தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மினி தொடர் (2) - கார்வெர்!

மினி தொடர் (2) - கார்வெர்!

மினி தொடர் (2) - கார்வெர்!


PUBLISHED ON : ஜூலை 22, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 22, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கார்வெர் தன் இன மக்களுக்கு ஏதாவது சேவை செய்ய வேண்டுமென்று நீண்டகாலமாக ஆசைப்பட்டு வந்தார். நிறைய சம்பளம் கிடைத்து வந்த தன் ஆராய்ச்சிப் பணியை விட்டு விட்டு, மிகவும் குறைந்த சம்பளம் கிடைக்கும் அந்த ஆசிரியர் பணியை விரும்பி ஏற்றுக் கொண்டார்.

அந்தப் பாடசாலை எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய இரண்டு பழைய கட்டடங்களில் இயங்கி வந்தது. அங்கு படிக்க வந்த நீக்ரோ இன விவசாயிகள் ஏழைகளாக இருந்து வந்ததனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு படிக்கக் கூடத் தெரியாமலிருந்தது. அந்தப் பாடசாலையில் டிராக்டர்கள், டோஜர்கள் போன்ற எந்த ஒரு நவீன இயந்திரமும் இல்லாமலிருந்தது.

அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் தொடர்ந்து பருத்தியை மட்டும் பயிரிட்டு வந்தனர். நீண்ட காலமாக தொடர்ந்து பயிரிடப்பட்டு வந்த பருத்திச் செடிகள், நிலத்திலிருந்த சத்து அனைத்தையும் உறிஞ்சி விட்டதால் அந்த நிலம் மலட்டுத் தன்மையைப் பெற்று விட்டிருந்தது. ஒவ்வொரு வருடமும் பருத்தியைப் பயிரிட உழைப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. ஆனால், உற்பத்தி குறைந்து வந்தது.

மேலும் பருத்திச் செடிகளை பல விதமான பூச்சிகள் தாக்கி அவற்றை அழித்து வந்தன. நீர்ப்பாசன வசதிகள் இல்லாத காரணத்தினால், பயிர்கள் வளர்வதற்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. நிலங்களின் மேல் இருந்த பயிர்கள் நன்கு வளர்வதற்கு அவசியத் தேவையான செழிப்பான மேல் மண், பலமான காற்று மழை போன்றவற்றினால் அகற்றப்பட்டு விட்டதனால், நிலம் தன் உற்பத்தித் திறனை வெகுவாக இழந்து விட்டிருந்தது.

இதைப் போன்ற காரணங்களினால் விவசாயிகள் தங்களுடைய கடினமான உழைப்புக்குத் தகுந்த ஊதியத்தைப் பெற முடியாமல் மிகவும் அவலமாக வாழ்ந்து வந்தனர்.

விவசாயிகளின் உற்பத்தியைப் பெருக்கி அவர்கள் சவுகரியங்கள் நிறைய வாழ்க்கை வாழ கார்வெர் அவர்களுடன் சேர்ந்து உழைப்பது என்று முடிவெடுத்தார். கார்வெர் விவசாயிகளைப் பல பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கு விவசாயம் செய்வதற்கு நிலத்தை ஒதுக்கினார். அவர்களுக்கு உழைப்பின் பெருமையை எடுத்துக் கூறினார்.

அருகிலிருந்த சதுப்பு நிலத்திலிருந்து செழிப்பான மண்ணை எடுத்து வந்து நிலங்களின் மீது பரப்பும்படி கேட்டுக் கொண்டார். அனைவரும் ஒன்று சேர்ந்து மிகவும் பாடுபட்டு உழைத்ததனால், டுஷ்ஷெகி வேளாண்மைக் கல்லூரி வளாகத்தில் இருந்த நிலத்தில் அமோகமான உற்பத்தி கிட்டியது.

கார்வெர் அங்கு இருந்த பல கிராமங்களுக்குச் சென்று விவசாயத்தில் நல்ல விளைச்சல் கிடைப்பதற்கான வழிமுறைகளை கிராம மக்களுக்கு விளக்கினார். உற்பத்தியைப் பெருக்க கிராம மக்கள் புரிந்து கொள்ளும்படியான விளக்கங்களை எழுதி அவற்றை அச்சிட்டு கிராம மக்களுக்கு வழங்கி வந்தார்.

அங்கு வாழ்ந்து வந்த மக்கள் நீண்ட காலமாக பருத்தி ஒன்றை மட்டும் பயிரிட்டு வந்தனர். பருத்திச் செடிகள் அந்த நிலத்திலிருந்த ஊட்டச்சக்தி அனைத்தையும் உறிஞ்சிவிட்டதனால் அந்த நிலத்தின் உற்பத்தித் திறன் வெகுவாக குறைந்து விட்டிருந்தது. கார்வெர் பருத்திச் செடி ஒன்றை மட்டும் பயிரிடுவதைத் தவிர்த்து, மணிலாக் கொட்டை, வேர்க்கடலை, உருளைக்கிழங்கு போன்றவற்றையும் மாற்றி மாற்றி பயிரிடும்படி அறிவுரை வழங்கினார். இப்படிச் செய்யும் போது நிலத்தில் நைட்ரேட் உப்புக்கள் அதிகமாகி விளைச்சல் பெருகும் என்று கூறினார்.

அங்கு வாழ்ந்த மக்கள் அவருடைய அறிவுரையை முதலில் கேட்கவில்லை. அவருடைய அறிவுரையைக் கேட்டு மணிலாக் கொட்டை, வேர்க்கடலை போன்றவற்றைப் பயிரிட்டவர்கள் நிறைய விளைச்சலைக் கண்டனர். கார்வெர் மணிலாக் கொட்டை, வேர்க்கடலை ஆகியவற்றைக் கொண்டு சமையல் எண்ணெய், அச்சிட உதவும் மை போன்ற 300 பொருள்களை உற்பத்தி செய்யும் வழிமுறைகளை விளக்கினார்.

உருளைக் கிழங்கைக் கொண்டு செயற்கை ரப்பர், சாலை அமைக்க உதவும் இருபதுக்கும் அதிகமான பொருள்களை உற்பத்தி செய்யும்படி கூறினார். அந்த விவசாயிகள் கார்வெரின் அறிவுரையின்படி செயல்பட்டு நிறைய விளைச்சலைக் கண்டனர். அவர்களுடைய வாழ்க்கைத் தரம் வெகுவாக உயர ஆரம்பித்தது.

கார்வெரின் புகழ் அமெரிக்க நாடு முழுவதும் பரவியது. அமெரிக்க நாட்டின் மாகாணங்கள் அனைத்தும் கார்வெரின் வழிமுறைகளைப் பின்பற்ற ஆரம்பித்தன. அமெரிக்கா உலகிலேயே மிகப் பெரிய நாடாக உருவெடுக்க கார்வெரின் ஆராய்ச்சிகள் பெரிதும் உதவின. அமெரிக்க ஜனாதிபதிகளான தியோடர் ரூஸ்வெல்ட், ப்ரேங்லின் டெலேனோ ரூஸ்வெல்ட் மற்றும் ஹென்றி போர்ட், தாமஸ் ஆல்வா எடிசன், ஸ்வீடன் நாட்டு மன்னர் போன்ற பல பிரபலமானவர்கள் வேளாண்மை புரட்சியை உருவாக்கிய நீக்ரோ இனத்தை சேர்ந்த கார்வெரை வெகுவாக பாராட்டினர்.

அடிமையாகப் பிறந்த இவரை இவருடைய எஜமானர்கள் விலங்குகளைப் போன்று நடத்தி வந்திருக்கின்றனர். அப்படியிருந்தும் இவர் அமெரிக்க மக்களின் மீது வெறுப்பையோ அல்லது கோபத்தையோ காட்டாமல் அவர்களிடம் அன்புடன் நடந்து கொண்டார்.

இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இவர் இரவும் பகலும் பாடுபட்டு உழைத்தார். பல நாடுகள் இவருக்கு அதிகச் சம்பளம் கொடுத்து பதவிகள் கொடுக்கத் தயாராகயிருந்தும், அவர் அவற்றை ஏற்க மறுத்து விட்டு ஏழை மக்களுக்கு சேவை செய்து வந்தார்.

கார்வெர் 1943-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி இறந்து விட்டார். இவர் மறைந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க அரசு இவர் பிறந்த பண்ணையை வாங்கி அவருடைய நினைவாக அங்கு ஒரு மண்டபத்தைக் கட்டி அவரை கவுரவித்தது.

அவர் வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்த, 33 ஆயிரம் டாலரை டுஷ்ஷெகி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு நன்கொடையாக கொடுத்து விட்டார். அவர் பணிபுரிந்து வந்த டுஷ்ஷெகி பாடசாலை பிற்காலத்தில் டுஷ்ஷெகி பல்கலைக் கழகமாக உருவெடுத்தது.

'வெற்றி என்பது எது?' என்று கார்வெரிடம் கேட்டபோது, 'விலையுயர்ந்த துணிமணிகளை அணிந்து கொள்ளுவதாலேயோ, சமீபத்தில் உற்பத்தி செய்யப்பட்ட விலையுயர்ந்த புது மாடல் காரில் பயணம் செய்வதாலேயோ, நிறைய பணத்தை வங்கியில் சேர்த்து வைத்திருப்பதாலேயோ, ஒருவனை வெற்றி பெற்றவனாக கருத முடியாது. மனித இனத்திற்கு சேவை செய்து வருபவன்தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றவன்!'' என்று கார்வெர் கூறினார்.

(-முற்றும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us