PUBLISHED ON : அக் 19, 2012
ஒரு கிராமத்துச் சந்தையில் சாமியார் ஒருவர் தரையில் துண்டை விரித்து, அதில் அச்சடிக்கப்பட்ட இரண்டு விதமான சீட்டுக்களை விற்றுக் கொண்டிருந்தார்.
அடிக்கடி, ''ஏ பாவிகளே! இதோ பாவ மன்னிப்புச் சீட்டு. இதை வாங்கிச் சென்றால் உங்களுடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும். உடனே வாங்கிக் கொள்ளுங்கள்!'' என்று கூவிக் கொண்டிருந்தார்.
ஒருவன் சாமியாரிடம் வந்து, ''பாவ மன்னிப்புச சீட்டு என்ன விலை?'' என்று கேட்டான்.
''ஒரு சீட்டு ஒரு ரூபாய்!'' என்றார் சாமியார். உடனே ஒரு ரூபாயைக் கொடுத்து ஒரு சீட்டைப் பெற்றுக் கொண்டான்.
பிறகு வேறொரு சீட்டைக் காட்டி, ''இது என்ன? அதன் விலை என்ன?'' என்று கேட்டான் வந்த ஆசாமி,
''இந்தச் சீட்டு இனி செய்யப்போகும் பாவங்களுக்கு மன்னிப்புச் சீட்டு. அதன் விலை இரண்டு ரூபாய்,'' என்றார் சாமியார்.
இரண்டு ரூபாய் கொடுத்து அதையும் வாங்கி மடியில் வைத்துக் கொண்டான். உடனே சாமியாரிடம் இருந்த ரூபாய்களை எல்லாம் தட்டிப் பறித்துக் கொண்டான் அவன்.
''அடப்பாவி சண்டாளா! இது என்ன அடாவடித்தனமான வேலை!'' என்று கத்த ஆரம்பித்து விட்டார் சாமியார்.
''சாமியாரே! ஏன் கத்துகிறாய். இதோ பாவ மன்னிப்பு சீட்டு!'' என்று கூறி இரண்டாவது சீட்டை அவர் முன்னே காட்டினான்.
சீட்டு வியாபாரி தன்னையே நொந்து கொண்டதோடு, தன்னுடைய தவறை முதன் முறையாக உணர்ந்தார்.
***
