PUBLISHED ON : பிப் 26, 2022

கடும் வறட்சியான கோடைக்காலம்.
மான் ஒன்று தாகத்தால், காட்டில் தண்ணீர் தேடி அலைந்தது.
சிறிது துாரத்தில், குட்டையில் கொஞ்சம் தண்ணீர் இருப்பதை பார்த்தது.
ஆசை தீர தண்ணீரை குடித்து, சோர்வு நீங்கி திரும்பியது.
அப்போது, எதிரே நின்று கொண்டிருந்தது புலி.
அதிர்ச்சியில், 'எனக்கு கடும் தாகம்... அதனால்தான் தண்ணீர் குடிக்க வந்தேன்... தயவு செய்து என்னை விட்டுவிடு... இனி இந்த பக்கம் வர மாட்டேன்...' என்று கெஞ்சியது மான்.
உறுமலுடன், 'எனக்கு பசி இல்லை... அதனால் இப்போது உன்னை உண்ண வேண்டிய அவசியமில்லை. ஆனால், என் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்குள் நுழைந்தது தவறு...' என பிடிக்கப் பாய்ந்தது புலி.
சற்றும் தாமதிக்காமல் உயிரை காப்பாற்ற வேகமாக ஓடியது மான்.
அதே வேகத்தில் துரத்தியது புலி.
காட்டை தாண்டி, சாலையில் இரண்டும் ஓடின.
சாலையில் துப்பாக்கியுடன் காத்திருந்தனர் வேடர்கள்.
புலியை பார்த்ததும் சரமாரியாக சுட்டனர்.
தப்பித்தோம், பிழைத்தோம் என, இரண்டும் காட்டிற்குள் பாய்ந்து ஓடி மறைந்தன.
குழந்தைகளே... தேவையற்ற பிடிவாதத்தால் ஆபத்தில் சிக்கிய புலிபோல் செயல்படக்கூடாது. விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.
- கீதா சீனிவாசன்
