கொண்டு, கன்னத்தைச் சிவப்பாக்கிக் கொள்ளும் அவர்களிடமா எனக்குப் பயம்... ப்பூ... முட்டாள்கள்...'' என்றான்.
பின், பெண்கள் செய்யும் சேஷ்டைகளை, பல கோணங்களில் பாவம் பிடித்துக் காட்டியபடியே, ''பெண்கள் தாஜா செய்து, காரியம் சாதித்துக் கொள்ளுவதில் சாமர்த்தர்கள். அதிகாரம் செய்து, அடக்கி ஆள விருப்பமுள்ளவர்கள்...'' என்றபடி, அருகிலிருந்த தபால் பெட்டியின் நாக்கை ஆட்டி, விஷமம் செய்தான்.
அவன் மறுபடியும், அந்த விஷயத்தை திசை திரும்ப விரும்புகிறான் என்பதை புரிந்து கொண்டேன். கால்களை அகட்டி, குனிந்து, அந்த இடைவெளி வழியாக, என்னைப் பார்த்து, ''நீ சூடா சாப்பிட்டிருக்கிறாயா...'' என்றான்.
''சூடாவா... நான் எதையுமே சூடாகத்தான் சாப்பிடுவேன்...'' என்றேன்.
''சூடா என்பது, மும்பை பக்கத்தில் விற்கப்படும், சுவையான மிக்சருக்குப் பெயர்...'' என்று சிரித்தான்.
அப்போது, புதிதாக கட்டும், ஒரு வீட்டின் முன்னால் நடந்து கொண்டிருந்தோம். அங்கு, அப்போதுதான் பூசிய சிமென்ட் தரை மீது, ஒரு தகர டப்பாவை, நெற்றியில் நிற்க வைக்க முயன்றபடி, ராமு தள்ளாடி நடந்தான். அவன் கால்கள் சிமென்ட் தரையில், அச்சு அச்சாகப் பதிந்தன.
அப்படி நடந்தபடியே, ''பொறுமையை இழக்கும்படி, பரிகாசம் செய்வதில், பலே கெட்டிக்காரிகள். பெண்கள் நம்மை அடிக்கலாம்; நாம் திருப்பி அடிக்க முடியாது... நியாயமற்றவர்கள்; அவர்களைக் கண்டாலே எனக்கு ஆத்திரம்...'' என்றான்.
அப்போது, ராமுவின் முகம் மின்மினிப் பூச்சியாக மாறியது. அந்த புத்தம் புதிய வீட்டின் இரும்பு கதவில் பூசிய காயாத சிவப்பு வர்ணத்தில், விரல்களைப் பதித்து, கோடு கிழித்தபடியே ஓடினான்.
பின், ''நீச்சல் குளத்தில் மட்டும் ஏனோ, அவர்கள் என்னை விட, நன்றாக நீந்துகின்றனர்...'' என்ற ராமு தலைகீழாக, சிரசாசனம் செய்வதைப் போல நின்றான். கால்களை இப்படியும், அப்படியும் ஆட்டியபடி, ''கட... கட... சுடு... சுடு... நடுவிலே பள்ளம்; அது என்ன...'' என்றான்.
''ஆட்டுக் கல்லுரல்...'' என்றேன்.
அவன் வெறுப்புடன், ''பெண்கள் அடுத்த நிமிஷம் என்ன செய்வர் என்று யாராலும் சொல்லவே முடியாது...'' என்றான்.
நான் பேசாதிருந்தேன்.
''பள்ளி கூடத்தில், பெண்கள் நேர்மையானவர்கள்; பையன்கள் தவறிழைக்கக் கூடியவர்கள் என்பது ஆசிரியரின் எண்ணம்...'' என, அலுத்துக் கொண்டான்.
இப்போது, புல் தரையில் குப்புறப்படுத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் ஒரு மரத்தின் மேல் துாக்கி வைத்துக் கொண்டிருந்தான்.
''மரத்தில் ஏறுவேன்; மாங்காயைப் பறிப்பேன்... என்று குதிப்பர். அத்தனை பெண்களையும் மரத்திலேற்றி வேடிக்கை பார்க்க வேண்டும்... '' என்று, கொட்டி தீர்த்தான்.
அமைதியாக, அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த நான், ''அது சரி... உன் அம்மாவைப் பற்றி, என்ன சொல்லுகிறாய்... அவங்களும் பெண் தானே...'' என்றேன்.
ராமுவின் கண்கள் பனித்தன. அவன், ''அம்மா... இந்த பெண் வர்க்கத்தைச் சேர்ந்தவளே அல்ல... அம்மா எப்போதுமே அம்மா தான்... அவள் தெய்வம்...'' என்றானே பார்க்கலாம்.
குட்டீஸ்... ஆண், பெண் பேதமின்றி அனைவரும் சமமானவர்கள் என்பதை உணர்ந்து பழகுங்கள்.
- வாண்டுமாமா
